நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் கட்டுரை

Noyatra Valve Kurai Vatra Selvam Katturai Tamil

இந்த பதிவில் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் கட்டுரை தொகுப்பை பார்க்கலாம்.

உடல் நலம் தான் அனைத்து செல்வங்களையும் விட உயர்ந்த செல்வமாகும். மற்ற செல்வங்களை பெறவும் பெற்ற செல்வங்களை அனுபவிக்கவும் உடல்நலம் மிக அவசியம்.

தன் சுத்தமும் சுற்றுபுறச் சுத்தமும் நோயற்ற வாழ்வுக்கு வழிவகுக்கும்.

  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் கட்டுரை
  • Noyatra Valve Kurai Vatra Selvam Katturai Tamil

சுத்தம் சுகாதாரம் பற்றிய கட்டுரை இங்கே சென்று பாருங்கள்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. ஆரோக்கியமான வாழ்க்கை முறை
  3. இயற்கை வாழ்க்கை முறையும் நோயற்றவாழ்வும்
  4. இன்றைய செயற்கை வாழ்க்கையும் நோய்களும்
  5. முடிவுரை

முன்னுரை

“அரிது அரிது மானிடராய் பிறத்தலரிது கூன் குறுடு செவிடு நீங்கி பிறத்தல் அதனிலும் அரிது” என்று பாடுகிறார் ஒளவையார்.

அவ்வாறே நோய்நொடிகள் இன்றி இக்காலத்தில் வாழ்வது அரிதிலும் அரிதாகி விட்டது. இக்காலத்தில் மனிதன் எவ்வாறு நாகரிக மாற்றத்துக்குள்ளாகி ஆடம்பரமாக வாழ்ந்தாலும் கூட நோயற்ற வாழ்வை வாழமுடியவில்லை.

இளம் வயதிலேயே கொடூரமான நோய்களுக்காளாகி இறந்து போகின்றவர்கள் அதிகமாகும்.

“உடலினை உறுதி செய்” என்பது ஒளவையார் வாக்கு நாம் உண்கின்ற உணவு குடிக்கின்ற நீர் வாழுகின்ற சூழல் சுத்தமாக இருந்தால் நோய்கள் எம்மை தீண்டாது.

இன்றைக்கு அந்த நிலமை மாறியிருக்கிறது. உண்ணும் உணவு நஞ்சாகிறது குடிநீர் மாசடைந்து வருகிறது. சூழல் மனிதர்கள் வாழமுடியாத அளவிற்கு மாறிப்போயிருக்கிறது. இதுவே மனிதனின் ஆரோக்கிய சீர்கேட்டுக்கு காரணம் என்பதை மனிதன் இன்னும் உணரவில்லை.

இக்கட்டுரையில் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, இயற்கை வாழ்க்கை முறையும் நோயற்றவாழ்வும், இன்றைய வாழ்க்கை முறையும் நோய்களும் போன்ற விடயங்கள் நோக்கப்படுகின்றன.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறை

ஆரோக்கியமான வாழ்க்கை முறையென்பது மக்களுடைய பழக்கவழக்கத்தில் தங்கியுள்ளது. “உணவே மருந்து” என்று கூறுவார்கள். நாம் எடுத்து கொள்கின்ற உணவே எம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றது.

உடலுக்கு கேடு விளைவிக்காத காபோவைதரேற், புரதம், கொழுப்பு, விற்றமின்கள் போன்றன உள்ளடக்கிய நல்ல உணவை எடுத்து கொள்வதால் அநேகமான நோய்களை தடுக்கலாம்.

குறித்த நேரத்தில் உணவுண்ணாமையால் “அல்சர்”, அதிக கொழுப்பு உணவை உண்பதால் “கொலஸ்ரோல்”, அதிக சீனி பண்டங்களால் “நீரிழிவு”, அதிக உப்பால் உயர் குருதியமுக்கம், நஞ்ஞான உணவை உண்பதால் புற்றுநோய் என தவறான உணவு பழக்கங்களாலேயே நோய்கள் அதிகம் ஏற்படுகின்றன.

மேலும் தூய்மையற்ற குடிநீரால் கொலரா, வாந்தபேதி, வயிற்றோட்டம், சிறுநீரக பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. சுத்தமான குடிநீரை எடுத்து கொள்வதால் இப்பாதிப்புக்களில் இருந்து விடுபடமுடியும்.

இயற்கையான சேதன முறையில் பெறப்படும் நஞ்சற்ற காய்கறிகள், மாசடையாத சுத்தமான நீர், மாசடையாத இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை எம்மை என்றைக்கும் நோய் வராமல் காக்கும்.

நோயற்ற வாழ்வு என்பது ஆரோக்கியமான உணவுகளில் தங்கியுள்ளது.

இயற்கை வாழ்க்கைமுறையும் நோயற்ற வாழ்வும்

அன்றைய மனிதன் இயற்கையோடு வாழ்ந்தான் இயற்கை முறைகளில் பயிர் செய்தான். இரசாயனம் கலக்காத இயற்கை பசளைகளை பயன்படுத்தினான். மனிதனை பாதிக்காத கிருமிநாசினிகளை பயன்படுத்தினான்.

இதனால் நோய்களின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தான் ஆறுகளையும் காடுகளையும் பாதுகாத்தான் நிலத்தடி நீர் சுத்தமாக இருந்தது. இயந்திரங்களின் துணையின்றி தானே உடலுழைப்பை பயன்படுத்தினான். உடலும் ஆரோக்கியமாக இருந்தது.

இதனை நம்மாழ்வார் இயற்கை வாழ்க்கை முறைக்கு திரும்பினால் தான் மனிதகுலம் நோயற்ற வாழ்வை வாழும் என்று கூறிசென்றார்.

இங்கே மனிதர்கள் மட்டுமன்றி பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புழுக்கள் இவையும் வாழவேண்டும் வாழ்ந்தால் தான் இயற்கை சமநிலையாக இருக்கும். இந்நிலமை அன்று சீராக இருந்தது. இதனால் தான் எமது மூதாதையர் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

இன்றைய செயற்கை வாழ்க்கையும் நோய்களும்

இன்றைக்கு உலகம் மாறிவிட்டது. கதிர்வீச்சுக்கள் உலகமெங்கிலும் பரந்து விட்டது. இரசாயனங்கள் மண்ணையும் நீரையும் மாசுபடுத்துகின்றன. பச்சைவீட்டு வாயுக்கள் வளிமண்டலத்தையும் பூமியையும் வெப்பமடைய செய்கின்றன.

பழமையான இயற்கை உணவு முறை மாறிவிட்டது. மண்பானைகளும் விறகு அடுப்புக்களும், அம்மிகள், உரல் உலக்கைகள் மறக்கப்பட்டு விட்டன.

பழமையான இயற்கை உணவு முறைகள் இன்று மாறி நட்சத்திர உணவு விடுதிகள், உல்லாச வாழ்க்கை மற்றும் துரித உணவு கலாச்சாரத்துக்கு உலகம் மாறிவிட்டது.

இளந்தலைமுறையினரும் அடிமையாக்கப்பட்டு விட்டனர். நாமும் விதிவிலக்கல்ல அக்கலாச்சாரத்துக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுவிட்டோம்.

சுவை எனும் பெயரில் அதிக உப்பு அதிக கொழுப்பு அதிக சீனி மிக்க ஆரோக்கியமற்ற உணவுகளை உண்கின்றோம்.

இது வியாபார உலகமாக மாறி விட்டது எனவே இயற்கை முறைகளை உலகம் ஏற்கும் வரை இயற்கை வாழ்க்கை முறையும் நோயற்ற வாழ்வும் என்பது தொடர்கதை தான்.

முடிவுரை

இன்றைக்கு உலகம் பாரிய ஆபத்தில் சிக்கியுள்ளது என்னதான் வளர்ச்சி கண்டாலும் மனிதர்கள் ஆரோக்கியமின்றி இறந்து போகிறார்கள். குழந்தைகளும் அடுத்த தலைமுறையும் மோசமான பாதிப்புக்களை எதிர்கொள்ள போகிறது.

ஆகவே நாம் இப்போதாவது விழிப்படைந்து கொள்ள வேண்டும். “சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம்” என்று கூறுவார்கள்

எனவே நாம் இங்கு ஆரோக்கியமாக வாழ நோயற்ற வாழ்விற்காக இயற்கையை பாதுகாத்து இயற்கை உணவுமுறைகளுக்கு மாறவேண்டும்.

You May Also Like :

தமிழர் பண்பாடும் கலாச்சாரமும் கட்டுரை

விருந்தோம்பல் பற்றிய கட்டுரை