உழைப்பே உயர்வு தரும் கட்டுரை

Uzhaipe Uyarvu Katturai In Tamil

கோடிக்கணக்கான மனிதர்களின் உழைப்பே இன்றைய நாகரிக உலகம். இந்த பதிவில் உழைப்பே உயர்வு தரும் கட்டுரை பார்ப்போம். (Uzhaipe Uyarvu Katturai In Tamil)

உழைப்பு உண்மையாக இருந்தால் உயர்வு தானே தேடி வரும். வாழ்க்கை பயணத்தில் நாம் சாதனை எனும் சிகரத்தை அடைய நமக்கு வேண்டிய மூலதனம் உழைப்பு.

  • உழைப்பே உயர்வு தரும் கட்டுரை
  • Uzhaipe Uyarvu Katturai In Tamil

உழைப்பாளர் தினம் கட்டுரை இங்கே சென்று பாருங்கள்.

உழைப்பே உயர்வு தரும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. உழைப்பின் சிறப்பு
  3. உழைப்பால் உயர்ந்தவர்கள்
  4. உழைப்பின் முக்கியத்துவம்
  5. முடிவுரை

முன்னுரை

“தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” என்கின்றார் வள்ளுவர்.

அதாவது முன்வினையால் ஒரு காரியம் நடைபெறாமல் போனாலும் தனது உடலை வருத்தி உழைக்கும் போது அதற்கான பலன் கிடைக்கும் என்பதே இதன் பொருள் ஆகும்.

நாம் முயற்சியுடன் உழைக்கும் போது வெற்றி நமக்கு கிடைத்தே தீரும்.

வள்ளுவர் மட்டுமல்லாது ஒளவையார், விவேகானந்தர் போன்ற பலரும் உழைப்பை பற்றி கூறியுள்ளனர்.

இந்த கட்டுரையில் உழைப்பே உயர்வு தரும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

உழைப்பின் சிறப்பு

கடின உழைப்பு அனைவருக்கும் சிறப்பையே தரும். நாம் வாழுகின்ற சூழலை உற்று நோக்கினால் ஒவ்வொரு உயிரினத்திடம் இருந்தும் கடின உழைப்பை கற்றுக் கொள்ளலாம்.

தேனீக்களும் சிலந்திகளும் கடின உழைப்பிற்கு மிகச்சிறந்த உதாரணமாக கொள்ளப்படுகின்றன.

சிலந்தியின் வலை எத்தனை முறை கலைக்கப்பட்டாலும் மீண்டும் தனது வலையை பின்னி வாழும் திறமை கொண்டது.

தேனீக்கள் சிறியளவு தேனை சேகரிக்க 16 மைல் தூரம் வரை பயணம் செய்து கடினமாக உழைக்கின்றன.

உழைப்பு எனப்படுவது ஒவ்வொருவரிற்கும் அளிக்கப்பட்ட வேலையை முழுமுயற்சியுடன் செய்தல் ஆகும்.

உழைப்பில்லாமல் உயர்வு இல்லை. ஒருவர் எந்தளவிற்கு கடினமாக உழைக்கின்றாரோ அந்தளவிற்கு உயர்ந்த நிலையை அடைய முடியும்.

வேலை செய்பவர்கள் அவர்களது வேலையை முழுமுயற்சியுடன் செய்தால் மட்டுமே உயர்ந்த இடத்தை பெற முடியும். மாணவர்கள் கடினமாக படித்தால் மட்டுமே பரீட்சையில் சித்தி அடைய முடியும்.

ஒரு மனிதன் தனது வாழ்நாளில் பத்தாயிரம் மணிநேரம் கடினமாக உழைத்தால் தனது துறையில் உன்னதமான இடத்தை அடைந்து விடலாம் என அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இதுவே உழைப்பின் சிறப்பு ஆகும்.

உழைப்பால் உயர்ந்தவர்கள்

இந்த உலகத்தில் கடின உழைப்பால் உயர்ந்தவர்கள் பலரை குறிப்பிடலாம். அவர்களுள் தோமஸ் அல்வா எடிசன், ஆபிரகாம் லிங்கன், அப்துல் கலாம் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவார்.

கண்டுபிடிப்புக்களின் தந்தை என்று அழைக்கப்படுகின்ற தோமஸ் அல்வா எடிசன், கடின உழைப்பிற்கு சிறந்த உதாரணமாக கூறக்கூடியவர்.

மின்குமிழைக் கண்டு பிடித்த தோமஸ் அல்வா எடிசன், மின்குமிழ்கள் நீண்ட நேரம் எரிவதற்கான சரியான மின்னிழையை கண்டறிவதற்காக கிட்டத்தட்ட ஜந்தாயிரம் இழைகளை பரிசோதித்தும் தோல்வியையே தழுவினார்.

பின்னர் விடாமுயற்சியுடன் கடினமாக உழைத்து சரியான இழையை கண்டுபிடித்து உலகத்தையே வியப்பில் ஆழ்த்தினார்.

கடின உழைப்பிற்கு இன்னொரு எடுத்துக்காட்டாக விளங்குபவர் ஆபிரகாம் லிங்கன்.

செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனான இவர் தொடர் தோல்விகளால் மனந்துவண்டு போகாமல் கடினமாக உழைத்து அமெரிக்காவின் மிகச் சிறந்த ஜனாதிபதி ஆனார்.

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரான அப்துல் கலாம் சிறுவயதில் பத்திரிகை விற்பது போன்ற சிறு தொழில்களை செய்து வாழ்வில் முன்னேறியவர்.

ஒரு நபர் அடித்தட்டு மனிதராய் பிறந்து சாதனையாளராய் மாற வேண்டுமாயின் அவர் மிகவும் கடினமாக உழைத்தாக வேண்டும்.

இவர்கள் அனைவரும் வரலாற்றில் உயர்வாக போற்றப்பட காரணம் அவர்களின் கடின உழைப்பே ஆகும்.

உழைப்பின் முக்கியத்துவம்

ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெற்று மிகச்சிறந்த இடத்தை அடைய வேண்டுமாயின் அவர் தான் இப்போது மேற்கொள்கின்ற பணிகளை மிகுந்த அர்ப்பணிப்புடனும் கடின உழைப்புடனும் மேற்கொள்ள வேண்டும்.

சிலவேளைகளில் எமது ஒவ்வொரு முயற்சிகளும் தோல்வியை தழுவினாலும் நாம் மேலும் கடினமாக முயலும் போது இறுதியில் அவை வெற்றியையே பெற்றுத்தருகின்றன.

எமது குறிக்கோள்களை மட்டும் கவனத்தில் கொண்டு அதீத முயற்சியுடனும் பொறுமையுடனும் உழைத்தால் வெற்றி எனும் சிகரத்தை அடைந்து விடலாம்.

ஆறறிவு உடைய மனிதர்களுக்கும் சரி, ஜந்தறிவு உடைய உயிரினங்களும் சரி ஒவ்வொருவரிற்கும் உழைப்பு மிக முக்கியமானதாகும்.

முடிவுரை

நூறு பேரை விட சிறந்தவராக விளங்க வேண்டுமென நீங்கள் நினைத்தால் ஏனைய தொண்ணூற்றொன்பது பேரை விட நீங்கள் கடினமாக உழைத்தாக வேண்டும்.

உழைப்பில்லா பிறப்பு இறப்பிற்கு சமம் என்று குறிப்பிடுகின்றார்கள். மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் சோம்பல்தனத்தை கைவிட்டு கடினமாக உழைத்தால் மட்டுமே வையகத்தில் வாழ்வாங்கு வாழ முடியும்.

கடின உழைப்பு ஒருவரை சிறப்பான பாதைக்கே இட்டு செல்லும். எனவே கடின உழைப்பை மூலதனமாக இட்டு வாழ்வின் உயர்ந்த இடத்தை அடைவோம்.

You May Also Like :

அறம் செய்ய விரும்பு கட்டுரை

தமிழர் பண்பாடும் கலாச்சாரமும் கட்டுரை