தொல்காப்பியம் சிறப்புகள்

tholkappiyam sirappugal in tamil

தமிழ்மொழி தொன்மைச் சிறப்பு மொழியாகும். இத்தகைய தமிழ் மொழியில் பல இலக்கண நூல்கள் தோற்றம் பெற்றுள்ளன. அதில் தொல்காப்பியமும் ஒன்றாகும். இதை எழுதியவர் பெயர் “தொல்காப்பியர்” என்று தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடுகிறது.

தொல்காப்பியத்திற்கு முன்பே பல இலக்கியங்களும், சில இலக்கணங்களும் இருந்தன என்பது உண்மையேயாயினும், அவற்றுள் ஒன்றேனும் இன்று நாம் பெற இயலவில்லை. தொல்காப்பியம் பல சிறப்புகளை கொண்டமைந்துள்ளது அச்சிறப்புக்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.

தொல்காப்பியம் சிறப்புகள்

#1. தமிழில் செவ்விலக்கிய நூல்களுள் மிகவும் தொன்மையான முதல் நூல் தொல்காப்பியமே.

தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலாகும். தமிழில் கிடைத்த இலக்கண நூல்களில் முதலாவதும் முதன்மையானதாகவும் தொல்காப்பியமே திகழ்கின்றது.

#2. வாழ்க்கையை அகம், புறம் என்று பிரித்து அவற்றை இலக்கியமாகப் படைப்பதற்கு இலக்கணம் வகுத்துத் தந்தது தொல்காப்பியம்.

பண்டைத் தமிழர் மக்கள் வாழ்க்கையை அகம், புறம் என்று வகுத்தனர். காதல் பற்றிய பாடல்களை அகம் என்பர், கொடை, வீரம், கருணை முதலிய உணர்வுகளை புறம் என்பர்.

#3. தமிழ்மொழியின் பெருமையையும், தமிழ் மக்களின் அறிவு மேம்பாட்டையும் உலகறியச் செய்யும் நூல் ஆகும்.

தமிழர் பண்பாட்டை, நாகரீகத்தை, பழக்கவழக்கங்களை, பண்பாட்டு விழுமியங்களை தெரிந்துகொள்வதற்கு தொல்காப்பியமே முதல் ஆதாரமாகும்.

#4. சிறப்புப் பாயிரம்.

சூத்திர யாப்பில் அமைந்த தொல்காப்பியம் 1610 சூத்திரங்கள் அடங்கியது. சிறப்புப் பாயிரம் என்பது சமகாலத்தவர் ஒருவர் நூலை மதிப்பிட்டு உரைக்கும் செய்தியாகும்.

தெல்காப்பியத்திற்குச் சிறப்புப் பாயிரம் தந்தவர் பானம்பாரனார் ஆவார். இவர் தொல்காப்பியரின் ஒரு சாலை மாணாக்கராவார். பொதுவாக பாயிரம் எழுதுபவர்கள் நூலாசிரியரை நன்கு அறிந்தவராகவோ, உடன் பயின்றவராகவோ இருப்பார்கள்.

#5. தொல்காப்பியரின் காலம்.

தொல்காப்பியரின் காலம் பற்றி அறிஞர்களிடையே பல கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. தொல்காப்பியம் கி.மு.3ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்றும், கி.மு.5ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்றும் கி.மு.6ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்றும் கருத்துகள் உள்ளன.

#6. நூலின் அமைப்பு.

தொல்காப்பியம் 1610 (483+463+664) நூற்பாக்களாலானது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதிகாரங்கள் மேலும் பல கூறுகளாகப் பகுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அதிகாரமும் 9 இயல்களைக் கொண்டது.

#7. தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழிநூல்கள் தோன்றின.

தொல்காப்பியத்தின் பின்னர் தமிழில் பல நூல்கள் தோற்றம் பெற்றன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், பதினெண் மேற்கணக்கு நூல்கள் போன்ற நூல்களை உதாரணமாக கூறிக்கொள்ளலாம்.

#8. பெயர் பொருள்.

தொல்காப்பியம் என்ற சொல் நூலைக் குறிக்கும் போது ஒரே சொல்லாகவும் பொருளை விளக்கும் போது அது தொல்+காப்பு+இயம் என்ற முச் சொற்களாகப் பிரிந்து பொருள் தரும் எனக் கூறப்படுகின்றது.

#9. தொல்காப்பியம் இலக்கணம் என்ற அடையாளத்துக்கு மேல் அறிவியலையும் ஆராய்ந்திருக்கிறது.

மனிதன் ஆறறிவு கொண்டவன் என்பதை 3000 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்திருக்கிறார். இதனை, “மக்கள் தாமே ஆறறி வுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே” என்ற வரிகளின் மூலம் அறியலாம்.

#10. தொல்காப்பியத்தின் ஒவ்வொரு நூற்பாவின் முடிவு.

தொல்காப்பியர் ஒவ்வொரு நூற்பாவின் முடிவிலும் மொழிப, என்மனார் போன்ற வார்த்தைகளுடன் முடிக்கிறார். அதாவது முன்னோர்கள் சொன்னார்கள் என்று அர்த்தம். எனவே தொல்காப்பியர் காலத்துக்கும் முற்பட்டது என்று அறிந்து கொள்ளலாம். அதாவது, அவருக்கு முன்னரே இலக்கணப் புலவர் பலர் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது நன்கு தெளிவாகின்றது.

You May Also Like :
சங்க இலக்கியத்தின் சிறப்புகள்
பத்துப்பாட்டு நூல்கள்