சுற்றுலா வளர்ச்சி பற்றிய கட்டுரை

Sutrula Katturai In Tamil

இந்த பதிவில் “சுற்றுலா வளர்ச்சி பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

வாழ்வில் உண்டாகும் அழுத்தங்களில் இருந்து விடுபட சுற்றுலா என்பது பெரிய விடுதலையாக மனிதனுக்கு அமையும் என்பதில் துளியளவும் ஐயமில்லை

சுற்றுலா வளர்ச்சி பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சுற்றுலா என்பது
  3. மக்கள் மத்தியில் சுற்றுலாவின் அவசியம்
  4. சுற்றுலாக்களின் அர்த்தம்
  5. சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்
  6. இந்தியாவில் சுற்றுலா வளர்ச்சி
  7. முடிவுரை

முன்னுரை

இந்த வாழ்க்கையும் இந்த அழகான உலகமும் வியப்புக்களும் அதிசயங்களும் நிறைந்தவை. இந்த உலகத்தில் உள்ள புதுமைகளையும் அதிசயங்களையும் பார்த்து ரசிப்பது மனித வாழ்வின் வரப்பிரசாதமாகும்.

கிணற்று தவளைகளாகவும் தேங்கிய குட்டை நீர் போலவும் வாழ்வது அர்த்தமற்றது. ஓடுகின்ற நீரை போல புதிய புதிய விடயங்களை தேடி ஒடுவது தான் வாழ்வின் இரசனையை அதிகரிப்பதாக இருக்கும்.

சுற்றுலா என்ற விடயம் அதனை தான் மனிதனுக்கு அளிக்கின்றது. இக்கட்டுரையில் சுற்றுலா என்கின்ற துறை என்றால் என்ன அதன் அவசியம் மற்றும் வளர்ச்சி பற்றி நோக்கலாம்.

சுற்றுலா என்பது

மனிதன் தனக்கு கிடைக்கின்ற ஓய்வு நேரங்களில் தான் வாழ்கின்ற சொந்த வாழ்விடங்களில் இருந்து வெளி இடங்களுக்கு அல்லது வெளி நாடுகளுக்கு சென்று அங்குள்ள இயற்கை சூழலை இரசிக்கவும் புதிய விடயங்களை தேடி சென்று பார்க்கவும் தனது வாழ்வின் ஒரு பகுதியை செலவிடுவதை தான் சுற்றுலா என்று அழைப்பார்கள்.

சுற்றுலா செல்லும் போது தனியாகவோ அல்லது குழுவாகவோ செல்வார்கள். இதன் மூலம் மனிதன் புத்துணர்வு அடைந்து கொள்ள முடியும்.

மக்கள் மத்தியில் சுற்றுலாக்களின் அவசியம்

இன்று மனித வாழ்க்கை வெகுவாக மாறி விட்டது. வாழ்வின் அதிகளவான காலம் பணத்தின் பின்னால் மனிதன் ஓட வேண்டியதாக உள்ளது.

வாழ்க்கையில் சுமைகள் சோகங்கள் என பல அழுத்தங்களோடு மனிதன் ஓடிக் கொண்டிருப்பதனால் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை மக்களுக்கு வாழ்வில் விரக்தியை உண்டாக்கி விடும்.

இதனால் தான் இந்த அழுத்தங்களில் இருந்து விடுபட சுற்றுலா என்பது பெரிய விடுதலையாக மனிதனுக்கு அமையும் என்பதில் துளியளவும் ஐயமில்லை உலகமெங்கும் ஏராளமான மக்கள் சுற்றுலா செல்வதை அதிகம் விரும்புகின்றனர்.

சுற்றுலாக்களின் அர்த்தம்

நிலையற்ற மனிதர்களது வாழ்வு அந்த வாழ்நாளில் ஆயிரம் பிரச்சனைகள், போட்டிகள் பழிவாங்கும் படலங்கள், ஏமாற்றங்கள், துரோகங்கள் என்று மனிதர்கள் நிலையில்லாத வாழ்வில் முட்டாள் தனமாக சண்டையிட்டு கொண்டிருக்கிறார்கள்.

இந்த உலகின் பொருட்களுக்கு உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்தும் வீணாகும். இறக்கும் போது யாரும் ஒரு பிடி மண்ணையும் கொண்டு செல்ல முடியாது. வாழ்கின்ற காலத்தில் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் மனிதன் வாழ வேண்டும்.

அப்பிள் என்ற உலகப்புகழ் பெற்ற தொலைபேசி நிறுவனத்தின் உருவாக்குனர் ஸ்டீவ் ஜாப்ஸ் இறக்கும் தருவாயில் கூறியவை

“வாழ்வில் ஒவ்வொரு தருணத்தையும் நிலையற்றவற்றுக்காக செலவழிக்காது வாழ்க்கையினை அனுபவித்து வாழ வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன்” என உருக்கமாக எழுதி இருப்பார். எனவே இவ்வாறான சுற்றுலாக்கள் எமது வாழ்வை அர்த்தமடைய செய்வதாக அமையும்.

சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்

இந்த உலகில் எவ்வளவோ இயற்கை அழகு நிறைந்த இடங்கள் இருக்கின்றன. அழகிய பசுமை நிறைந்த காடுகள், அழகாக வளைந்து ஓடும் நதிகள், சலசலத்து விழும் அருவிகள், நீர்வீழ்ச்சிகள், நீண்டு பரந்து கிடக்கின்ற சமுத்திரங்கள்,

வெண்மணல் நிறைந்த கடற்கரைகள், அழகியல் நிறைந்த வழிபாட்டு தலங்கள், அழகான நகரங்கள், பூங்காக்கள் என்று இந்த உலகில் நாம் சென்று பார்த்து விட வேண்டிய இடங்கள் ஏராளமாக இருக்கின்றன.

இந்தியாவில் சுற்றுலா வளர்ச்சி

இந்தியா கலைகளின் சுவர்க்க பூமி ஆகும். இமையமும் மேற்கு தொடர்சி மலைகளும் ஏழு புனித நதிகளும் அழகான கடற்கரைகரைகளும் நிறைந்த அழகான தேசமாகும்.

இந்தியாவை பார்வையிட வெளிநாட்டவர்கள் அதிகளவாக இந்தியாவிற்கு வருகின்றனர். இந்தியா முழுவதும் கலைப்படைப்புக்களை வெளிப்படுத்தும் ஆலயங்கள், கட்டடங்கள், மக்களின் அழகான கலாச்சாரம் மற்றும் சுவை நிறைந்த இந்திய உணவு கலாச்சாரம் போன்றவை அனைவரையும் ஈர்க்கின்றது.

இவ்வாறு பல விடயங்களால் ஈர்க்கப்பட்டு அதிகளவான சுற்றுலா பயணிகள் வருவதனால் அந்நிய செலாவணியும் அதிகம் கிடைக்கின்றது. போக்குவரத்து துறை சிறப்பாக இன்று வளர்ச்சி அடைந்துள்ளமையால் சுற்றுலாத்துறை வளர்ச்சி அடைய பெரிதும் உதவுகின்றது.

முடிவுரை

எப்போதும் மனிதர்கள் அற்புதமான விடயங்களில் தேடல் உள்ளவர்களாக இருப்பதனால் உலகமெங்கிலும் சுற்றுலாத்துறை வளர்ச்சி அடைந்து செல்கின்றது.

வாழ்க்கை முடிவதற்கு முன்னர் நாமும் சென்று பார்த்து விட வேண்டிய இடங்கள் இந்த உலகில் அதிகளவில் காணப்படுகின்றன.

“அடையாளம் தான் துறப்போம் எல்லா தேசத்திலும் போய் வசிப்போம் கூட்டை தான் தாண்டா விட்டால் வண்ணத்து பூச்சி இல்லை அது போல வீட்டை நாம் தாண்டா விட்டால் வானமே இல்லை” என்பதனை போல இந்த அழகான உலகை கண்டு மகிழ வேண்டும்.

You May Also Like :

காற்று மாசுபாடு பற்றி தமிழ் கட்டுரை

தஞ்சை பெரிய கோவில் பற்றிய கட்டுரை