இயற்கை பேரிடர் பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரை

Iyarkai Peridar Katturai In Tamil

இந்த பதிவில் “இயற்கை பேரிடர் பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரை” பதிவை காணலாம்.

இந்த உலகம் பல இயற்கையின் கோர தாண்டவங்களை கண்டுள்ளன. இயற்கையின் சீற்றத்தை கட்டுப்படுத்தும் வல்லமை இல்லா விட்டாலும்

இயற்கையை நேசித்து இயற்கையோடு ஒன்றி வாழும் போது இயற்கையும் உலகிற்கு தனது பல கொடைகளை தரும்.

  • இயற்கை பேரிடர் பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரை
  • Iyarkai Peridar Katturai In Tamil
உலக வெப்பமயமாதல் கட்டுரை

இயற்கை பேரிடர் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. இயற்கைப் பேரிடர்கள்
  3. பேரிடர்களின் தோற்றம்
  4. பேரிடர் முகாமைத்துவம்
  5. சுய பாதுகாப்பு நடவடிக்கைகள்
  6. முடிவுரை

முன்னுரை

இயற்கையானது மலைகள், பாலை வனங்கள் போன்ற நிலப்பரப்புக்களையும், ஆறுகள், கடல்கள், நீர்வீழ்ச்சிகள் போன்ற நீர்ப்பரப்புக்களையும் தன்னகத்தே கொண்டது. இவ் இயற்கை வழமைக்கு மாறாக தொழிற்படுகின்ற போது தடுக்க முடியாத பல அனர்த்தங்களை தோற்றுவிக்கின்றன.

அன்றாடம் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் உலகெங்கிலும் நடைபெறும் பல்வேறு இயற்கை பேரிடர்களைப் பற்றிய விடயங்களை கேள்விப்படுகின்றோம்.

அண்மைக் காலத்தில் கூட அவுஸ்ரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் பல்லாயிரக்கணக்கான வனவிலங்குகள் எரிந்து சாம்பலாகிய சம்பவம் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

உலகின் மிகப்பெரிய விலங்கினமாக கருதப்படுகின்ற டைனோசர்கள் இயற்கையில் ஏற்பபட்ட காலநிலை மாற்றத்தாலே முற்றாக அழிவுற்றாகக் கருதப்படுகின்றது.

இவ்வாறு அன்று தொடக்கம் இன்றுவரை காலம் காலமாக இயற்கை பேரிடர்கள் ஏற்பட்ட வண்ணமே உள்ளன.

இக்கட்டுரையில் இயற்கை பேரிடர் பற்றியும் அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்வது பற்றியும் காணலாம்.

இயற்கை பேரிடா்கள்

இயற்கை பேரிடர் எனப்படுவது இயற்கைக்கும் ஏனைய உயிர்களிற்கும் பெரியளவிலான பாதிப்புக்களை ஏற்படுத்தும், இயற்கையாகவே நிகழும் பேரனர்த்தங்களாகும். இவை பொருளாதார ரீதியாகவும், உடலியல் ரீதியாகவும் கணக்கிட முடியா சேதங்களை ஏற்படுத்தவல்லன.

இத்தகைய இடர்களிற்கு உதாரணமாக காட்டுத்தீ, வெள்ளப்பெருக்கு, நிலநடுக்கம், சூறாவளி, வறட்சி, எரிமலை வெடிப்பு, சுனாமி, பனிச்சரிவுகள்,மண்சரிவு மற்றும் எதிர்பாராமல் நிகழ்கின்ற காலநிலை மாற்றங்கள் போன்றனவற்றை குறிப்பிடலாம்.

சுனாமி, சூறாவளி போன்றவற்றை ஓரளவு முன்னறியக் கூடியதாக இருப்பதுடன், பல சமயங்களில் நினைத்து பார்க்க முடியா சேதங்களை ஏற்படுத்துகின்றன. 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி இயற்கையின் கோரத்தாண்டவத்திற்கு மிகச்சிறந்த உதாரணம்.

பல்லாயிரக்கணக்கான உயிர்கள் மாண்டதோடு, இந்த அழிவிலிருந்து மீள்வதற்கே ஆண்டுகள் பல ஆகின. வறட்சி ஏற்படும் போது பல ஏக்கர் கணக்கான விவசாய நிலங்கள் வறண்டு தரிசு நிலங்களாக மாற்றமடைந்து உணவு மற்றும் நீர்ப்பஞ்சங்கள் தோற்றம் பெறுகின்றன.

பேரிடர்களின் தோற்றம்

பேரிடர்களானவை இயற்கையின் தோற்றப்பாடுகளில் ஏற்படும் மாறுதல்களினாலே பெரும்பாலும் தோற்றம் பெறுகின்றன.

கடலிற்கடியில் ஏற்படும் நிலநடுக்கத்தினால் நீர் மேலெழுந்து பெரும் அலைகளாக உருமாறி, பெருவிசைகளால் உந்தப்பட்டு நிலப்பரப்புக்களை ஆக்கிரமித்தல் “சுனாமி” என அழைக்கப்படுகின்றது.

நிலநடுக்கமானது பூமிக்கடியில் காணப்படும் தளத்தட்டுக்களானவை நகர்வதனால் ஏற்படும் அதிர்வினாலே தோற்றம் பெறுகின்றது. இவ்வாறு நிலநடுக்கங்கள் தோன்றும் போது மண்சரிவுகள் உருவாகின்றன.

இயற்கையில் அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடிய சூறாவளியானது வளிமண்டலத்தில் ஏற்படுகின்ற தாழமுக்க நிலமையினால் உருவாகின்றது. இவை இடியுடன் கூடிய கனமழை, வெள்ளப்பெருக்கு போன்றனவற்றை தோற்றுவிக்கின்றன.

பேரிடர் முகாமைத்துவம்

இயற்கை இடர்களை மனிதனால் கட்டுப்படுத்த முடியாத போதும் இடரை சரிவர முகாமைத்துவம் செய்யும் போது அதனால் ஏற்படுகினற் பாதிப்புக்களைக் குறைத்து கொள்ளமுடியும்.

ஓவ்வொரு நாடுகளிலும் அமைந்துள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் ஊடாக ராடர்கள் மூலம் காலநிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள் அவதானிக்கப்பட்டு அதன் மூலமே இடர்கள் எதிர்வு கூறப்படுகின்றன.

இவ்வாறு முன்னறியப்பட்ட தகவல்கள் பல்வேறு தொடர்பாடல் வழி முறைகளினூடாக மக்களிற்கு தெரியப்படுத்தப்படுகின்றன. அத்துடன் இடர் அபாய வலயங்களாக கருதப்படும் பிரதேசங்களில் வசிக்கின்ற மக்கள் பாதுகாப்பான இடங்களிற்கு அனுப்பப்படுவதோடு இடர்களால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உடனடி நிவாரணங்களும் வழங்கி வைக்கப்படுகின்றன.

இவ்வாறு இயற்கை இடர்களானவை அரசாங்கத்தால் முகாமைத்துவம் செய்யப்படுகின்றன.

சுயபாதுகாப்பு நடவடிக்கைகள்

இயற்கைப் பேரிடர்கள் முன்னறியப்படும் போது அவை தொடர்பாக மக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.அவை தவிர நாம் சுயமாகவே சில இயற்கை ஆபத்துக்களில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

உதாரணமாக மழை பெய்கின்ற போது இடியுடன் கூடிய மின்னல் தோன்றுவது வழமை. உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் இடி மின்னலில் இருந்து பாதுகாப்பு பெற பல்வேறு வழிமுறைகள் காணப்படுகின்றன.

இடியுடன் மின்னல் தோன்றும் போது திறந்த வெளிகள் மற்றும் உயரமான மரங்களின் கீழ் நிற்பதனை தவிர்த்தல் வேண்டும். அத்துடன் மின்சார உபகரணங்கள் மற்றும் கைத்தொலைபேசிப் பாவனையை அறவே குறைக்கவேண்டும்.

இரும்புப்பாலங்கள், தண்டவாளங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கோபுரங்களிற்கு அண்மையில் நிற்பதனைத்தவிர்க்க வேண்டும்.

நிலநடுக்கம் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் கட்டங்களினுள்ளே இருப்பதனைத் தவிர்த்து வெட்ட வெளியான இடங்களை நோக்கி நகர வேண்டும்.

பேரிடர் அபாயவலயங்கள் அறிவிக்கப்பட்டவுடன் அந்த இடங்களில் வசிக்கும் மக்கள் அவற்றை விட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி உடனடியாக நகரவேண்டும். காலநிலை மாற்றங்கள் தென்படுகின்ற சந்தர்ப்பங்களில் நெடுந்தூர வாகனப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு சுயபாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் சில இடர்களிலிருந்து பாதுகாப்பு பெற முடியும்.

முடிவுரை

பல்வேறு உயிர்களின் அழிவுக்கு காரணமாகவுள்ள இயற்கைப் பேரிடர்கள் தடுத்து நிறுத்தப்பட முடியாதவை. அதனால் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். இதற்கு பிரதானமான காரணமாக அமைவது மக்களின் கவனயீனமான செயற்பாடுகளே.

பேரிடர் எச்சரிக்கை கிடைத்தவுடன் அதனை கவனத்தில் கொள்ளாமல் விடுதலே பேரழிவுகளை ஏற்படுத்துகின்றன.

எனவே காலநிலையில் ஏற்படும் மாற்றங்களை சரிவர அவதானித்து இயற்கைப் பேரிடர்களிலிருந்து எம்மைப் பாதுகாத்து நலமுடன் வாழ்வோமாக.

You May Also Like :

இயற்கையை பாதுகாப்போம் கட்டுரை

ஐம்பூதங்கள் பற்றி கட்டுரை