உலக நாகரிகம் வளர்ச்சி பாதையில் செல்கின்ற அதே தருணத்தில் சில தீய பழக்கங்கள் வலிமை பெற்றுச் செல்கின்றது. குறிப்பாக போதைப்பொருள் பாவனை என்பது சமூகத்தில் அதிகளவில் காணப்படுகின்றது.
போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தல் செயற்பாடுகளை ஒழிக்க அதிக நாடுகள் முயற்சித்தும் இவை இரண்டும் குறைந்தபாடில்லை. இவைகளின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கின்றது. போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகள் பற்றி இப்பதிவில் காண்போம்.
போதைப்பொருள் பாவனையின் விளைவுகள்
#1. நோய்கள் ஏற்படுகின்றன.
போதைப்பொருள் பாவனைக்கு ஆளானவர்களுக்கு நாளடைவில் மூச்சுத்திணறல், சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதோடு, உணவுக்குழாயிலும், கணையத்திலும், கல்லீரலிலும் பாதிப்பு ஏற்படுகிறது.
சரியாக உணவு எடுத்துக்கொள்ள முடியாமல் போவதால் வயிற்றில் புண், எடை குறைவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, உடல் சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
#2. மன ரீதியான பிரச்சினைகள் ஏற்படும்.
மூளையில் ஏற்படும் பாதிப்புகளால் தானாகவே பேசிக்கொள்வது, பயம், மனச்சோர்வு, மனக் குழப்பம் போன்ற பிரச்சினைகள் உண்டாகின்றது.
சிந்தனைத்திறன் குறைவு, ஞாபகமறதி, தனக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்று கற்பனை செய்துகொண்டு அதன்படி நடந்து கொள்வது போன்ற மனநல பிரச்சினைகளும் ஏற்படுகிறது.
#3. குடும்ப நபர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
போதை மற்றும் குடிப்பழக்கம் உடையவர்கள் செய்கிற குற்றச் செயல்களால் முதலில் குடும்ப உறுப்பினர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
போதைக்கு அடிமையாகி இளமையிலேயே இறந்துவிடும் குடும்பத் தலைவனால் அக்குடும்பமே சிதைந்து சீரழிந்து விடுகின்றது. குழந்தைகளுக்கு அன்பு, அரவணைப்பு மற்றும் வழிகாட்டுதல் கிடைக்காமல் அவர்களின் எதிர்காலமும் கேள்விக் குறியாகிவிடுகின்றது.
#4. கல்வி கற்க முடியாமல் போய்விடும்.
இளம் வயதில் பழகிக் கொள்ளும் போதைப் பழக்கங்கள் மெல்ல மெல்ல இவர்களை அடிமையாக்கி விடுகிறது. இதனால் தொடர்ந்து கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டு கல்வி வாழ்க்கை சீரழிந்து விடுகின்றது.
#5. விபத்துக்கள் ஏற்படுகின்றன.
வாகனம் ஓட்டுபவர்கள் போதையைப் பயன்படுத்துவதால் கவனம் சிதைந்து விபத்துக்களுக்கு உள்ளாகி உயிர் இழப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. அது மட்டுமன்றி சொத்திழப்புக்கள், அவயவங்கள் இழப்புக்களும் ஏற்படுகின்றன.
#6. சமூக அந்தஸ்து இழக்கப்படுகின்றது.
போதை மற்றும் குடிப்பழக்கம் உடையவர்கள் செய்கிற குற்றச் செயல்களால் சமூகத்தில் மரியாதை குறைவு, சமூகப் புறக்கணிப்பு என்பவை ஏற்படுகின்றது.
#7. பணப் பிரச்சினைகளும் உண்டாகிறது.
பணிபுரிபவர்கள் போதைக்கு அடிமையானால் அலுவலக வேலையை இழந்து, தம்முடைய பொருளாதாரத்தை இழந்து விடுகின்றனர்.
#8. சமுதாய முன்னேற்றம் பாதிப்படையும்.
நாளைய தலைவர்களாக, துறைசார் நிபுணர்கள் சமுதாயத்தையும் தேசத்தையும் நல்வழிப்படுத்தும் முன்னோடிகளாக மாறவுள்ள மாணவர்கள் போதையின் பிடிக்குள் அகப்படுவதால் அது சமுதாய முன்னேற்றத்தை தடைப்பட வைக்கும். சமுதாய சீரழிவிற்கும் வழிவகுக்கும்.
#9. குற்றங்களில் ஈடுபடுவதற்கு போதைப்பொருள் பாவனையை காரணமாகும்.
சமூகத்தில் நடைபெறும் அதிகமான குற்றச் செயல்கள் யாவும் போதைப்பொருள் பாவனையாலே இடம்பெறுகின்றன. கொலை, கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம், வன்முறை போன்ற குற்றச்செயல்கள் இடம்பெறுவதற்கு போதைப் பாவனை முக்கிய காரணமாக உள்ளது.
#10. மரணத்தை ஏற்படுத்துகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் இறப்புக்கள் போதைப்பொருள் பாவனையால் ஏற்படுகின்றன. போதைப்பொருள் பாவனையால் இறப்பவர்களின் சராசரி வயது மிகவும் குறைவான வயதுடையவர்களாவே இருக்கின்றது.
You May Also Like : |
---|
சுற்றுலா செல்வதால் ஏற்படும் நன்மைகள் |
போதைப்பொருள் பாவனை கட்டுரை |