அன்னையர் தினம் கட்டுரை

Annaiyar Dhinam Katturai

இந்த பதிவில் “அன்னையர் தினம் கட்டுரை” பதிவை காணலாம்.

நம்மை உயிருக்கும் மேலாக நேசிக்கும் அன்னையை அன்னையர் தினத்தில் மட்டுமின்றி தினமும் போற்றி வணங்க வேண்டும்.

அன்னையர் தினம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. அன்னையர் பெருமை
  3. அன்னையர் தினம்
  4. அன்னையர் சிறப்பு
  5. குழந்தைகளின் கடமை
  6. முடிவரை

முன்னுரை

“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்ˮ என ஒளவைப் பாட்டியார் தனது நீதி நூல்களில் ஒன்றான கொன்றை வேந்தனில் குறிப்பிட்டுள்ளார். இதன் பொருள் யாதெனில் அன்னையர் தான் நாம் இவ்வுலகில் கண்ணால் காணும் முதல் தெய்வமாகும்.

அன்னை தான் இவ்வுலகில் நமக்கு கிடைத்த பெறுமதி மிக்க உறவாகும். அன்னையர்கள் பல வித சவால்களைச் சந்தித்து அவை எல்லாம் எதிர்த்துப் போராடி சாதனை படைத்து வருகின்றனர். இத்தகைய போற்றதற்குரிய அன்னையர்களுக்காகக் கொண்டாடப்படும் தினமே அன்னையர் தினமாகும்.

அன்னையர் தினமானது உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகின்றது. அன்னையர் தினம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

அன்னையர் பெருமை

பெண்கள் ஒரு தாயாக⸴ சகோதரியாக⸴ தாரமாக⸴ தோழியாக⸴ இல்லத்தில் உள்ளவர்களை பக்குவப்படுத்தும் பாட்டியாக⸴ வழி நடத்திச் செல்லும் ஆசானாக இப்படி எத்தனையோ பாத்திரங்களை வகித்தாலும் அன்னை என்ற பாத்திரமே மிக உன்னதமான பாத்திரமாகும்.

கருவிலேயே பல சவால்களையும் எதிர்ப்புகளையும் தாண்டி இந்த சமூகத்திற்கு பெறுமதி மிக்க குழந்தைகளைத் தருபவர்கள் அன்னையர்களே. எல்லா உறவுகளையும் ஒன்றிணைத்து தன்நலம் கருதாது வாழும் பெண் தெய்வங்களே அன்னையர்கள் ஆவர்.

அன்னையர் தினம்

அன்னையர் தினம் பழங்காலத்தில் தாய்க் கடவுளுக்கு வசந்த விழாவாகக் கொண்டாட பெற்றதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

16ஆம் நூற்றாண்டில் கிரீஸ் நாட்டில் தான் MOTHERING SUNDAY என்ற நாள் முதன் முதலில் கொண்டாடப்பட்டது.

அமெரிக்காவில் வாழ்ந்த மரியா ஜார்விஸ் என்ற பெண்மணியின் தாயன்பை அடியொட்டியே அன்னையர் தினம் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகின்றது.

அன்னையர் சிறப்பு

இந்த உலகில் அன்னையின் அன்பிற்கும் பண்பிற்கும் வேறெதுவும் இல்லை என்றால் அது மிகையாகாது. கருவறைக்குள் 280 நாட்கள் வளரும் சிசுவின் உயிருக்கு தாயின் ரத்தத்தில் உள்ள சத்துக்கள் தான் தொப்புள் கொடி மூலம் கிடைக்கின்றன.

ஆணோ பெண்ணோ என அறியாத போதிலும் தன் குழந்தையைப் பத்திரமாய் சுமந்து உலகின் அழகை பார்க்க வைக்கும் உன்னத உறவு தான் அன்னை.

இவ்வுலகில் அன்னையரை தவிர வேறு யாராலும் அதீத அன்பை கொடுத்து விட முடியாது. அன்பின் அடையாளமாய் திகழ்பவர்கள் அன்னையர்களே.

குழந்தைகளின் கடமை

எம்மைப் பாராட்டி⸴ சீராட்டி வளர்த்த அன்னைக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். இந்த சமூகத்தில் தான் பெற்ற பிள்ளைகள் பண்புடனும்⸴ பணிவுடனும்⸴ நற்பழக்கவழக்கங்களுடனும் வளர்ந்து வாழ்வில் உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும் என்பதே ஒவ்வொரு அன்னையரதும் உச்சபட்ச விருப்பமாகும். அதனை நிறைவேற்றி அன்னையரை மகிழ்விப்பது நமது தலையாய கடமையாகும்.

முடிவு

“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்ˮ என்ற திருவள்ளுவரின் குரலுக்கு ஏற்ப நாம் கல்வி கற்று வாழ்வில் முன்னேறி அன்னைக்குப் பெருமை சேர்க்க வேண்டும்.

நம்மைப் பெற்றெடுத்த தாயை அன்னையர் தினத்தில் மட்டுமல்லாது என்றென்றும் போற்றி வணங்கி மகிழ்வோம்.

You May Also Like :

அம்மா கவிதை வரிகள்

தமிழின் இனிமை பற்றிய கட்டுரை