இயற்கை வளம் காப்போம் கட்டுரை

Iyarkai Valam Kappom Katturai In Tamil

இந்த பதிவில் உயிர்கள் வாழ அவசியமான “இயற்கை வளம் காப்போம் கட்டுரை” பதிவை காணலாம்.

இயற்கை வளங்கள் எமக்கு மட்டும் சொந்தமானவையல்ல இவை பாதுகாக்கப்பட வேண்டியவை.

இயற்கை வளம் காப்போம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பூமியின் வரங்கள்
  3. வகைப்பாடுகள்
  4. பயன்கள்
  5. வளமுகாமைத்துவம்
  6. முடிவுரை

முன்னுரை

இந்த பூமியிலே காணப்படுகின்ற இயற்கை வளங்களானவை பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் இயற்கையின் தொழிற்பாடுகளால் தானாகவே உருவானவையாகும்.

இவற்றை மனிதனால் உருவாக்க முடியாது. இத்தகைய வளங்கள் இயற்கை இங்கே வாழ்கின்ற உயிர்களுக்கு கொடுத்த விலைமதிப்பற்ற பொக்கிசங்களாகும். இவை எமது வாழக்கைக்கு மிகவும் உபயோகம் மிக்கவையாகவும் காணப்படுகின்றன.

குடித்தொகை வளர்ச்சியானது நாளுக்கு நாள் அதிகரிப்பதன் காரணமாக இயற்கை வளங்கள் அதிகம் நுகரப்படுவதனால் இவை அருகி செல்கின்றன. இவற்றை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பது தொடர்பாக இக்கட்டுரையில் நோக்கலாம்.

பூமியின் வரங்கள்

எமது அன்றாட வாழ்க்கைக்கு இந்த இயற்கை வளங்கள் தான் காரணமாக அமைகின்றன. அவை மலைகள், ஆறுகள், சமவெளிகள், சமுத்திரங்கள், வளமான நிலங்கள் என்று இந்த பூமி எங்கும் பரந்திருக்கின்றன.

இவை தான் மனிதனுக்கு உணவை வழங்குகின்றது, தண்ணீரை வழங்கி தாகம் தணிக்கின்றன, வளமாக வாழ வாழ்விடங்களையும் தருகின்றன இத்தனை வளங்கள் இங்கே எமக்காக இயற்கை அன்னை அழித்த வரங்கள் ஆகும்.

இந்த பேரண்டத்தில் பூமி ஒரு சொர்க்கம் என்றே கூறலாம். மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என்று பல உயிரினங்கள் இங்கே வாழ்கின்றன.

வகைப்பாடுகள்

இந்த இயற்கை வளங்களை நாங்கள் வகைப்படுத்தி நோக்குவோமானால் தரைமேற்பரப்பில் கிடைக்கின்ற காட்டுவளம், கனிம மணல், வனவிலங்குகள், பாறைகள் போன்ற வளங்கள் காணப்படுகின்றன.

அதேசமயம் தரைக்கீழாக தரைக்கீழ்நீர், பெற்றோலியம், தங்கம், வைரம், இரத்தினகற்கள், இரும்பு, செம்பு, பித்தளை என பலவகையான உலோகங்கள் போன்ற மிக பெறுமதியான வளங்கள் இந்த பூமியில் அதிகம் காணப்படுகின்றன. இந்த வளங்கள் உருவாக பல லட்சம் ஆண்டுகள் எடுப்பதாகவும் அறியப்படுகின்றது.

பயன்கள்

இயற்கை வளங்கள் மிகவும் பெறுமதி மிக்கவையாகும் மனிதன் மேற்கொள்ளுகின்ற அனைத்து நடவடிக்கைகளுகும் மூலப்பொருட்களாக இயற்கை வளங்கள் காணப்படுகின்றன.

பாறைகள் மற்றும் கனியவளங்கள் இங்கு கட்டடங்கள், வீதிகள், மேம்பாலங்கள் அமைக்க உதவுகின்றன.

பெற்றோலியம் போக்குவரத்து துறையின் முக்கியமான எரிபொருளாக உள்ளது. பெறுமதியான உலோகங்கள் நாம் உபயோகிக்கின்ற பொருட்களை உருவாக்க பயன்படுகின்றன.

தங்கம், வைரம், வெள்ளி, பிளாட்டினம் போன்றன விலை உயர்ந்த பொருட்களாக காணப்படுகின்றன.

இவ்வாறு நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற பொருட்கள் இயற்கை மூலப்பொருட்களை கொண்டே உருவாக்கப்படுகின்றது.

வள முகாமைத்துவம்

நாளாக நாளாக மனிதர்கள் அபிருத்தி என்கின்ற இலக்கை நோக்கி செல்ல முனைவதனால் அதிகளவில் இயற்கை வளங்களை நுகர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

மனிதர்கள் தங்கள் தேவைகளுக்கு மாத்திரம் வளங்களை உபயோகப்படுத்தாமல் இயற்கை வளங்களை கொண்டு பெரும் இலாபமீட்டும் நடவடிக்கைளில் ஈடுபடுகின்றனர்.

இதனால் வளப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இவற்றினை தடுக்க நாம் இயற்கை வளங்களை சரியான முறையில் முகாமைத்துவம் செய்வதன் மூலமாக இவ்வகையான பிரச்சனைகளை தடுக்க முடியும்.

முடிவுரை

இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை. இவை நமக்கு மட்டும் சொந்தமானவையல்ல. எம்மை தொடரந்து இந்த பூமியிலே வாழ உள்ள எமது அடுத்த தலைமுறையினரும் இந்த இயற்கை வளங்களை பயன்படுத்த வேண்டும்.

ஆகையால் இவற்றை நாம் பாதுகாக்க வேண்டும். இயற்கை வளங்களை அளவுக்கு மீறி நுகர்வது சட்டவிரோத செயலாகும்.

இதனை செய்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டியது அவசியமானதாகும். இதன்வாயிலாகவே இயற்கை வளங்களை பாதுகாக்க முடியும்.

You May Also Like :
இயற்கையை பாதுகாப்போம் கட்டுரை
இயற்கை பேரிடர் பாதுகாப்பு விழிப்புணர்வு