இந்த பதிவில் “அன்றாட வாழ்வில் அறிவியல் கட்டுரை” பதிவை காணலாம்.
நாம் இன்று பயன்படுத்தும் அனைத்து கண்டுபிடிப்புகளின் உருவாக்கத்துக்கு ஒரு அசைக்க முடியாத அறிவியல் உண்மை காணப்படுகின்றது.
Table of Contents
அன்றாட வாழ்வில் அறிவியல் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- அறிவியலின் அறிமுகம் மற்றும் வளர்ச்சி
- அன்றாட வாழ்வில் அறிவியல்
- மருத்துவத்தில் அறிவியல்
- விவசாய வேளாண்மையில் அறிவியல்
- முடிவுரை
முன்னுரை
அறிவியல் இல்லையேல் இந்த உலகம் இயங்காது. இந்த உலகத்தின் இயக்கத்தையே தீர்மானிக்கும் அறிவியலை பயன்படுத்தாதோர் எவருமிலர். சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை அறிவியலை தமது ஆதாரமாகக் கொண்டு வாழ்வோர் பலர்.
இன்றைய நவீனமயமான உலகில் அறிவியலின் விளைவாக எழுந்த உலகமயமாதலும், அதனோடு இணைந்த துரித தொழில்நுட்ப வளர்ச்சியும் மனிதனை அறிவியல் இல்லையேல் எதுவுமில்லை என எண்ணுமளவிற்கு மாற்றியுள்ளன.
மனிதர்கள் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தாக விளங்கும் இவ்அறிவியலின் தோற்றம், வளர்ச்சி, அதன் பாவனைகள், அன்றாட வாழ்வில் அவை ஏற்படுத்தும் தாக்கம் பற்றி அனைவரும் அறிந்துகொள்வது அவசியமாகும். இதைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
அறிவியலின் அறிமுகம் மற்றும் வளர்ச்சி
அறிவியல் எனப்படுவது இயற்கையுடன் தொடர்புடைய, மற்றும் தொடர்புபடாத அனைத்தையும் கோட்பாடுகளுடன் விளக்குதலாகும். இவை மனிதனிற்கு நன்மை அளிக்ககூடிய மற்றும் மனித வாழ்க்கையை இலகுபடுத்தக் கூடியவற்றை உருவாக்கும் ஆற்றல் படைத்தவை.
அறிவியல் இன்று நேற்று உருவான ஒன்றல்ல. பல நூற்றாண்டுகளிற்கு முன்பே பல்வேறு ஆராய்ச்சிகளினூடாக அறிமுகப்படுத்தப்பட்டவையாகும். அறிவியலின் தோற்ற இடமாக கிரேக்கம் கருதப்படுகின்றது.
வானியல் ஆராய்ச்சி, மருத்துவ ஆராய்ச்சிகள், மற்றும் ஏனைய அனைத்து தொழில்நுட்ப ஆராய்ச்சிகளும் அறிவியலை அடிப்படையாக வைத்தே கட்டமைக்கப்பட்டுள்ளன.
நாம் இன்று பயன்படுத்தும் அனைத்து கண்டுபிடிப்புகளின் உருவாக்கத்துக்கு ஒரு அசைக்க முடியாத அறிவியல் காணப்படுகின்றது.
அன்றாட வாழ்வில் அறிவியல்
ஆரம்பகாலத்தின் அறிவியலானது சாதரண மக்களால் விளங்கிக் கொள்ள முடியாதவையாகவும், அவற்றின் மூலம் கிடைக்கும் பயன்களை பெற்றுக் கொள்ள முடியாமலும் காணப்பட்டது. ஆனால் தற்காலத்தில் அறிவியலின் பயன்களை பெற்றுக் கொள்ளாதாரே இல்லை எனலாம்.
மனிதர்கள் அறிந்தோ அறியாமலோ தமது அன்றாட வாழ்க்கை பயணத்தில் அறிவிலோடு பின்னிப்பிணைந்து வாழ்கின்றார்கள்.
மக்கள் அவர்களின் வீடுகளில் பயன்படுத்தும் இரத்திரனியல் உபகரணங்களான தொலைக்காட்சி, தொலைபேசி, குளிர்சாதனப் பெட்டி, வெப்பமாக்கி போன்ற அனைத்து தொழில்நுட்ப சாதனங்களும் அறிவியலோடு இணைந்த தொழில்நுட்பத்தாலே உருவாக்கப்பட்டுள்ளன.
இன்று உலகமானது ஒரு கிராமம் போல மாற்றமடைந்துள்ளது. உலகின் எப்பாகத்தில் வசிப்போரிடனும் தொடர்புகளை ஏற்படுத்தவும், தூர இடங்களில் நடக்கும் விடயங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும் முடிகின்றது.
அனைத்து நாடுகளிலும் உற்பத்தி செய்யப்படும் பொருட்களையும் நுகர்ந்து கொள்ளவும் முடியும் இதற்கு முக்கியமான காரணம் அறிவியலின் வளர்ச்சியாகும்.
மாணவர்களது கல்விச் செயற்பாடுகளும் இணைய மயமாகியுள்ளன. இணையத்தோடு இணைந்த கணனியை கல்வி செயற்பாடுகளிற்கு பயன்படுத்தல், மென்பொருட்களைப் பயன்படுத்தல் என அறிவியல் வளர்ச்சியடைந்துள்ளன.
மருத்துவத்தில் அறிவியல்
மனிதனது உடலானது எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது, அதன் இயக்கம், இயக்கத்திற்கு தேவையான சக்திகள் எவை போன்ற அனைத்து விடயங்களும் அறிவியலாலே விளக்கப்பட்டுள்ளது.
மனிதன் சுவாசித்தல் மற்றும் சரியான உணவை உட்கொள்வதன் மூலம் அவனது உடலிற்கு தேவையான சக்தியைப் பெற்றுக் கொள்கின்றான். இவை அனைத்தும் அறிவியல் கோட்பாடுகள் ஊடாக விளக்கப்பட்டுள்ளன.
மனித இனத்தின் நிலைத்த தன்மைக்கு அடிப்படையாக அமையும் மருத்துவமுறைகளை கண்டுபிடித்தமையே அறிவியலின் உச்சபட்ச வளர்ச்சியாகக் கருதப்படுகின்றது. நவீன மருத்துவத்தின் தந்தையாக கிப்பாகிரட்டீஸ் போற்றப்படுகின்றார்.
அறுவைச் சிகிச்சை முறைகள், ரோபோக்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சைகள், தடுப்பூசிகள் என நவீன மருத்துவ முறைகள் இன்று புதிய பரிணாமத்தை எட்டியுள்ளன.
விவசாய வேளாண்மையில் அறிவியல்
மனிதனிற்கு உணவைத் தருவது விவசாயம். ஆரம்பகால விவசாயமுறைகள் பெரும்பாலும் மனித உழைப்பிலேயே தங்கியிருந்தன. அதன் பின்பு இடம்பெற்ற அறிவியல் ரீதியான மாற்றங்களும் கண்டுபிடிப்புக்களும் வேளாண்மையை புதிய பாதைக்கு இட்டுச் சென்றன.
பயிர்ச்செய்கை, வளர்ப்பு முறைகள், அவற்றில் பங்களிப்புச் செய்யும் காரணிகள் தொடர்பாக முறையான அறிவியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு அறிவியல் ரீதியான முடிவுகளும் கட்டமைக்கப்பட்டுள்ளன.
விவசாயத்தில் ஏற்பட்ட மாற்றங்களிற்கு உதாரணமாக விவசாய உபகரணங்களான நெல் வெட்டும் இயந்திரம், உழவு இயந்திரங்கள், நாற்று நடும் இயந்திரங்கள் போன்ற பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனைத்தவிர மண் இன்றி விவசாயம் செய்தல், உயிரியல் மற்றும் நனோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயம் செய்தல் போன்றனவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
முடிவுரை
அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தவும், மனித உயிர்களைப் பாதுகாக்கவும் அறிவியல் தரும் பயன்கள் அளப்பரியன.
அணுவாயுதங்கள் மற்றும் துப்பாக்கிகளைக் கண்டுபிடித்தல், தொழில்நுட்பத்திற்கு மனிதனை அடிமையாக்குதல் போன்ற பல தீமைகளை உருவாக்குகின்ற போதும் அறிவியல் இல்லாத உலகத்தை ஒரு மனிதனால் கற்பனை செய்யவே இயலாது.
அறிவியலின் கண்டுபிடிப்புகளை தேவையான அளவிற்கு மட்டும் பயன்படுத்தி நலம் பெற்று வாழ்வோமாக.
You May Also Like :