செலவழிப்பு மற்றும் வருமானத்தின் அதிகரிப்பு கட்டுரை

செலவழிப்பு மற்றும் வருமானத்தின் அதிகரிப்பு

இந்த பதிவில் “செலவழிப்பு மற்றும் வருமானத்தின் அதிகரிப்பு கட்டுரை” பதிவை காணலாம்.

வரவும், செலவும் செல்வச் செழிப்பில் இரு முக்கிய நிர்வாக அம்சங்கள். வரவைக் கூட்டுதலும், செலவைக் குறைத்தலும் அவசியமானது.

செலவழிப்பு மற்றும் வருமானத்தின் அதிகரிப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. வருமான அதிகரிப்பின் முக்கியத்துவம்
  3. ஆடம்பரச் செலவு
  4. சேமிப்பின் அவசியம்
  5. சேமிப்பை அதிகரிக்கும் வழிமுறைகள்
  6. முடிவுரை

முன்னுரை

நுகர்வு என்பது மனித வாழ்க்கையில் இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. அதனால் மனித வாழ்க்கையில் அன்றாடம் ஏதோ ஒரு வகையில் செலவு செய்வது இயல்பான ஒன்றாக உள்ளது.

ஆனால் வருமானத்தை அதிகரிப்பது என்பது எல்லோராலும் எளிதில் மேற்கொள்ள முடிவதில்லை. வரவும், செலவும் செல்வச் செழிப்பில் இரு முக்கிய நிர்வாக அம்சங்கள். வரவைக் கூட்டுதலும், செலவைக் குறைத்தலும் அவசியமானவை என்பது எல்லாருக்கும் தெரியும்.

வாழ்வை வளமாக்க சேமிப்பு எவ்வளவு அவசியமோ அதுபோல் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதும் அவசியமாகின்றது. செலவழிப்பு மற்றும் வருமானத்தின் அதிகரிப்பு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

வருமான அதிகரிப்பின் முக்கியத்துவம்

எல்லாக் காலங்களிலும் செலவு பெருகிக் கொண்டே செல்பவை. பல செலவுகள் எதிர்பாராதவை, கட்டுப்படுத்த முடியாதவை. இதனால் தான், பண நெருக்கடி ஏற்படுகிறது.

ஆகவே வரவைக்கூட்டுவதற்கு செய்யும் உழைப்பை போல, செலவைக் கட்டுப்படுத்துவதிலும் முனைப்பு காட்டுவது அவசியமாகின்றது.

அவசர தேவைகளின் போதும் பண பற்றாக்குறை ஏற்படும் போதும் ஏந்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வருமானத்தை அதிகரிப்பது அவசியமாகின்றது. எதிர்காலம் நலமாக அமைய வருமானத்தை அதிகரித்து செல்வது முக்கியம்.

ஆடம்பரச் செலவு

‘அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல் இல்லாகித் தோன்றாக் கெடும்’ வரவுக்குள் செலவை அடக்கி வாழாதவர் வாழ்க்கை செழிப்புடையது போலத் தோன்றி பின்னர் அழிந்து விடும்.

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் செலவு என்பது எவ்வாறு தவிர்க்க முடியாத ஒன்றாகியதோ அதேபோல ஆடம்பரச் செலவுகளும் அதிகமாகவே செய்யப்படுகின்றன.

தேவையில்லாத பொருட்களை வாங்குவதற்காக ஷாப்பிங் மாலில் பல மணி நேரங்களைச் செலவு செய்கின்றனர். வீட்டில் உணவுகளை உண்ணாது கடைகளில் பணத்தைச் செலவிடுகின்றனர். இவற்றைக் குறைத்துக் கொள்வது நன்று.

சேமிப்பின் அவசியம்

சிறு துளி பெரு வெள்ளம் என பெரியவர்கள் கூறுவது உண்டு. வருவாயில் 10 சதவீதத்தை கண்டிப்பாக சேமித்தல் வேண்டும். சேமிப்பை ஓர் செலவாக கருதி சேமிக்க வேண்டும்.

வீட்டுக்குள் வரவு, செலவு திட்டம் வகுக்க வேண்டும். சிறுக சிறுக சேமிக்கும் பணம் ஒரு நாள் பெரும் தொகையாக அதிகரித்து குடும்ப அத்தியாவசிய தேவைக்கு உதவும்.

சேமிப்பிற்கு சிக்கனமாக இருத்தல் அவசியம். சேமித்தால் மட்டும் இன்றைய காலகட்டத்திற்கு போதாது. சேமித்த பணத்தை தகுந்த முதலீடு செய்வது மிக அவசியம்.

சேமிப்பை அதிகரிக்கும் வழிமுறைகள்

சேமிப்புடன் கூடிய வருமானத்தை அதிகரிப்பது முக்கியமாகின்றது. இதற்கு செலவுகளை குறைக்க வேண்டும். முதலீடு செய்வதற்கான தெளிவான முன்யோசனை இருக்க வேண்டும்.

எதில் முதலீடு செய்கிறோம் என்று முடிவெடுத்துவிட்டால், தவறாமல் அந்த திட்டத்தில் முதலீடு செய்து கொண்டே இருக்க வேண்டும்.

அதில் கிடைக்கும் வருவாயை சிறுசிறு முதலீடுகளில் மறு முதலீடு செய்து வருவாயை பெருக்க வேண்டும். வருவாயை சரியாக பிரித்து அதற்கேற்ப முதலீடுகளையும் செலவுகளையும் செய்ய வேண்டும்.

முடிவுரை

நாம் சேமிக்கும் சிறுபணமானது இன்றைய விலைவாசிக்கு இணையாக ஒப்பிடும்போது மிக சொற்பமாக உள்ளது. எனவே வருமானத்தை அதிகரிப்பதற்கான தேவையை உணர்ந்து செயற்பட வேண்டும்.

ஒவ்வொரு நாணயமும் அதன் மதிப்பை எப்போதும் இழப்பதில்லை. எனவே தேவைக்காக செலவழிக்கும் அதேநேரம் வருமானத்தையும் அதிகரிப்பதற்கான வழிமுறைகளைக் கையாளும்போது வாழ்வில் ஏற்படும் சிக்கலான சூழ்நிலைகளைச் சமாளிக்க கூடியதாக இருக்கும்.

You May Also Like:
இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு
சிக்கனமும் சிறுசேமிப்பும் கட்டுரை