2000 ஆண்டுகளுக்கு முன்பே மது அருந்துவதின் தீமை பற்றி வள்ளுவர் கள்ளுண்ணாமை என்னும் அதிகாரத்தின் மூலம் விளக்கியுள்ளார்.
மதுவுக்கு அடிமையாவதால் உடல் ரீதியான பிரச்சனை மட்டுமல்ல மன ரீதியான, சமூக ரீதியான பிரச்சனைகளும் உண்டாகும். ஆரம்பத்தில் வெறும் ஆசை, நண்பர்களின் வற்புறுத்தலுக்காக மது அருந்துவார்கள், பின்பு அதில் தொடர்ந்து நாட்டம் ஏற்பட்டு தாமாகவே குடிக்க ஆரம்பிக்கிறார்கள்.
இதனால் பல்வேறு தீமைகள் ஏற்படுகின்றன என்பதனை மறந்து மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர். மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி இப்பதிவில் காண்போம்.
மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள்
#1. மது குடிப்பதால் உடல் சோர்வடைகிறது.
அதிகம் மது அருந்தியவர்கள் ஒரு நிதானமான தூக்கத்தையோ அல்லது ஓய்வையோ பெற முடியாது. கை மற்றும் கால்கள் நடுக்கத்தையும் உணர்கின்றனர். இதனால் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளை செய்து முடிப்பதில் கூட சிரமத்தை சந்திக்கின்றனர்.
#2. குடும்ப அமைதி கெடுதல்.
குடும்பத் தலைவன் மது அருந்தினால், குழந்தைகளுக்கு தகப்பனின் அன்பு, வழிகாட்டுதல் கிடைக்கப் பெறாது. சிறுவயதிலேயே தந்தையை இழக்க வேண்டியும் ஏற்படலாம்.
மேலும் குழந்தைகள் கூட வழி தவறி நடப்பதற்கும் காரணமாகிவிடும். தினந்தோறும் சண்டைகள் இடம்பெறும். இச்சச்சரவுகளே வீட்டின் அமைதியைக் குலைத்துவிடுகின்றது.
#3. இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும்.
இரத்த அழுத்த நோய் மற்றும் மார்பு வலி போன்ற நோய்கள் உண்டாவதற்கு மதுவே காரணம் ஆகின்றது.
#4. கல்லீரல் பாதிப்படைகிறது.
மது குடிப்பதினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு கல்லீரல் இறுக்க நோய் (Cirrhosis) ஏற்படுகிறது. பின்னர் கல்லீரல் புற்று நோய் ஏற்படுவதற்கும் காரணமாகிறது.
#5. நோய் எதிர்ப்பு சக்தி குறைவடையும்.
மது அருந்துபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு தன்மை குறைவதால் தொற்று நோய்கள் வந்தால் எளிதில் தீராது. உடலில் ஊட்டச்சத்து குறைவு ஏற்படும். மது குடிப்பவர்களுக்கு சளி, இருமல் போன்ற நோய்கள் எளிதில் தொற்றிக் கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளது.
#6. மூளை பாதிப்படைகின்றது.
மது குடிப்பதால் மூளையை பாதிக்கும் நோய்கள் ஏற்பட வழி வகுக்கின்றது. தொடர்ந்து அதிகமாக குடிப்பதால் மூளையின் செயல்பாடு குழம்பிப்போகிறது. நினைவாற்றலையும் வெகுவாகப் பாதிப்படையச் செய்கின்றன.
#7. பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
ஒருவருடைய குடிப்பழக்கம் அவனது குடும்பப் பொருளாதாரத்தை பாதிக்கின்றது. ஆடம்பரச்செலவாக மதுவிற்காக சம்பாதித்த பணமெல்லாம் வீணாக்குகின்றனர். இது தனிநபரின் பொருளாதாரத்தைப் பாதித்து பின் நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பையே முறிக்கிறது.
#8. ஒழுக்கம் நெறிமுறை தவறி நடக்கச்செய்கிறது.
இன்று நாட்டில் நடைபெறும் அதிக குற்றங்கள் மதுவின் துணையோடு நடப்பவை தான். பெண்களுக்கு எதிரான வன்முறைகள், கொலை, கொள்ளை, களவு போன்ற ஒழுக்க நெறி தவறிய செயற்பாடுகளுக்கும் மதுவே காரணமாகின்றது.
#9. சமூகத்தில் அந்தஸ்து குறைகின்றது.
குடிப்பழக்கத்தினால் ஒழுக்கக்கேடும், அந்த ஒழுக்கக்கேட்டால் சமுதாய நன்மதிப்பும் இழக்கப்படுகின்றது.
#10. மரணம் ஏற்படும்.
மது குடிப்பதனால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிகளவில் மது அருந்துபவர்களுக்கு உடல்நிலை பிரச்சினை ஏற்பட்டு திடீர் மரணம் நிகழ்கின்றது.
You May Also Like : |
---|
காற்று மாசடைவதால் ஏற்படும் விளைவுகள் |
போதைப்பொருள் பாவனையின் விளைவுகள் |