அப்துல் கலாம் சாதனைகள் கட்டுரை

Abdul Kalam Sadhanaigal In Tamil

இந்த பதிவில் “அப்துல் கலாம் சாதனைகள் கட்டுரை” பதிவை காணலாம்.

இந்திய தலைவர்களிலேயே குழந்தைகள் மற்றும் இளவயதினரால் அதிகம் நேசிக்கப்பட்டவர் அப்துல்கலாம் அவர்கள் ஆவர்.

அப்துல் கலாம் சாதனைகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. ஆராய்ச்சி சாதனைகள்
  3. ஏனைய சாதனைகள்
  4. அரசினால் வழங்கப்பட்ட கௌரவிப்புக்கள்
  5. முடிவுரை

முன்னுரை

அறிவியல் மீது அன்பு வைத்து மணவாழ்வை மறந்து மக்களுக்காக வாழ்ந்த உத்தமத் தமிழர் டாக்ரர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் ஆவார்.

தமிழகத்தில் பிறந்து இளமை காலத்தில் இராமேஸ்வரத்தில் பள்ளி கல்வியும், திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியல் படித்து பின் சென்னையில் உள்ள மெட்ராஸ் தொழிநுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.

இத்தகைய மாமனிதனான ஏவுகணை நாயகன் அப்துல்கலாமின் சாதனைகள் பற்றி இக்கட்டுரையில் நோக்குவோம்.

ஆராய்ச்சி சாதனைகள்

ஏவுகணை நாயகரான டாக்ரர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் இந்திய விண்வெளித்துறைக்கு மகத்தான பங்களிப்பை செய்துள்ளார்.

1992ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை பாதுகாப்புத்துறை அமைச்சரின் அறிவியல் ஆலோசகராக செயல்பட்ட டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் பொக்ரான் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக செய்து முத்திரைப் பதித்தார்.

பொக்ரான் 2 அணுகுண்டு சோதனைக்கு என்ஜினியராக கலாம் பணியாற்றி அணு ஆயுத நாடுகள் பட்டியலில் இந்தியாவையும் இணைத்தார்.

இந்தியாவில் இருக்கும் அணு ஆயுதம் உலகில் அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய 5 நாடுகளிடம் மட்டுமே இருக்கின்றன.

விண்வெளித் துறையில் ராக்கெட் ஏவுவது என்பது இந்தியாவுக்கு ஒரு கனவாகவே இருந்த நிலையில் அந்தக் குறையைப் போக்குவதில் முழு கவனத்தையும் செலுத்தினார்.

எஸ்.எல்.வி (SLV) உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றிய இவர் இதன் மூலம் முதன் முதலாக ரோகிணி செயற்கைக் கோளை விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்தார்.

இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதன் மூலம் இந்தியாவும் முதன்முதலாக விண்வெளித் துறையில் காலடி எடுத்து வைத்து வரலாறு படைத்தது.

20 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரோவில் பணியாற்றிய பிறகு, இந்தியா பாதுகாப்புத் துறையை பலப்படுத்தும் விதமாக உள் நாட்டிலேயே ஏவுகணை உருவாக்கும் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

அவரது தலைமையின் கீழ் அக்ணி மற்றும் பிரித்வி ஏவுகணைகள் உருவாக்கப்பட்டதையடுத்து “இந்தியாவின் ஏவுகணை நாயகன்” என அழைக்கப்பட்டார்.

ஏனைய சாதனைகள்

இந்திய தலைவர்களிலேயே குழந்தைகள் மற்றும் இளவயதினரால் அதிகம் நேசிக்கப்பட்டவர் அப்துல்கலாம் அவர்கள்.

புகழ்பெற்ற விஞ்ஞானியான இவர் ஓய்வு பெற்ற பின்னர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை சந்தித்து உரையாடல் நிகழ்த்தி அவர்களுக்கு ஊக்கத்தையும் தன்னம்பிக்கையையும் ஊட்டினார்.

அவரது புகழ் பெற்ற வாக்கியமான “கனவு காணுங்கள்” மேடையில் அடிக்கடி சொல்லபட்ட செய்தி ஆகும்.

2002 இல் குடியரசு தலைவர் போட்டிக்கு இருபெரும் கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிட்டு வெற்றி பெற்று இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக 2002 முதல் 2007ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

குடியரசு தலைவர் பதவி முடிடைந்தவுடன் மீண்டும் மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சியை நடத்தினார். இதன்போது அதிக அளவில் மரக்கன்றுகளை நடும் பணியையும் சேர்த்து செய்தார்.

கிராமப்புற மக்கள் அவசரகாலத்தில் விரைவாக மருத்துவத்தை பெறவும் உதவி செய்தார். அப்துல்கலாம் அவர்களின் சுயசரிதை புத்தகமாக அவர் எழுதிய “அக்னிச் சிறகுகள்” கருதப்படுகிறது.

அத்துடன் இந்தியா 2020, வெளிச்சத் தீப்பொறிகள், திட்டம் இந்தியா, ஊக்கப்படுத்தும் யோசனைகள் போன்ற புத்தகங்களையும் எழுதியுள்ளார். கலாமின் பொன்மொழிகள் இன்றும் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பெற்றுள்ளன.

அரசினால் வழங்கப்பட்ட கௌரவிப்புக்கள்

ஐக்கிய நாடுகள் அவையில் அப்துல்கலாமின் 79 ஆவது பிறந்தநாள் உலக மாணவர் தினமாக அறிவிக்கப்பட்டது. அவர் 40 பல்கலைகழகங்கள் வழங்கிய “மதிப்புறு முனைவர்” பட்டங்களை பெற்றுள்ளார்.

அப்துல்கலாமின் பிறந்தநாளான அக்டோபர் 15 தமிழ்நாட்டில் இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்தது. பாட்னாவில் உள்ள வேளாண் கல்லூரிக்கும் அறிவியல் நகரத்திற்கும் அப்துல்கலாம் பெயர் சூட்டப்படும் என்று பீகார் அரசு அறிவித்தது.

அப்துல்கலாம் பிறந்த தினமான அக்டோபர் 15 ஆம் நாள் வாசிப்பு நாளாகக் கொண்டாடப்படும் என்று மகாராட்டிர அரசு அறிவித்தது. தொழில்நுட்பப் பல்கலைகழகத்திற்கு அப்துல்கலாம் பெயர் சூட்டப்படும் என்று உத்தரப்பிரதேச அரசு அறிவித்தது.

புதுடில்லியில் உள்ள அவுரங்சீப் சாலைக்கு அப்துல் கலாம் சாலை எனப் பெயரிட்டு புதுடில்லி மாநகராட்சி ஆணையிட்டது.

அப்துல்கலாம் அவர்கள் பெற்ற 1997 இல் இந்திய அரசின் பாரத ரத்னாவும் 1990 இல் பத்ம விபூஷண் மற்றும் 1981 இல் பத்ம பூஷன் விருதுகளும் பெற்றார்.

மேலும் பல விருதுகள் கலாம் கரங்களில் தவழ்ந்து இந்திய மண்ணை பெருமைப்படுத்தின என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

முடிவுரை

கலாம் அவர்கள் 27.07.2015 அன்று இந்தியாவின் மேகாலயா மாநிலத்தலைநகரான சில்லாங்கில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் மயங்கி விழுந்து மறைந்தார்.

“கஷ்டம் வரும் போது கண்களை மூடாதே அது உன்னை கொன்று விடும், கண்ணைத் திறந்து பார் அதை நீ வென்று விடுவாய்” என்று கூறி கடினமான சூழல்களில் எவ்வாறு வாழ வேண்டும் என்று வழிகாட்டிய பெருமை அப்துல்கலாமையே சேரும்.

“கனவு காணுங்கள்” என்ற கலாமின் வரிகளைச் சுமந்து வல்லரசு என்ற இலக்கை நோக்கிப் பயணிப்போம். கலாமின் கனவை நனவாக்கும் முயற்சிகளில் எம்மாலான பங்களிப்புக்களை வழங்குவோம்.

You May Also Like :
பாடசாலை பற்றிய கட்டுரை
மாணவர் ஒழுக்கம் கட்டுரை