உலக வெப்பமயமாதல் கட்டுரை

Ulaga Veppamayamathal Katturai In Tamil

இந்த பதிவில் “உலக வெப்பமயமாதல் கட்டுரை” பதிவை காணலாம்.

இன்று இயற்கைக்கு எதிராக மனிதன் திருப்பியுள்ளதால் இயற்கையும் மனிதனுக்கு எதிராக திரும்பியுள்ளது.

மனிதர்கள் வாழ அத்தனை வளங்களையும் நமக்கு தந்துள்ள இந்த பூமியை பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும்.

  • உலக வெப்பமயமாதல்
  • Ulaga Veppamayamathal Katturai In Tamil
இயற்கையை பாதுகாப்போம் கட்டுரை

உலக வெப்பமயமாதல் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. ஏன் பூமி வெப்பமடைகிறது
  3. பூகோள வெப்பமடைதலின் விளைவுகள்.
  4. பூகோள வெப்பமயமாதலை தடுக்கவேண்டியதன் அவசியம்
  5. முடிவுரை

முன்னுரை

அண்மைக்காலங்களாக வெப்பத்தின் மிகுதியால் அவதிப்படாத மனிதர்களே இல்லை எனும் அளவிற்கு பூமியின் வெப்பநிலை அதிகரித்து இருக்கிறது.

இன்றைய உலகில் அதிக பாதிப்புக்களுக்கு காரணமாக இந்த வெப்பநிலை உயர்வு இருக்கிறது.

வெப்பத்தின் உயர்வால் மனிதனும் பிற உயிரினங்களும் தாவரங்களும் பாதிப்பை உணர்கின்றன.

வெப்பநிலை இயல்பாக இருந்த போது பூமியில் உயிரினங்களின் நிலவுகை சாத்தியமாக இருந்தது. இந்த இயல்பு நிலை பாதிக்கப்பட மனிதர்களே காரணமாக இருக்கின்றனர்.

இயற்கையின் சமநிலை பாதிக்கப்படுவதால் மனிதகுலம் அழிவின் விழிம்பில் இருக்கிறது இதை எங்கனம் காப்பது என்பது தொடர்பாக இக்கட்டுரையில் நோக்க முடியும்.

ஏன் பூமி வெப்பமடைகிறது

பூமிக்கு வெப்பத்தையும் ஒளியையும் வழங்குவது சூரியன் எனும் சக்தி முதல் சூரியனில் இருந்து வரும் வெப்பம் புவி மேற்பரப்பை நோக்கி வருகின்றது.

அதில் ஒரு பகுதியை தரையும், தாவரங்களும், நீரும் அகத்துறிஞ்சும் ஒரு பகுதி வான்வெளியை நோக்கி தெறிக்க செய்யப்படும் இது ஒரு சீரான சமநிலையில் இடம்பெறும்.

மற்றும் பூமிக்கு உள்வரும் கதிர்களில் பாதகமான வெப்ப கதிர்களை வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படை தடுத்து நிறுத்துகிறது. மற்றும் இந்த சீரான தெறித்தல் செயன்முறைகள் இடம்பெறுவதனால் பூமி வெப்பமடையாது சீராக இருக்கும்.

ஆனால் இன்று மனித செயற்பாடுகளால் வெளிவிடப்படும் பச்சை வீட்டு வாயுக்களான “குளோரோ புளோரோ காபன், காபனீரொட்சைட், மீதேன்” போன்ற வாயுக்களால் வெளிச் செல்ல வேண்டிய வெப்பம் தடுக்கப்படுவதனால் பூமியில் வெப்பம் தேங்கி உயர்வடைகிறது.

இதனை பச்சை வீட்டு விளைவு என்று கூறுவார்கள். இந்த விளைவே பூமியின் வெப்பம் உயர்வதற்கு காரணமாக உள்ளது. 800 ஆயிரம் வருடங்களாக சீராக இயங்கி வந்த இந்த சமநிலை கடந்த நூற்றாண்டுகளாக குழம்பியுள்ளது.

பூகோள வெப்பமடைதலின் விளைவுகள்

“என்பிலதனை வெயில் போல காயுமே அன்பிலதனை அறக்கடவுள் வருத்தும்”

எனும் குறளில் கூறப்படதனை போல மனிதர்கள் செய்கின்ற தவறான வேலைகளுக்கேற்ப வெப்பம் தன் வேலையை காட்டுகிறது இது இயற்கையின் விதி.

கடந்த 20 வருடங்களாக பூமியின் நிலை மிகவும் மோசமடைந்து வருகின்றது. கோடைகாலங்களில் வெப்பநிலை உச்சம் தொடுகின்றது. இதனால் நீர் தட்டுப்பாடு அதிகமாகின்றது. குடிப்பதற்கான நீர் மற்றும் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதனால் உணவு தட்டுப்பாடுகள் உலக அரங்கில் அரங்கேறி வருகின்றது.

வெப்பநிலை உயர்வின் காரணமாக காலநிலை மாற்றம் உருவாகின்றது கடுமையான வெள்ளம், வரட்சி நிலமைகள், புயல்தாக்கம், காட்டுத்தீ போன்ற பேரிடர்கள் உருவாகி மனிதர்களை கொல்வதுடன் அவர்கள் இயல்பு வாழ்க்கையினையும் கேள்விக்குறி ஆக்குகின்றன.

வெப்பம் உயர்வடைவதனால் துருவ பிரதேசங்களான ஆக்டிக் மற்றும் அந்தாட்டிக் பிரதேச பனி கவிப்புகள் உருகுவதனால் கடல்நீர் மட்டம் உயர்வடைகிறது. கடல் நீர்மட்டம் உயர்வடைவதனால் சிறிய சிறிய தீவுகள் கடலில் மூழ்கும் அபாயமானது உருவாகியுள்ளது. உதாரணமாக “மாலைதீவு, துவாளு” போன்ற தீவுகள் மூழ்கும் அபாயத்தில் உள்ளன.

வெப்ப உயர்வினால் காடுகளில் வாழும் உயிரின பல்வகைமைகள் அழிவடைந்து வருகின்றன. மற்றும் கடலின் உயிர்பல்வகைமையான முருகை கற்பாறைகள் அழிவடைய இந்த வெப்பமயமாதல் தான் காரணமாகும்.

இவ்வாறு பல பாதக விளைவுகளை பூமியில் பூகோள வெப்பமயமாதல் நிகழ்த்துகின்றது.

பூகோள வெப்பமயமாதலை தடுக்க வேண்டியதன் அவசியம்

மனிதர்கள் வளர்ச்சி எனும் பெயரில் மேற்கொள்ளும் இலாபநோக்குடைய
தொழில்நுட்ப புரட்சிகள் இயற்கைவளங்களையும் பூமியையும் பாதகமான நிலைக்கு தள்ளி இருக்கிறது.

தொழில்நுட்பத்திலும் விஞ்ஞானத்திலும் உச்சம்தொட்ட மனிதனுக்கு இயற்கையை அழிப்பதனாலும் மாசுபடுத்துவதனாலும் அது தான் வாழும் பூமிக்கே கேடு என்பதனை அறிந்து கொள்ள முடியவில்லை.

இயற்கை அழிவுகள் கைமீறி போயுள்ள இந்த காலத்தில் ஒரு சிலர் தான் இந்த நிலை கண்டு வேதனை கொள்கிறார்கள் போராடுகிறார்கள் மற்றவர்கள் இது பற்றி அக்கறை கொள்வதாய் இல்லை.

பூமி வெப்பமடைவதனை தடுத்தாக வேண்டும். இல்லையேல் இது மனிதனுக்கு பேரழிவை உண்டு பண்ணும்.

  • பூமியின் வெப்பத்தை உயர்த்தும் காபன் வாயுக்களை கட்டுப்படுத்த வேண்டும்.
  • சுழலுக்கு தீங்கான செயற்பாடுகளை தடுக்க வேண்டும்.
  • இயற்கையை பாதுகாக்க வேண்டும்.
  • காடுகளை மீள உருவாக்க வேண்டும்.
  • நீர்வளத்தை பாதுகாக்க வேண்டும்

காடுகளே பூமியை குளிர்விக்கும் என்பது விஞ்ஞானம் கண்ட உண்மை.

பூகோளம் வெப்பமடைதலை தடுக்க “IPCC” மற்றும் “United Nations” போன்றன இணைந்து பூகோள வெப்பமயமாதலை தடுக்க உலகளவில் பல மாநாடுகளை நடாத்தி நாடுகளை விழிப்படைய செய்கின்றன.

இனிவரும் ஆண்டுகளை பூகோள வெப்பமயமாதலை தடுக்கும் ஆண்டுகளாக உலக நாடுகள் செயற்பட தீர்மானிக்க வேண்டும் என “United nations” அழைப்பு விடுத்திருக்கிறது.

முடிவுரை

மனிதர்கள் வாழ அத்தனை வளங்களையும் அற்புதமான இயற்கையையும் நல்ல காலநிலை தன்மைகளையும் கொடையாக தந்திருக்கின்ற இந்த பூமி ஒரு அபூர்வம். இதனை காப்பது இங்கு வாழ்பவர்களது தலையாய கடனாகும்.

இந்த பூமி மாசடைந்தும் வெப்பமடைந்தும் செல்வதும் பிற உயிர்கள் அழிவதும் தாவரங்கள் அழிவடைவதும் பூமியை சுடுகாடு போல மாற்ற வல்லது.

ஆகவே மனிதர்கள் இயற்கையையும் பூமியையும் நேசிக்க கற்று கொள்ள வேண்டும் பிற அனைத்தும் தானாகவே சாத்தியமாகும்.

You May Also Like :

நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை

ஐம்பூதங்கள் பற்றி கட்டுரை