ஆகுபெயர் வகைகள் எடுத்துக்காட்டு

aagu peyar in tamil

ஆகுபெயர் என்றால் என்ன

ஒரு பொருளின் இயற்பெயர் அதனோடு சம்பந்தமுடைய வேறொரு பொருளிற்குத் தொன்றுதொட்டு வழங்கிவரின் அது ஆகுபெயர் எனப்படும்.

பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் அறுவகை இயற்பெயர்களும் அவற்றோடு சம்பந்தமுடைய பிற பொருள்களுக்கு ஆகிவரும்போது, அது ஆகுபெயராகின்றது.

ஆகு பெயர்கள் அடிப்பைடயில் ஆறு வகைப்படும். இவற்றின் விரிவு பதினாறாகும்.

1. பொருளாகு பெயர்

பொருளின் பெயர் அதனது சினைக்கு ஆகி வருமாயின் அது பொருளாகு பெயர் எனப்படும்.

எடுத்துக்காட்டு: மல்லிகை சூடினான்.

மல்லிகை என்பது பொருளின் பெயர். அது அதன் உறுப்பாகிய மலருக்கு ஆகி வந்துள்ளது.

2. இடவாகு பெயர்

இடத்தின் பெயர் இன்னொன்றுக்காய் ஆகி வருவது இடவாகு பெயராகும்.

எடுத்துக்காட்டு – இந்தியா வென்றது.

இந்தியா என்பது இந்தியாவை குறிக்காமல் இந்தியாவுக்காக விளையாடும் இந்திய அணியை குறித்து நிற்கின்றது.

3. காலவாகு பெயர்

காலப்பெயர் காலத்தோடு தொடர்புடைய வேறு பொருளுக்கு ஆகி வருவது காலவாகுபெயர் எனப்படும்

எடுத்துக்காட்டு – கார்த்திகை பூத்தது.

இங்கு கார்த்திகை என்னும் காலப்பெயர், அக்காலத்தில் பூக்கும் காந்தள் செடிக்கு ஆகி வருவதால் காலவாகு பெயர் ஆயிற்று.

4. சினையாகு பெயர்

ஒரு சினைப் பொருளின் பெயர் அதன் முதற்பொருளுக்கு ஆகி வருவது சினையாகு பெயர் எனப்படும்.

எடுத்துக்காட்டு – தலைக்கு ஒரு பழம் கொடு.

தலை என்பது உடலின் ஒரு உறுப்பு பெயர் ஆனால் இங்கு முழு மனிதரை குறிக்கின்றது.

5. பண்பாகு பெயர்

ஒரு பண்பின் பெயர் அப்பண்புடைய பொருளுக்கு ஆகி வருவது பண்பாகு பெயர் எனப்படும். இது குணவாகு பெயர் என்றும் அழைக்கப்படும்.

எடுத்துக்காட்டு – மஞ்சள் பூசினாள்.

மஞ்சள் என்னும் பண்பு, அவ்வண்ணத்திலுள்ள கிழங்குக்கு ஆகிவந்தது.

6. தொழிலாகு பெயர்

தொழில்பெயர் அதனோடு தொடர்புடைய வேறு பெயருக்கு ஆகி வருவது தொழிலாகு பெயர் எனப்படும்.

எடுத்துக்காட்டு – வற்றல் தின்றான்.

வற்றல் என்னும் தொழிற்பெயர் வற்றிய உணவுப்பொருளுக்கு ஆகி வந்தது.

7. எண்ணலளவையாகு பெயர்

எண்ணின் பெயர் அதனோடு தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது எண்ணலளவை ஆகுபெயர் எனப்படும்.

எடுத்துக்காட்டு – நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.

பொதுவாக நான்கு, இரண்டு என்பன எண்ணிக்கையைக் குறிப்பிடுவன. ஆனால் அவை இங்கு நாலடியார், திருக்குறள் என்னும் இரண்டனுக்கும் ஆகிவந்தன.

8. எடுத்தளவை ஆகுபெயர்

எடுத்தல் அளவைப் பெயர், தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது எடுத்தல் அளவை ஆகுபெயர் ஆகும்.

எடுத்துக்காட்டு – இரண்டு கிலோ வாங்கினேன்.

இங்கு கிலோ என்னும் எடுத்தலளவை பெயர் அவ்வளவைக் கொண்ட பொருளுக்கு ஆவதால் எடுத்தலளவை ஆகுபெயர் எனப்படுகிறது.

9. முகத்தலளவை ஆகுபெயர்

முகத்தல் அளவைப் பெயர், தொடர்புடைய பொருளுக்கு ஆகிவருவது முகத்தல் அளவை ஆகுபெயர் எனப்படும்.

எடுத்துக்காட்டு – விளக்கு எரிய ஒரு லீற்றர் போதும்.

இங்கு லீற்றர் என்ற முகத்தல் அளவை பெயர் எண்ணெயைக் குறிக்கிறது. அதாவது முகத்தல் அளவைப்பெயர் தொடர்புடைய பொருளைக் குறிக்கின்றது.

10. நீட்டல் அளவை ஆகுபெயர்

நீட்டல் அளவைப் பெயர் அதனோடு தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது நீட்டலளவை ஆகுபெயர் எனப்படும்.

எடுத்துக்காட்டு – உடுப்பது நான்கு முழம்.

இந்த வாக்கியத்திலே முழம் என்னும் நீட்டலளவைப் பெயர் அவ்வளவுடைய துணிக்கு ஆகி வருவதால் நீட்டலளவை ஆகுபெயர் எனப்படுகிறது.

11. சொல்லாகு பெயர்

சொல் பொருளுக்கு ஆகி வருவது சொல்லாகு பெயர் ஆகும்.

எடுத்துக்காட்டு – நண்பன் என் சொல்லைக் கேட்பான்.

இங்கு இடம்பெற்ற சொல் என்பது எழுத்துகளாலான சொல்லைக் குறிப்பது. ஆனால் ‘நண்பன் என் சொல்லைக் கேட்பான்’ என்னுமிடத்தில் சொல் என்பது அறிவுரையைக் குறித்து நிற்கிறது.

12. தானியாகு பெயர்

ஓர் இடப்பெயர். அவ்விடத்திலுள்ள பொருளுக்கு ஆகிவருவது இடவாகுபெயராகும். ஓரிடத்திலுள்ள பொருள் அவ்விடத்திற்கு ஆசி வருவது தானியாகுபெயர் எனப்படும்.

எடுத்துக்காட்டு – அடுப்பிலிருந்து சோற்றை இறக்கு.

இங்கு சோறு என்பது அது இருக்கின்ற பாத்திரத்தைக் குறிக்கின்றது. அதாவது இடத்தில் உள்ள பொருளின் பெயரால் அழைக்கப்படுகின்றது.

இங்கு தானி எனப்படுவது இடத்தைக் குறிக்கின்றது.

13. கருவியாகு பெயர்

கருவியின் பெயர் அதனோடு தொடர்புடைய வேறு பெயருக்கு ஆகி வருவது கருவியாகு பெயர் எனப்படும்.

எடுத்துக்காட்டு – வானெலி கேட்டு மகிழ்ந்தனர்.

வானொலி என்னும் கருவி, அதன் காரியமாகிய நிகழ்ச்சிகளுக்கு ஆகி வந்தது.

14. காரியவாகு பெயர்

ஒரு காரியத்தின் பெயர், அது உண்டாவதற்குக் காரணமான கருவிப் பொருளுக்கு ஆகிவருவது காரியவாகுபெயர் எனப்படும். இது கருவியாகு பெயர்க்கு எதிர்மறையாகும்.

எடுத்துக்காட்டு – எழுத்தாளர் தரமான இலக்கியம் படைக்க வேண்டும்.

இலக்கியம் என்பது காரியம். இங்கு இலக்கியம் என்பது தரமான சிறுகதைக்கு காரியமாக ஆகி வருகிறது.

15. கருத்தாகுபெயர்

கருத்தன் என்ற பெயர் படைத்தவரான கருத்தாவிற்கு ஆகி வருவது கருத்தாகுபெயர் ஆகும்.

எடுத்துக்காட்டு – கம்பனைக் கற்றேன்.

கம்பன் என்பது கருத்தா ஆகும். கம்பன் படைத்த நூலாகிய கம்பராமாயணத்தைக் கற்றேன் என்பதே பொருளாகும்.

16. உவமையாகு பெயர்

உவமேயததுக்காக உவமானம் ஆகி வருவது உவமை ஆகுபெயர் ஆகும்.

எடுத்துக்காட்டு – குயில் பாடினாள்.

இங்கே உண்மையில் வந்தது பெண் பெண்ணென்ற உருவமே இங்கே குயில் என்ற உவமானம் இனிமையை குறிக்கின்றது.

You May Also Like :
நால்வகைச் சொற்கள்
ஆற்றுப்படை நூல்கள்