Table of Contents
அறிமுகம்
இன்று கல்வித்துறையில் பல கல்வி முறைகள் வளர்ச்சி பெற்றுவருவதனைக் காணலாம். அவை எமது அறிவை விருத்தி செய்ய உதவுகின்றன. ஆனால் உடலையும் அறிவையும் பேணக்கூடிய கல்வியாக உடற்கல்வியே உள்ளது என்றால் அதுமிகையல்ல.
உடல்தான் உலக வாழ்க்கைக்கு ஆதாரமாகும். நல்ல உடலை அமைத்து அதனை சிறந்த பயிற்சிகள் மூலம் வளர்த்து அதிலே நல்ல மனதை பேணி ஆரோக்கியமான, மனமகிழ்வான வாழ்க்கையை மக்கள் வாழச் செய்கின்ற வகையில் தான் உடற்கல்வியின் அமைப்பும், முனைப்பும் அமைந்திருக்கின்றது.
உடற்கல்வி என்றால் என்ன
உடற்கல்வி என்பது உடலுக்கான கல்வி, உடல் மூலமாகக் கற்றுக் கொள்ளும் கல்வி, உடல் நலம், பலம், வளம் என்பதையே குறிப்பாகக் கொண்டு கற்பிக்கும் கல்வி ஆகும்.
உடற்கல்வி என்பதற்கு J.F எனும் அறிஞர் “ தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்களை ஒரு மனிதரை செய்ய வைத்து அதில் சிறப்பான எதிர்பார்க்கும் வரவுகளைப் பெறுவதுதான் உடற்கல்வி ” எனக் கூறியுள்ளார்.
உடற்கல்வி என்பது சில வகையான பயிற்சிகள் மற்றும் வழக்கமான பயிற்சிகளுடன் மட்டுப்படுத்தப்படவில்லை, ஆனால் உடல் தகுதி மதிப்பை வலியுறுத்துகிறது.
அதாவது உடல் மூலம் கற்றுக் கொள்ளும் கல்வி, உடல் நலம், பலம், வளம் உடற்கல்வி எனச் சுருக்கமாகக் கூறலாம்.
உடற்கல்வியின் நோக்கம்
இலட்சியம் நிறைந்த இலக்கினை அமைத்து அதனை அடைய முயற்சிப்பது தான் கல்வியின் நோக்கமாகும். உடற்கல்வியின் நோக்கமானது உடல் மூலமாகக் கற்றுத் தருவதுதான்.
மேலும்: உடற்கல்வியின் நோக்கமானது, மனிதர்களது ஆளுமையில் (Personality) முழுவளர்ச்சியைக் கொடுப்பதாகும் அல்லது சிறந்த வாழ்வு வாழ சந்தர்ப்பங்களை வழங்குவதாகும். ஒருவரை சமுதாயத்தில் சிறந்த குடிமகனாக வாழச் செய்வது என்பதாகும்.
உடற்கல்வியின் அவசியம்
நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இந்த செல்வதிற்கு உடற்கல்வி மிகவும் அவசியம். இதனால்தான் மிதமாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு சிகிச்சை தேவையில்லை என்று கூறுவார்கள்.
உடற்கல்வி தனித்திறமையை வளர்க்கவும், உடல் வளத்தை உயர்த்தி கொள்ளவும், ஓய்வு நேரத்தை பயன்பாட்டுடன் செலவழிக்கவும் அவசியமாகின்றது.
உடல் வலிமையுடன் இருந்தால் தான் நாட்டையும் வீட்டையும் காக்க முடியும். இதற்கு உடற்கல்வியானது மிகமிக அவசியம்.
உடற்கல்வியின் மூலம் கிடைக்கும் நன்மைகள்
ஒரு மாணவனுக்கு சிறுவயது முதல் கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு உடற்கல்வியை கற்றுத் தருவதன் மூலம் வாழ்நாள் முழுவதும் அவனது ஆரோக்கியம் என்ற கல்வி அவனுக்கு போதிக்கப்படுகின்றது.
வழக்கமான உடல் செயற்பாடுகள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றது. இதனால் பள்ளி மாணவர்கள் அதிக நன்மைகளைப் பெற முடியும்.
உடற்கல்வியின் மூலம் உலகின் தலை சிறந்த விளையாட்டு வீரனை உருவாக்கலாம். உலக மக்கள் சிறந்த வீரர்களை அறிவதற்கான விளம்பரமும் கிடைக்கும்.
உடற்கல்வியால் விளையாட்டின் விதிமுறைகள், நுணுக்கங்களையும் கற்கின்றனர். அவற்றைப் கடைப்பிடிக்கும் பயிற்சியையும் பெறுகின்றனர். வேலை வாய்ப்பிலும் அவர்களுக்கு சிறப்பிடம் வழங்கப்படுகிறது.
ஒற்றுமை அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகின்றது. இதற்கு விளையாட்டுக்கள் வழிவகுக்கின்றது.
ஒரு மாணவனுக்கு சமூதாயத்தில் உயர்ந்து நிற்பதற்கு கல்வி அவசியம். அதே போல் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உடற் கல்வி அவசியமானதொன்றாகும் என்பதனை அனைவரும் புரிந்து கொண்டு அதற்கு முக்கியத்துவம் கொடுக்க முன்வரவேண்டும்.
எனவே பாலர் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள் முதல் நடுநிலைப் பள்ளிகள் வரை ஒவ்வொரு பள்ளியிலும் உடற்கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும்.
You May Also Like : |
---|
உடல் சூட்டினால் ஏற்படும் நோய்கள் |
உடல் நலம் காப்போம் கட்டுரை |