சிலேடை அணிகலானவை மேடைப் பேச்சுக்களிலும், உரை நடைகளிலும், செய்யுள்களிலும் பயன்படுத்தக் கூடியனவாக அமைகின்றன.
Table of Contents
சிலேடை அணி என்றால் என்ன
சிலேடை அணி என்பது ஒரு செய்யுளில் இடம் பெறும் சொற்றொடரானது பல வகையான பொருள்களில் இடம் பெறுமாயின் அது சிலேடை அணி ஆகும். இரட்டுர மொழிதல் எனவும் இதனை அழைப்பர். ஒரு சொல் அல்லது சொற்றொடர் பல பொருள்களில் அமைவது சிலேடை அணியாகும்.
கவிஞர்கள் தாம் பாடுகின்ற பாடல்களில் ஒரு பொருளையே அமைத்து பாடுவர். சில சந்தர்ப்பங்களில் ஒரே பாடலில் இரு வேறு பொருள் அமையுமாறும் பாடுவர். இவ்வாறாக ஒரு சொல் பல பொருள் உணர்த்தும் சொற்களை கொண்டு இரு வேறுபட்ட பொருள்களில் பாடல்கள் பாடப்பட்டதன் விளைவாகவே சிலேடை அணியானது தோன்றியது.
சிலேடை அணியின் வகைகள்
சிலேடை அணியானது செம்மொழி சிலேடை, பிரிமொழி சிலேடை என இரு வகையாக காணப்படுகின்றது.
செம்மொழி சிலேடை
செம்மொழி சிலேடை என்பது சொற்றொடரில் உள்ள சொற்களானவை பிரிக்கப்படாமல் அப்படியே நின்று பல பொருள் தருவது செம்மொழி சிலேடையாகும்.
எடுத்துக்காட்டு:
செங்கரங்க ளான் இரவு நீக்கும் திறம் புரிந்து
பங்கய மாதர் நலம் பயிலப் – பொங்கு உதயத்து
ஓர் ஆழி வெய்யோன் உயர்ந்த நெறி ஒழுகும்
நீர் ஆழி நீள் நிலத்து மேல்
மேலுள்ள பாடலானது சூரியனுக்கும் சோழனுக்கும் சிலேடையாக பாடப்பட்ட பாடலாகும். இப் பாடலானது சூரியனோடு பொருத்தி பார்க்கும் போது ஒரு பொருளையும் சோழனோடு பொருத்தி பார்க்கும் போது வேறு பொருளையும் தருகின்றது.
விளக்கம்: கடல் சூழ்ந்த புவி மீது சூரியனானவன் தனது சிவந்த கதிர்களால் இருளை போக்கும் திறன் மிக்கவன். தாமரை மலர்களை காதலிக்கும் அழகு உண்டாக மேல் நோக்கி வளரும் தோற்றத்தை உடையவன் ஆவான். ஒற்றை சக்கரத்தை உடைய தேரில் உயர்ந்த வான வெளியில் வலம் வருபவனாகவும் சூரியனை பற்றி இப்பாடல் வரியானது விளக்குகின்றது.
மற்றுமொரு பொருளானது சோழ மன்னனை பற்றி குறிப்பிடுகின்றது. அதாவது கடல் சூழ்ந்த புவி மீது சோழனானவன் தன்னுடைய சிவந்த கைகளால் உலகில் உள்ளவர்களுடைய வறுமையை போக்கும் திறன் மிக்கவனாகவும் தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளின் செல்வம் பெருக மேம்படும் பொருள் வருவாயை உடையவனாகவும் உலகத்தவரால் விரும்பப்படக் கூடிய இயல்புடையவனும் ஆவான். மேலும் சான்றோர் வகுத்த உயர்ந்த ஒழுக்க நெறியில் நடப்பவன் ஆவான் என இரு வேறு பொருள்களை உணர்த்தி நிற்கின்றது.
இப்பாடலில் உள்ள சொற்களானவை பிரிக்கப்படாமல் அப்படியே நின்று இரு வேறு பொருள் தருவதாக அமைந்தமையினால் இதனை செம்மொழி சிலேடையாக கருத முடியும்.
பிரிமொழிச் சிலேடை
பிரிமொழிச் சிலேடை என்பது ஒரு சொற்றொடரில் உள்ள சொல்லை வேறு வேறு வகையாக பிரித்து பல பொருள் கொள்வது பிரிமொழிச் சிலேடை ஆகும்.
எடுத்துக்காட்டு:
தள்ளா விடத்தேர் தடந் தாமரையடைய
எள்ளா அரிமா னிடர்மிகுப்ப – உள் வாழ்தேம்
சிந்தும் தகைமைத் தே எங்கோன் திருவுள்ளம்
நந்தும் தொழில் புரிந்தார் நாடு
இப்பாடலடியானது சோழனை பகையாதவர் நாட்டிற்கும் பகைத்தவர் நாட்டிற்கும் சிலேடையாக பாடப்பட்டுள்ளது.
விளக்கம்: அழகு கெடாத விளை நிலங்களில் உளதாகிய பகட்டோர் (உழுகின்ற எருது) பெரிய தாமரை மலரை பொருந்தி கொள்ளவும் இகழப்படாத நெற் கதிர்களை உழவர்கள் திரட்டவும், அத்தாமரை மலரில் உள்ளதாகிய தேன் பொழியும் பெருமை உடையது. எம் அரசனாகிய சோழனுடைய திருவுள்ளம் விரும்பும் படி நடந்தோருடைய நாடு என சோழனை பகையாதவர் நாட்டின் மேல் இப்பாடலானது பாடப்பட்டுள்ளதாக பொருள் தருகின்றது.
மற்றுமொரு பொருளாக சோழனை பகைத்த நாடு பற்றியதாகவும் விளக்குகின்றது.
Read More: உவமை அணி என்றால் என்ன