கல்வியின் சிறப்பு கட்டுரை

Kalviyin Sirappu Katturai In Tamil

இந்த பதிவில் “கல்வியின் சிறப்பு கட்டுரை” பதிவை காணலாம்.

எம்மையும் இந்த உலகத்தையும் மாற்றி நல்வழியில் இட்டு செல்லக்கூடிய பெரும் சிறப்பு கல்விக்கு இருக்கிறது.

கல்வியின் சிறப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. கல்வியின் அவசியம்
  3. கற்றோரின் பெருமைகள்
  4. கற்றதன் பயன்
  5. கல்லாமையின் விளைவு
  6. அழியாத செல்வம்
  7. முடிவுரை

முன்னுரை

“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்று பிற” என்கிறார் பொய்யாமொழி புலவர். அதாவது உலகத்தில் மனிதர்களுக்கு கல்வி தான் சிறந்த செல்வம் ஏனைய செல்வங்கள் இதற்கு இணையாக மாட்டாது என்பது இதன் பொருள்.

இதுவே கல்வியின் சிறப்பை தெளிவாக எடுத்து காட்டுகின்றது. ஏனைய செல்வங்கள் நிலையில்லாதவை அவை எமக்குள் அறியாமையை உருவாக்கி விடும் ஆனால் கல்வியோ அழிவில்லாத செல்வமாய் அறிவொளியை உண்டாக்குகின்றது.

எனவே நாம் அழிவில்லாத செல்வத்தை அடைந்து கொள்ள முயற்சி உடையவர்களாக இருக்க வேண்டும். இக்கட்டுரையில் கல்வியின் சிறப்புக்கள் பற்றி நோக்கப்படுகிறது.

கல்வியின் அவசியம்

மனித வாழ்க்கையில் உயர்வான எண்ணங்களும் உன்னதமான குணங்களும் எம்முள் தோன்ற வேண்டுமாயின் கல்வி என்பது அவசியம். வாழ்க்கை என்ற வீட்டில் கல்வி என்ற விளக்கு ஏற்றப்பட்டால் தான் எமது வாழ்வானது பிரகாசிக்கும்.

இதுவே பிற விலங்குகளிடம் இருந்து மனிதர்களை வேறுபடுத்தி காட்டுகிறது. இதனையே திருவள்ளுவர் பின்வருமாறு கூறுகிறார்.

“விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனையவர்”

கல்வி தான் ஒரு மனிதனது அறிவு கண்களை திறக்கின்றது. பகுத்தறிவை உருவாக்கி அவனை வழிநடாத்துகின்றது. எனவே கல்வி மிக அவசியமாகும்.

கற்றோரின் பெருமைகள்

கல்வி அறிவில் சிறந்தவர்கள் ஒரு சமூகத்தில் உயர்வாக மதிக்கப்படுவார்கள். ஒரு செல்வந்தன் கால சூழ்நிலையால் ஏழையாகலாம் ஆனால் கல்வி அறிவுடையவன் அவ்வாறு இல்லை தனது நிலையை மேலும் உயர்த்தி கொள்வான்.

இதனை ஒளவையார் கூறுகையில் “மன்னனும் மாசற கற்றோனும் சீர்தூக்கின் மன்னனில் கற்றோன் சிறப்புடையன் மன்னற்குத் தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு” என்று கற்றவர்களின் பெருமையை பாடுகிறார்.

நாட்டின் அரசனையே வழிநடாத்தும் அமைச்சர் சிறந்த கல்வி அறிவுடையவராகவே இருப்பர். உயர்பதவிகள் பொறுப்புக்கள் கல்வி அறிவுடையவர்களுக்கே சாத்தியமாகும் ஆகவே கல்வி ஒரு மனிதனை எப்போதும் மேன்மை அடைய செய்யும்.

கற்றதன் பயன்

நாம் பெற்று கொள்கின்ற பயன் எமக்கு மட்டும் பயன்படுவதாய் இருக்க கூடாது. அந்த கல்வி இந்த சமூகத்துக்கும் நாட்டுக்கும் பயன்படும் வகையில் நாம் சேவையாற்ற வேண்டும்.

அறியாமையில் இருப்பவர்களுக்கு நாம் எமது கல்வி அறிவினால் உதவி செய்ய முடியும் நல்ல எண்ணங்களும் சிறந்த செயல்களையும் செய்ய வேண்டும் அதுவே கல்வியின் பயனாகும்.

இதனை திருவள்ளுவர் “கற்றவை கற்றபின் நிற்க அதற்கு தக” என்று வலியுறுத்துகிறார். கற்ற கல்வியின் படி நாம் ஒழுகுவதே கற்ற கல்வியின் பயனாகும்.

கல்லாமையின் விளைவு

கல்வி அறிவினை பெற விளையாதவர்களை திருவள்ளுவர் விலங்குகள் என்று குறிப்பிடுகின்றார். கல்வி அறிவு இல்லாதவர்கள் மனித பண்புகள் இன்றி தவறான வழிகளில் செல்வார்கள்.

அது அவர்களது அழிவுக்கு வழிவகுக்கும் கல்வி கண்போன்றது. கற்காமல் விடுவது இரு கண் இன்றி வாழ்வதனை போன்று அமைந்துவிடும்.

இதனை திருவள்ளுவர் “கண்ணுடையோர் என்போல் கற்றோர் கல்லாதோர் முகத்திரண்டு புண்ணுடையர்” என்று கல்லாதவர்களை பார்வையிழந்தவர்களாக சுட்டிக்காட்டுவதனூடாக கற்காமையின் பாதகத்தை எடுத்து காட்டுகிறார்.

அழியாத செல்வம்

கல்வி ஏனைய செல்வங்களை விடவும் சிறப்புடைய செல்வமாக காணப்படுவதற்கு காரணம் அது “வெள்ளத்தால் அழியாது வெந்தழலால் வேகாது வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் நிறைவன்றி குறைவுறாது” என அழியாத செல்வமாகும்.

எனவே நாம் எப்போதும் நிலையான செல்வத்தை அடைந்து கொள்ள ஆவலாக இருக்க வேண்டும். “பெற்ற பிள்ளை கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது” என்றார் மகாத்மா காந்தி அடிகள் ஆகவே அழியா சிறப்புடைய கல்வியின் சிறப்பை நாம் அனைவரும் உணர வேண்டும்.

முடிவுரை

இந்த உலகையே மாற்றக்கூடிய ஒரு பலமான ஆயுதம் உண்டு அது தான் கல்வி என்கிறார் தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த தலைவர் “நெல்சன் மண்டேலா”.

எம்மையும் இந்த உலகத்தையும் மாற்றி நல்வழியில் இட்டு செல்லக்கூடிய பெரும் சிறப்பு கல்விக்கு இருக்கிறது.

படிப்பால் மட்டுமே பாரதத்தை பாராள செய்யலாம் என்ற “டாக்டர் அப்துல் கலாமின்” வார்த்தைகளை போல நாமும் கல்வியின் அவசியத்தை உணர்ந்து கற்று மேன்மை அடைந்து கொள்ள வேண்டும்.

You May Also Like :

எனது கனவு பள்ளி கட்டுரை

வாய்மையே வெல்லும் கட்டுரை