ஆற்றுப்படை நூல்கள்

aatrupadai noolgal

ஆறு என்னும் சொல்லுக்கு வழி அல்லது நெறி என்பது பொருளாகும். ஆற்றுப்படுத்துதல் என்பது வழிப்படுத்துதல் என்னும் பொருள் உடையது. வறுமையோடு இருப்பவனை அவன் துயர்களைப் போக்கி பெருஞ்செல்வம் பெறுமாறு அவரையும் வழிப்படுத்துதலே ஆற்றுப்படை என்னும் நூலாகும்.

விறலியர், பாணர், கூத்தர், பொருநர் என்போர் தமது வறுமையைப் போக்க வள்ளல்களிடம் சென்று பொருள் பெறுவது அக்கால வழக்கம்.

அவ்வாறு பரிசு பெற்றுச் செல்லும் மேற்கூறிய நால்வகைப் பிரிவினருள் ஒருவன், பரிசு பெறச் செல்லும் இன்னொருவனை வழிப்படுத்தும் முறையில் அமைவதே ஆற்றுப்படை ஆகும். ஆற்றுப்படை நூல்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.

ஆற்றுப்படை நூல்கள் யாவை

  • திருமுருகாற்றுப்படை
  • பொருநராற்றுப்படை
  • சிறுபாணாற்றுப்படை
  • பெரும்பாணாற்றுப்படை
  • கூத்தராற்றுப்படை (மலைபடுகடாம்)

ஆற்றுப்படை நூல்கள் ஆசிரியர்

திருமுருகாற்றுப்படைநக்கீரர்
பொருநராற்றுப்படைமுடத்தாமக் கண்ணியர்
சிறுபாணாற்றுப்படைநல்லூர் நந்தனார்
பெரும்பாணாற்றுப்படைகடியலூர் உருத்திரங்கண்ணனார்
கூத்தராற்றுப்படை
(மலைபடுகடாம்)
பெருங்கௌசிகனார்

ஆற்றுப்படை நூல்கள் விளக்கம்

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை ஆகும். மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் அவர்களால் பாடப்பட்டது. 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது.

பன்னிரு திருமுறை பகுப்பில் இது பதினோராவது திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட திருமுருகாற்றுப்படையின் ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் அறுபடை வீடுகள் ஒவ்வொன்றையும் பாராட்டுவனவாக அமைந்துள்ளது.

பொருநராற்றுப்படை

பொருநராற்றுப்படையானது பத்துப்பாட்டில் ஆற்றுப்படை வரிசையில் இரண்டாமிடத்தில் வைத்துப் போற்றப்படும் நூலாகும். 248 அடிகள் கொண்ட பொருநராற்றுப்படையின் ஆசிரியரான முடத்தாமக்கண்ணியார் ஒரு பெண்பாற் புலவர் என்றே நம்பப்படுகிறது.

கரிகால் வளவன் எனப்படும் சோழ மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது. தமிழரின் பண்பாடான விருந்தினரை ஏழடி நடந்து சென்று வரவேற்றலும், வழியனுப்புதலும் குறித்து பாடப்பட்டுள்ளமை சிறப்பிற்குரியதாகவுள்ளது.

சிறுபாணாற்றுப்படை

இந்நூல் நத்தத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. 269 அடிகளாலமைந்த இந்நூலானது ஒய்மான் நாட்டு மன்னனான நல்லியக்கோடன் என்பவனைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்டது. அம்மன்னனிடம் பரிசு பெற்ற சிறுபாணன் ஒருவன் தான் வழியிற் கண்ட இன்னொரு பாணனை அவனிடம் வழிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

கடையேழு வள்ளல்களான பேகன், பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, ஓரி போன்றோரின் வரலாற்றைச் சுருக்கமாகக் கூறும் நூலாக சிறுபானாற்றுப்படை காணப்படுகின்றது.

பெரும்பாணாற்றுப்படை

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் பெரும்பாணாற்றுப்படை ஆகும். இந்நூலைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர் ஆவார். இந்நூலினைச் சமுதாய பாட்டு எனத் தமிழண்ணல் அவர்கள் குறிப்பிடுகிறார்.

500 அடிகளைக் கொண்டு அமைந்தது. பேரியாழ் வாசிக்கும் பாணனொருவன் வறுமையால் வாடும் இன்னொரு பாணனைத் தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது இந்த ஆற்றுப்படை நூல் ஆகும்.

ஒரு பெரும்பாணன் வேறொரு பெரும்பாணனை ஆற்றுப்படுத்தியதால் இந்நூல் பெரும்பாணாற்றுப்படை என்னும் பெயர் பெற்றது.

கூத்தராற்றுப்படை (மலைபடுகடாம்)

583 அடிகளாலான இப்பாடலை இயற்றியவர், இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்நூல் மலைபடுகடாம் என்றும் அழைக்கப்படுகின்றது.

மலைக்கு யானையை உவமித்து மலையில் உண்டாகும் ஓசைகளைக் கடாம் என்று சிறப்பித்தமையால் இந்நூல் “மலை படுகடாம்” எனப்படுகிறது.

நவிர மலையின் தலைவனான நன்னன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது. ஒரு கூத்தன் வேறொரு கூத்தனை ஆற்றுப்படுத்தியதால் இந்நூல் கூத்தராற்றுப்படை என்றும் பெயர் பெற்றது.

You May Also Like :
பத்துப்பாட்டு நூல்கள்
சங்க இலக்கியத்தின் சிறப்புகள்