உலகில் சீரான அமைதியான நாட்டை உருவாக்குவதற்கு அரசியல் அமைப்புக்கள் இன்றியமையாதவையாகும். உலகின் ஒவ்வொரு நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டமும், ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மை வாய்ந்து விளங்குகின்றது.
அரசியலமைப்பென்பது அரசாட்சியின் மையமாக விளங்குகிறது. அந்த வகையில் இந்திய அரசியல் அமைப்பானது பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு ஏனைய அரசியலமைப்புகளிலிருந்து வேறுபட்டது மற்றும் தனித்தன்மை வாய்ந்தது. இந்திய அரசியலமைப்பின் சிறப்புகள் பற்றி இப்பதிவில் காண்போம்.
இந்திய அரசியலமைப்பின் சிறப்புகள்
#1. மிகவும் நீளமான எழுதப்பட்ட அரசியல் அமைப்பாகும்.
உலகளாவிய ரீதியில் இந்தியாவின் அரசியல் அமைப்பே மிக நீளமாக எழுதப்பட்ட அரசியல் அமைப்பாகும். இதில் மொத்தம் 25 பிரிவுகள், 12 அட்டவணைகள், 104 திருத்தங்கள், 448 உட்பிரிவுகள் மற்றும் 117,369 சொற்கள் உள்ளன.
#2. நெகிழும் மற்றும் நெகிழா தன்மைகளின் ஒருங்கிணைப்பை கொண்டுள்ளது.
அரசியலமைப்பின் திருத்த நடைமுறையின் அடிப்படையிலேயே நெகிழும் மற்றும் நெகிழா தன்மை என்று அழைக்கப்படுகின்றது. இந்தியாவின் சில அரசியல் சட்டங்கள் நெகிழும் தன்மையுடையதாகவும் சில வகைச் சட்டங்கள் நெகிழாத் தன்மையுடையதாகவும் உள்ளன.
#3. பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை.
இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை உருவாக்கும் பொருட்டு அப்போது மக்களாட்சி நடைபெற்ற நாடுகள் பலவற்றிலிருந்து இந்திய நடைமுறைக்குப் பொருத்தும் சட்டக்கூறுகளை இந்திய அரசியலமைப்பு வரைவில் சேர்த்தது.
குறிப்பாக இங்கிலாந்தின் பாராளுமன்ற அரசாங்க முறைமை, ஐக்கிய அமெரிக்காவில் அடிப்படை உரிமைகள் சாசனம், அயர்லாந்தின் அரசின் நெறிமுறை சாசனம், பிரான்சு நாட்டின் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவ கருத்தாக்கங்கள்,
கனடா நாட்டின் பலமிக்க நடுவண் அரசாங்கமுறை அமையப்பெற்ற கூட்டாட்சி முறை, ரஷ்ய நாட்டின் அடிப்படை கடமைகள் போன்ற கூறுகள் உள்வாங்கப்பட்டன.
#4. சமயச் சார்பற்ற அரசு.
இந்தியாவின் அரசியலமைப்பானது இந்தியா மதச் சார்பற்றது என்பதை வலியுறுத்துகின்றது. இதன் மூலம் எல்லா மதங்களுக்கும் சமமான மரியாதையை வழங்குவது அல்லது எல்லா மதங்களையும் சமமான வகையில் பாதுகாப்பது என்பதனை வெளிப்படுத்துகின்றது.
#5. பாராளுமன்ற அரசாங்க முறைமை.
நாடாளுமன்ற ஜனநாயகத்தில் சட்டமியற்றுவோருக்கும் நிர்வாகத்திற்கும் மிக நெருக்கமான உறவு நிலவும். இந்திய அரசியலமைப்பின்படி பிரதமரால் தலைமை வகிக்கப்படும் அமைச்சரவைக் குழுதான் அதிகாரங்களை உபயோகிக்கிறது.
#6. ஒற்றைக் குடியுரிமை.
பொதுவாக, ஒரு கூட்டாட்சியரசில், குடிமக்கள் இரட்டைக் குடியுரிமையைப் பெற்று அனுபவிப்பதே வழக்கமாக அமையும். ஆனால் இந்தியாவில் வழங்கப்பட்டுள்ள குடியுரிமை ஒற்றைக் குடியுரிமை ஆகும். ஒவ்வொரு இந்தியர்களும் எந்த மாநிலத்தில் பிறந்திருந்தாலும், அவர்கள் இந்தியக் குடிமக்கள் என்று அடையாளப்படுத்தப்படுவார்கள்.
#7. அடிப்படை உரிமைகள்.
இந்தியாவின் அரசியலமைப்பானது அனைத்து மக்களும் சமமான உரிமைகளை அனுபவிப்பதற்கான உத்தரவாதம் அளித்துள்ளது.
#8. அரசுக் கொள்கையின் வழிகாட்டி நெறிகள்.
அரசு கொள்கைகளின் வழிகாட்டி நெறிகள் பாரபட்சம் அற்ற அரசை நிறுவுவதை நோக்கி நெறிப்படுத்தப்பட்டவையாகும். சமூகரீதியான பாரபட்சத்தை அகற்றுவதுதான் இதனுடைய குறிக்கோளாகும்.
#9. அவசரகால விதிகள்.
சாதாரண காலங்களில் செயல்படுவது போல அரசாங்கம் செயல்பட முடியாமல் போகிற சூழ்நிலைகளும் எதிர்காலத்தில் உருவாகக்கூடும் என்பதை கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்டது.
அரசியலமைப்பு அமுல்படுத்தப்பட்ட 25 ஆண்டுகள் கழித்து, உள்நாட்டு அரசியல் குழப்பங்களை காரணம் காட்டி அவசர நிலையை 1975ல் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி பிரகடனம் செய்தார்.
#10. மூன்றடுக்கு அரசாங்கம்.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் அமைப்பு முறை மற்றும் அதிகாரங்கள் தொடர்பான விதிகளை கொண்டுள்ளது.
அத்தோடு, 73-வது மற்றும் 74-வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் (1992), உலகில் வேறு எந்த ஓர் அரசியல் சட்டத்திலும் காணப்படாத வகையில் அமைந்த மூன்றடுக்கு அரசாங்கம் அதாவது உள்ளாட்சி அரசாங்கம் என்ற அம்சத்தைப் புதிதாக சேர்த்துள்ளது.
You May Also Like : |
---|
இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு |
தேசிய கொடியின் சிறப்பு |