கண்மாய் என்றால் என்ன

கண்மாய்

கண்மாய் முக்கிய நீராதாரங்களில் ஒன்றாக உள்ளன. மனித முயற்சியின்றி இயற்கையாகவே சூழவுள்ள உயர் நிலத்தால் அடைக்கப்பட்ட நீர் நிலை ஆகும்.

சங்க கால அரசர்கள் ஏரி, குளங்கள், கண்மாய், நீர்நிலைகள் மாசுபடாமல் இருப்பதற்காக, ‘முந்நீர் விழவு’ என்ற விழாவை எடுத்து நீர்நிலைகளை பாதுகாத்துள்ளனர்.

ஒவ்வொரு நீர்நிலையின் கரையிலும் காவல்தெய்வங்கள் வீற்று இருக்கும். அதனால் கரைகளில் நீர்நிலைகளில் காலில் செருப்பு அணிந்து மக்கள் செல்வதில்லை.

மதுரையில் சிறுதூர் ஊரிலுள்ள கண்மாய் மீது வெளியாட்கள் யார் காலில் செருப்போடு நடந்தாலும், மக்கள் உடனடியாக அவர்களை தடுத்து, கண்மாயை கடக்கும் வரை கையில் செருப்பை எடுத்துக் கொண்டு நடக்கும்படி வற்புறுத்துவார்கள்.

  • பெரியகுளம் பெரியகண்மாய்
  • கைலாசபட்டி பாப்பிகுளம் கண்மாய்
  • தாமரைக்குளம் கண்மாய்
  • நல்லகருப்பன்பட்டி நாரணன்குளம் கண்மாய்
  • சில்வார்பட்டி சிறுகுளம் கண்மாய்
  • ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாய்
  • சிந்துவம்பட்டி ஒட்டக்குளம் கண்மாய்
  • பொம்மிநாயக்கன்பட்டி புதுக்குளம் கண்மாய்
  • குள்ளப்புரம் பெரியகண்மாய்
  • மருகால்பட்டி சிறுகுளம் கண்மாய்

எனப் பல கண்மாய்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

பல விவசாயிகளின் வாழ்வாதாரமே கண்மாய்கள் தான். கண்மாய்கள் ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளை போன்றவற்றால் அழியும் நிலைக்கு வந்து விட்டது.

கண்மாய் என்றால் என்ன

மனித முயற்சியின்றி இயற்கையாகவோ அல்லது மனித முயற்சியாலோ சூழவுள்ள உயர் நிலத்தால் அடைக்கப்பட்ட நீர் நிலை கண்மாய் ஆகும்.

கண்வாய் -அல்லது கண்மாய் என்றால் பாசனத்திற்கான நீரைத்தேக்கி வைக்கப் பயன்படும் ஒரு நீர்நிலை ஆகும். இதிலிருந்து நீரை வெளியேற்ற கண்கள் போன்ற மதகு பயன்பட்டதால் ‘கண்வாய்‘ என்று பெயர் பெற்றது.

கண்ணாறுகளை உடையது ‘கண்மாய்’ என்று தமிழர்கள் பெயரிட்டு அழைத்தனர்.

இராஜசிங்கமங்கலம் அல்லது ஆர்.எஸ்.மங்கலம்

நீர் மேலாண்மையில் புகழ் பெற்ற பாண்டிய மன்னர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் முதன்முதலில் நதி நீர் இணைப்பை செயல்படுத்தியது மங்கலம் என அழைக்கப்படும் இராஜசிங்கமங்கலத்திலுள்ள பெரிய கண்மாயில் தான்.

தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய கண்மாய்களில் ஒன்று ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய் ஆகும்.

இந்த கண்மாய் நீர்வரத்துக்காக வைகை, சருகணி ஆகிய ஆறுகளில் இருந்து இரு கால்வாய்களை வெட்டி இணைத்துள்ளனர்.

ராமநாதபுரம்-நயினார்கோவில் சாலையில் பாண்டியூருக்கு அருகில் வைகை ஆற்றில் இருந்து செல்லும் கீழ நாட்டார் கால்வாய் மூலம் தண்ணீர் ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய்க்கு செல்கிறது.

இக்கண்மாயின் நீர்பிடிப்பு பரப்பு 147 சதுர மைல் ஆகும். இந்த கண்மாய் நிரம்பும்போது அதில் இருந்து 72 கண்மாய்களுக்கு நீர் செல்லவும், உபரி நீர் கடலுக்கு செல்லவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த கண்மாயில் விவசாயிகளின் பாசன வசதிக்காக சுமார் 1 கி.மீ தூரத்திற்கு ஒரு மடை வீதம் 20 மடைகள் அமையப் பெற்றுள்ளது.

மற்றொரு சிறப்பு இந்த கண்மாயில் 1,205 மி.க அடி தண்ணீரை தேக்கக் கூடிய கொள்ளளவும், சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பும் கொண்டதும் ஆகும்.

இந்த கண்மாயில் தேக்கப்படும் தண்ணீர் மூலம், 12,142 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றன. இந்த கண்மாய் சுமார் 20 கி.மீ தூரமுள்ளது.

இந்த கண்மாய் பாசனத்தை நம்பி ஆர்.எஸ்.மங்கலம், செட்டிய மடை, பிச்சனா கோட்டை, ரெகுநாத மடை, நெடும் புளிக்கோட்டை, பொட்டக்கோட்டை, பனிக்கோட்டை, புலிவீர தேவன்கோட்டை, இருதயாபுரம், கீழக்கோட்டை, சிலுக வயல், இரட்டையூரனி, வில்லடி வாகை, புல்ல மடை, வல்லமடை உள்ளிட்ட கிராமங்கள் மட்டுமின்றி

அருகேயுள்ள 72 சிறு கண்மாய் பகுதிகளான சோழந்தூர், வடவயல், மங்கலம், அலிந்திக்கோட்டை உள்ளிட்ட மற்றும் பல கிராமங்களும் உள்ளன.

Read more: நீர் மேலாண்மை கட்டுரை

நீர் வளத்தை பாதுகாப்போம் கட்டுரை