ஒவ்வொரு மனிதனுடைய வாழ்வும் சிறப்புறுவதற்கும், அர்த்தமுள்ள வகையில் வாழ்வதற்கும் நற்பண்புகள் என்பது முக்கியமான ஒன்றாகவே காணப்படுகின்றன.
அந்த வகையில், இன்றைய மாணவர்கள் தான் நாளைய சமுதாய தலைவர்களாக மாற முடியும். ஆகவே இந்த மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நற்பண்புகளை பற்றி அறிந்து கொள்வோம்.
Table of Contents
மாணவர்களின் நற்பண்புகள் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- ஒழுக்கம்
- நேர்மை
- நேர முகாமைத்துவம்
- சமத்துவம்
- தற்கால மாணவர்களின் நிலை
- முடிவுரை
முன்னுரை
எமது மாணவச் செல்வங்களை எதிர்காலத்தில் சிறந்த பிரஜைகளாக மாற்ற வேண்டுமாயின் அவர்களுக்கு நற்பண்புகளை கற்றுக் கொடுப்பது அவசியமான ஒன்றாகும். அந்த வகையில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நற்பண்புகள் பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.
ஒழுக்கம்
“ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்கின்றார் திருவள்ளுவர். எனவே மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய பாடசாலை சீரூடை அணிதல், ஆசிரியர்களுக்கு மதிப்பளித்தல், பெரியோரை மதித்தல், சிறுவர்களிடம் அன்பு காட்டுதல்,
பொய்-களவு போன்றவற்றிலிருந்து விலகியிருத்தல், மேலும் தீய நண்பர்களிடமிருந்து விலகி இருத்தல் போன்றவாறான ஒழுக்க விழுமியங்களை மாணவர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
நேர்மை
மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நற்பண்புகளில் நேர்மையும் முக்கியமான ஒன்றாகும். அதாவது தன்னுடைய அன்றாட செயல்பாடுகள் யாவற்றிலும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். எதற்காகவும், யாரையும் ஏமாற்றும் எண்ணம் மாணவர்களிடம் காணப்பட கூடாது.
அதாவது எண்ணங்களில் நேர்மை, பேச்சில் நேர்மை, நடத்தைகளில் நேர்மை போன்ற அனைத்து விடயங்களிலும் நேர்மையை பின்பற்றுவது மாணவர்களின் கடமையாகும்.
நேர முகாமைத்துவம்
மாணவர்களுக்கே உரிய நற்பண்புகளில் ஒன்றாகவே நேர முகாமைத்துவம் காணப்படுகின்றது. அதாவது மாணவர்கள் தங்களுடைய கல்வி நடவடிக்கைகளுக்கும், தங்களுடைய வேலைகளை இலகுபடுத்திக் கொள்வதற்கும், முறையாக செய்து கொள்வதற்கும் இந்த நேரமுகாமைத்துவம் உதவுகின்றது.
நல்ல முறையில் கல்வி கற்று, நட்பெறுபேறுகளைப் பெறக்கூடிய மாணவர்களின் ரகசியம் இந்த நேரமுகாமைத்துவம் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சமத்துவம்
பாடசாலைகளில் பொதுவாகவே பல்வேறு பிரதேச, இன மாணவர்களும் கல்வி பயில்வர். எனவே மாணவர்கள் ஒவ்வொருவரும் தன்னோடு இணைந்து கல்வி கற்கும் சக மாணவர்கள் அனைவரையும் சமமாக கருத வேண்டும்.
இந்த மத, சாதி, ஏழை, பணக்காரன் என்ற எந்தவித பாகுபாடும் இன்றி சமத்துவத்தை பேணுவது ஒரு மாணவனைக்குரிய நற்பண்புகளில் மிக முக்கியமான ஒன்றாகும்.
தற்கால மாணவர்களின் நிலை
பொதுவாகவே தற்காலங்களில் அதிகமான மாணவர்கள் இந்த திரைப்படங்களுக்கு அடிமையாகியுள்ளனர். ஆடை தொடக்கம் முடி மற்றும் அனைத்து செயற்பாடுகளிலும் திரைப்பட கதாபாத்திரங்களை அணு அணுவாக பின்பற்றுவதனை காணலாம்.
இச்செயற்பாடானது மாணவர் சமூகத்திற்கு மத்தியில் சீர்கேடுகளையும், அதிபர் ஆசிரியர்களை மதிக்காது நடப்பதனையும், போதைப் பொருள் பாவனையையும், அதிகமான தொலைபேசி பாவனையையும் அதிகரிக்க செய்துள்ளமையைக் காணலாம்.
முடிவுரை
நாம் வாழும் சமூகத்தில் சிறந்த செல்வங்களாக காணப்படும் மாணவர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் பின்பற்ற வேண்டிய நற்பண்புகளை அறிந்து செயற்படுவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
எனவே மாணவர்களுக்கு நற்பண்புகளை கற்றுக் கொடுப்பதில் குடும்பம் மற்றும் பாடசாலை தங்களுடைய முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிடலாம்.
Read more: நல்லொழுக்கம் என்றால் என்ன