ஒரு மனிதன் கொண்டிருக்கக் கூடிய உணர்ச்சிகளுள் அச்சம் என்பதும் ஒன்றாகும். இந்த உணர்ச்சி ஒருவனிடம் அதிகமாக காணப்படுவது நன்றன்று. ஏனெனில் தைரியமாக இருப்பவரே ஏனைய அனைத்து குணங்களையும் சிறப்பாக பெற்றுக் கொள்ள முடியும்.
Table of Contents
அச்சம் தவிர் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- அச்சம் என்றால் என்ன
- பாரதியாரின் கருத்து
- தன்னம்பிக்கையின் அவசியம்
- தேவையில்லாத அச்சம் தவிர்த்தல்
- முடிவுரை
முன்னுரை
அச்சம் என்பது மடமை என பல சான்றோர்கள் கருது தெரிவித்துள்ளனர். அச்சமானது மனச்சோர்வினையும், மன உறுதியற்ற தன்மையையும் ஏற்படுத்தி, மனித வாழ்வில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் சீர்குலைக்கும் ஒன்றாகும்.
எனவே எவ்வாறு அச்சத்தில் இருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும் என்பதனை இக்கட்டுரையில் பார்க்கலாம்.
அச்சம் என்றால் என்ன
அச்சம் என்பது மனிதனின் அடிப்படையான ஒரு உணர்ச்சியாகும். இது பயம் என்றும் அடையாளப்படுத்தப்படுகின்றது. அதாவது விபரீத கற்பனையினால் முழுக்க முழுக்க எம்முடைய மனதில் உருவாகும் மன ஓட்டம் தான் பயமாகும்.
இந்த உணர்வு பயம் என பொதுமைப்படுத்தப்பட்டாலும் மன அழுத்தம், அச்சம், படபடப்பு, அழுத்தம், பதற்றம், கவலை போன்ற வெவ்வேறு வகைகளில் வெளிப்படுவதனை காணலாம்.
பாரதியாரின் கருத்து
பாரதியாரின் புதிய ஆத்திச்சூடியில் மிக முக்கிய புள்ளியாக இடம் பிடித்தது இந்த அச்சம் தவிர் என்ற சொற்றொடரே ஆகும்.
அடிமைத்தனமும், அச்சமும் உச்சத்தில் கொண்டோரை ஊமைச்சனங்கள் என உரக்க சொன்னவர் எம்முடைய பாரதியார்.
“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே……” என்ற வரிகளின் மூலம் எதற்கெடுத்தாலும் பயப்படுவது கூடாது எனவும் தீயன கண்டு அஞ்சுவது கூடாது எனவும் தேவையில்லாத அச்சத்தை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தன்னம்பிக்கையின் அவசியம்
தன்னம்பிக்கை இல்லாதவன் தான் நாத்திகன் என குறிப்பிட்டுள்ளார் சுவாமி விவேகானந்தர். இதன்படி ஒரு மனிதன் தன்நம்பிக்கையுடன் எதுவாக எண்ணுகின்றானோ அதுவாகவே மாறிவிடுகின்றான்.
மாறாக அச்சப்படும் போது ஒரு மனிதனுடைய அறிவு, திறமை, ஆற்றல் போன்ற அனைத்தும் குன்று விடுகின்றன. அதாவது அச்சம் என்பது ஒரு மனிதனின் வளர்ச்சி, ஆரோக்கியம், மகிழ்ச்சி போன்றவற்றுக்கு பெரிய ஒரு தடைகள் என்றே குறிப்பிட வேண்டும்.
ஆகவே அச்சத்தை முழுமையாக அகற்றினால் தான் முன்னேற்றத்துக்கான வழி பிறக்கும். எனவே தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதே அச்சத்தை தவிர்ந்து கொள்வதற்கான ஒரே வழி என குறிப்பிடலாம்.
தேவையில்லாத அச்சம் தவிர்த்தல்
வலிமையே வாழ்வு, பலவீனமே மரணம் என குறிப்பிடலாம். ஒருவன் நீச்சல் பழக வேண்டுமென்றால் குளத்தில் குதித்துத்தான் ஆக வேண்டும். எனவே நாம் ஒவ்வொருவரும் அச்சம் தவிர்ந்து செயல்பட வேண்டுமாயின், எமது மனசாட்சியின் வழி செயற்படுதல் அவசியமாகும்.
பிறர் தவறாக எண்ணி விட கூடும் என்பதற்காக எமது செயற்பாடுகளை மட்டுப்படுத்தி விடக் கூடாது. தேவையில்லாத அச்சம் அனைத்தையும் களைந்து, எமக்கு நன்மை பயக்கக்கூடிய அனைத்து செயல்களையும் நாம் செய்து முடிக்க வேண்டும்.
காந்தி அவர்கள் மகாத்மாவாக மாறியமைக்கு இந்த அச்சம் தவிர்ந்தமையும், மனசாட்சியின் வழி நடந்தமையுமே காரணமாகும்.
முடிவுரை
இன்று ஒவ்வொரு மனிதனும் பல்வேறு சாதனைகளை புரிந்தவனாகவே இருக்கின்றான். இவர்களுடைய சாதனைகளுக்கு விடாமுயற்சியும், உறுதியான மனப்பான்மையும், தன்னம்பிக்கையும், தேவையில்லாத அச்சங்களை களைந்தமையுமே காரணமாகும்.
எனவே நாமும் இவற்றை புரிந்து கொண்டு இந்த அச்சத்தை தவிர்த்து, எமது இலட்சியங்களை முன்னோக்கி பயணிக்க வேண்டும்.
Read More: பெண்ணின் பெருமை தமிழ் கட்டுரை