சமுதாயத்தில் மனிதன் சுமூகமாக வாழத் தேவையான நிலையை உரிமை என அழைக்கின்றோம். உரிமைகள் இல்லையெனில் மனிதன் நலமாக வாழ இயலாது.
மனித உரிமைகள் அடிப்படை உரிமைகள், நாம் மனிதர்கள் என்பதாலேயே நம் அனைவருக்கும் சொந்தமானது. அவை நமது சமூகத்தில் நியாயம், கண்ணியம், சமத்துவம் மற்றும் மரியாதை போன்ற முக்கிய விழுமியங்களை உள்ளடக்குகின்றன.
துஷ்பிரயோகம், புறக்கணிப்பு மற்றும் தனிமைப்படுத்தப்படுவதை எதிர்கொள்ளும் முக்கியமான பாதுகாப்பு வழிமுறையாக மனித உரிமை காணப்படுகின்றது.
மனித உரிமைகளில் வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம், அடிமைத்தனம் மற்றும் சித்திரவதையில் இருந்து விடுதலை, கருத்து மற்றும் கருத்துச் சுதந்திரம், வேலை மற்றும் கல்விக்கான உரிமை மற்றும் பலவும் அடங்கும்.
பாகுபாடு இல்லாமல் இருத்தல் போன்றவை அனைவருக்கும் உரித்தான மனித உரிமைகளில் சிலவாகும்.
இரண்டாம் உலக மகாயுத்தம் நடைபெற்றபோது நடந்த சொத்து இழப்பு, படுகொலைகள், அட்டுழியங்கள் மற்றும் மனிதப் பேரழிவுகளின் பின்னர் தோன்றிய ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டதே இந்த மனித உரிமைப் பிரகடனமாகும்.
Table of Contents
மனித உரிமைகள் என்றால் என்ன
இனம், பாலினம், தேசியம், மொழி, மதம் அல்லது வேறு எந்த அந்தஸ்தையும் பொருட்படுத்தாமல் அனைத்து மனிதர்களுக்கும் உள்ளார்ந்த உரிமைகள் ஆகும்.
மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க முடியாத, மறுக்க முடியாத உரிமைகளை மனித உரிமைகள் எனலாம்.
அதாவது மனித உரிமை என்பது, ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப் பெறவேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும்.
மனித உரிமையின் முக்கியத்துவம்
கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர் போன்ற அடிப்படை அம்சங்கள் ஒருவன் மனிதனாக வாழ்வதற்குரிய அடிப்படை உரிமைகளாகும். பேச்சுரிமை, வாழ்வுரிமை, கருத்துச் சுதந்திரம், எழுத்துரிமை போன்ற தனி மனித சுதந்திரம் பாதுகாக்கப்பட மனித உரிமைகள் முக்கியமானதாகும்.
ஒரு ஜனநாயகச் சமுதாயத்தைப் பாதுகாப்பதற்கும் பிரஜைகளின் நலனை விருத்தி செய்வதற்கும்⸴ நீதியை நிலைநாட்டவும் மனித உரிமைகள் முக்கியமானவையாகும்.
மனித உரிமைகள் வாழ்க்கை, சமத்துவம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு உத்தரவாதமளிப்பதற்கு இன்றியமையாததாகும்.
மனித உரிமைகளே அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள், கல்வி போன்றவற்றைப் பூர்த்திசெய்து தான் விரும்பும் வாழ்க்கையை மகிழ்வாக வாழ வழிவகுக்கின்றன.
சர்வதேச மனித உரிமைகள் தினம்
1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி 58 நாடுகள் இணைந்த ஐ.நா சபையில் 48 நாடுகளின் ஒத்துழைப்புடன் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் அறிவிக்கப்பட்டது.
உலக மக்கள் அனைவருக்கும் வாழ்வதற்கான உரிமை உண்டு என்ற மனித உரிமைகள் பிரகடனத்தை அமுல்படுத்தியது. அதன் பின்னர் 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதியை சர்வதேச மனித உரிமைகள் தினமாக ஐ.நா அதிகாரப் பூர்வமாக அறிவித்தது.
ஒருவனின் உரிமையைப் பறிக்க யாருக்கும் உரிமையில்லை. உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் சமமான உரிமைகளும், அடிப்படைச் சுதந்திரமும் உள்ளது. இவற்றை உலகிற்கு உரக்கச் சொல்லும் நாள்தான் சர்வதேச மனித உரிமைகள் தினமாகும்.
மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதனை அனைத்துத் தரப்பினரிடமும் வலியுறுத்துவதடன் ஒவ்வொரு மனிதனும் தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ விடவேண்டும் என்பதே மனித உரிமைகள் கொண்டாடப்படுவதன் பிரதான நோக்கமாகும்.
மொழி, சாதி, இனம், பொருளாதாரம் உள்ளிட்ட புறக்காரணிகளால் மனித உரிமைகள் மீறப்படக் கூடாது இதனை ஒவ்வொரு நாடும் உறுதி செய்ய வேண்டும்.
Read more: மனித உரிமைகளின் முக்கியத்துவம்