இந்த பதிவில் “எனது பொழுதுபோக்கு சிறுவர் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு (02) பதிவுகளை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டு காணப்படுகின்றன.
மனிதர்களிடைய நேரத்தை பயனுள்ளதாக்க பொழுதுபோக்குகள் உதவி புரிகின்றன. பல்வேறு வகையான பொழுதுபோக்குகள் காணப்படுகின்றது.
Table of Contents
எனது பொழுதுபோக்கு சிறுவர் கட்டுரை – 1
விரைவான வாழ்க்கை ஓட்டத்தைக் கொண்ட இந்த உலகில் மனிதர்களை மகிழ்வாகவும், இலகுவாகவும் வைத்திருப்பதில் பொழுது போக்குகளிற்கு முக்கிய இடம் உண்டு.
அதில் புத்தகம் படித்தல், தோட்டம் செய்தல், முத்திரை சேகரித்தல், படம் வரைதல் மற்றும் தொலைக்காட்சி பார்த்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். அந்த வகையில் எனது பொழுதுபோக்கு புத்தகங்கள் வாசித்தலாகும்.
சிறுவயது முதலே நூல்களை வாசிப்பதற்கு எனது தந்தை கற்றுத் தந்திருந்தார். பிறந்த நாள் மற்றும் ஏனைய விசேட தினங்களிற்கு புத்தகங்களை அன்பளிப்பாக அளிப்பது அவரது வழமையாக இருந்தது.
புத்தகங்கள் வாசிப்பது அறிவை வளர்க்க உதவும். உலகைப் பற்றிய அறிவை பெற்றுத் தரும். பொறுமையையும் சிந்திக்கும் ஆற்றலையும் அதிகரிக்கும்.
அதிகாலையிலும், இரவு நித்திரை செய்வதற்கு முன்பும் நூல்களை வாசிப்பது வழமை அதனைத் தவிர நேரம் கிடைக்கும் போதெல்லாம் புத்தகங்களை வாசிப்பேன்.
வண்ணப்படங்களுடன் கூடிய கதைப்புத்தகங்களை வாசிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் நன்நெறி கதைகள், சிறுவர் பாடல்கள், ஆங்கில சிறுவர் கதைகள் போன்றவற்றை வாசிப்பேன்.
நான் மட்டும் வாசித்து பயன் பெறாமல், வாசித்தவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களையும் வாசிப்பு பழக்கத்திற்கு தூண்டுவேன். பொழுதுபோக்காக ஆரம்பித்த வாசிப்புப் பழக்கம் எனக்கு பல்வேறு நன்மைகளை பெற்றுத் தந்தது.
வாசிப்பின் மூலம் பெற்ற அறிவினைக் கொண்டு பாடசாலையில் இடம்பெற்ற கதை கூறும் போட்டியிலும், கட்டுரை மற்றும் பேச்சு போட்டியிலும் பங்கேற்க முடிந்தது. அதில் சிறந்த பரிசுகளையும் பெற்றுக்கொண்டேன்.
ஒவ்வொரு வாரமும் பாடசாலையில் காலை நற்சிந்தனை கூறுவதற்காக விரும்பி அழைக்கப்படுவேன். அதனால் அனைவரிற்கும் பிடித்தவனாக விளங்கினேன். எனது பொழுதுபோக்கு எனக்கும் மட்டுமல்லாது அனைவரிற்கும் உதவுவதை எண்ணி பெருமை கொள்கின்றேன்.
எனது பொழுதுபோக்கு கட்டுரை – 2
மனிதர்களிடைய நேரத்தை பயனுள்ளதாக்க பொழுதுபோக்குகள் உதவி புரிகின்றன. பல்வேறு வகையான பொழுதுபோக்குகள் காணப்படுகின்ற போதும் எனது பொழுதுபோக்கு வீட்டுத்தோட்டம் செய்தல் ஆகும்.
நான் சிறியவனாக இருப்பதனால் தனியாக என்னால் செய்ய முடியாததனால், தந்தையுடன் இணைந்து இதனை செய்து வருகின்றேன். எனது வீட்டின் பின்புறம் இந்த வீட்டுத்தோட்டம் அமைந்துள்ளது.
மரவேலிகள் அமைத்து பாதுகாக்கப்பட்ட அந்த தோட்டத்தில் பல வகையான தாவரங்கள் காணப்படுகின்றன. பாகல், கத்தரி, தக்காளி, மிளகாய் வெண்டி போன்ற காய்கறிகளும், மரவெள்ளி, இஞ்சி, இராசவள்ளி போன்ற கிழங்கு வகைகளும், வல்லாரை, பசளி, பொன்னாங்காணி போன்ற கீரைவகைகளும் காணப்படுகின்றன.
அத்துடன் மாதுளை, தோடை, ஜம்பு, வாழை போன்ற பழமரங்களும், ரோஜா, கனகாம்பரம், மல்லிகை போன்ற மலர் தாவரங்களும் காணப்படுகின்றன.
காலை வேளை நித்திரை விட்டெழுந்ததும் முதல் வேலையாக தோட்டத்தை பார்வையிடச் செல்வேன். அங்கு வரும் வண்ணத்துப் பூச்சிகளையும், ரீங்காரமிடும் வண்டுகளையும் பார்க்கும் போது மனதிற்கு இனிமையாக இருக்கும்.
மாலை வேலைகளில் பாடசாலை விட்டு வந்ததும் தோட்டத்தில் எனது மிகுதி நேரத்தை செலவழிப்பேன். எனது பொழுது போக்காக வீட்டுத்தோட்டம் செய்வது பல்வேறு நன்மைகளையும் பெற்றுத் தருகின்றது.
தண்ணீர் பாய்ச்சுதல், களை பிடுங்குதல் போன்ற சிறிய வேலைகளை செய்வது உடலிற்கு சிறந்த பயிற்சியாக அமையும்.
வீட்டுக்கு தேவையான காய்கறிகளை எனது தோட்டத்திலிருந்தே பெற்றுக் கொள்கின்றோம்.
அதுமட்டுமின்றி வார இறுதிநாட்களில் தந்தையும் தாயும் எனக்கு உதவிபுரிவதனால் நாங்கள் ஒன்றாக மகிழ்ச்சியுடன் இணைந்து இருக்க உதவி புரிகின்றது.
You May Also Like : |
---|
பள்ளியில் தூய்மை கட்டுரை |
எனக்கு சிறகு இருந்தால் கட்டுரை |