தேவாரம் என்றால் என்ன

thevaram endral enna

தமிழகத்தில் கிடைக்கப் பெற்றுள்ள 11ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் தேவாரம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

கல்வெட்டுக்களில் அச்சொல் வழிபாடு என்ற பொருளில் இடம் பெற்றுள்ளது. எனவே தேவாரம் என்ற சொல்லுக்கு இறைவன் முன் பாடப்பெறுகின்ற பாடல்கள் என்ற அடிப்படையில் பல்வேறு நிலையில் பொருள் கூறப்படுகிறது எனலாம்.

சோழமன்னர்கள் காலத்தில் தேவாரப் பாடல்கள் கோயிலில் பண்ணோடு பாடுவதற்கு நிவந்தங்களும் (அறக்கொடைகள்) அளிக்கப் பெற்றன.

பண்ணோடும், இசையோடும் திருக்கோயில்களில் நாள்தோறும் பாடப்பெற்று, பாடுவோருக்கு ஊதியமும் வழங்கப் பெற்றன. இத்தகைய செய்திகள் சோழ மன்னர்கள் காலக் கல்வெட்டுகளிலிருந்து தெரிய வருகின்றன.

இன்றைக்கும் தேவாரத் திருமுறைகள் சைவத் திருக்கோயில்களிலும், சைவசமயத்தார் இல்லங்களிலும் பண்ணோடு இசைக்கப் பெற்று வருகின்றமையைக் காணலாம்.

தேவாரம் என்றால் என்ன

தே+ஆரம் எனப் பிரித்தால் இறைவனுக்கு சூட்டப்படும் மாலை எனப்பொருள்படும். தே+வாரம் என பிரிக்கும்போது இனிய இசையோடு பொருந்திய பாடல்கள் என பொருள்படும்.

சைவத் திருமுறைகள் மொத்தமாக 12 உள்ளன. இவற்றில் முதலில் வரும் 7 திருமுறைகள்தான் தேவாரம் என்று அழைக்கப்படுகின்றது.

அதாவது தேவாரம் என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் ஆகும்.

தேவார மூவர்கள்

தேவாரம் பாடியவர்கள் மொத்தமாக 3 பேர் உள்ளனர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் போன்றோர் ஆவர். இதனாலேயே அவர்கள் மூவரும் “தேவார மூவர்” என அழைக்கப்படுகின்றனர்.

திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் 1, 2, 3 திருமுறைகளிலும், திருநாவுக்கரசர் பாடிய பாடல்கள் 4, 5, 6 திருமுறைகளிலும், சுந்தரர் பாடிய பாடல்கள் 7ஆம் திருமுறையிலும் காணப்படுகின்றது.

இவ்வேழு திருமுறைகளுமே தேவாரம் ஆகும். அதாவது இவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் என அழைக்கப்படுகின்றது.

12 திருமுறைகள்

சைவ மரபில் தெய்வத் தன்மை வாய்ந்த அருள் நூல்கள் 12 என்று பெரியோர்களால் தொகுக்கப்படுகின்றன. அவற்றையே திருமுறை என்று அழைக்கின்றோம்.

திருமுறைதொகுப்பின் பெயர்அருளியவர்
1, 2, 3திருஞானசம்பந்தர் தேவாரம் (திருக்கடைக்காப்பு)திருஞான சம்பந்தர்
4, 5, 6 திருநாவுக்கரசர் தேவாரம் திருநாவுக்கரசர்
7சுந்தரர் தேவாரம் (திருப்பாட்டு)சுந்தரர்
8திருவாசகம் & திருச்சிற்றம்பலக் கோவையார்மாணிக்க வாசகர்
9திருவிசைப்பா, திருப்பல்லாண்டுதிருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர்
10திருமந்திரம்திருமூலர்
11பிரபந்தம்திருவாலவாயுடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமான் அடிகள், அதிராவடிகள், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி
12திருத்தொண்டர் புராணம்சேக்கிழார்

ராஜராஜ சோழன் தமிழுக்கு செய்த பெருந்தொண்டு தேவாரத் திருப்பதிகங்களை தேடி அவை தில்லை நடராஜப் பெருமான் ஆலய அறை ஒன்றில் அடைந்து கிடந்து கரையானுக்கு இரையாகி வரும் செய்தியை அறிந்து அவற்றை மீட்க நடவடிக்கை எடுத்ததாகும்.

ஆலய தீட்சகர்கள் தேவாரத்தை பாடிய அப்பர், சுந்தரர், சம்பந்தர் மூவரும் நேரில் வந்தால்தான் சுவடிகளைத் தருவோம் என்று கூறினர்.

மன்னர் நினைத்திருந்தால் அவர்களைச் சிறையில் பூட்டி பாடல்களைப் பறிமுதல் செய்து இருக்கலாம்.

ஆனால் தூய சிவபக்தரான ராஜராஜசோழன் அராஜகத்தில் இறங்காமல் மூவர் திருமேனியையும் கோயிலுக்கு எடுத்து வந்து நிறுத்தி “இதோ தேவாரம் பாடியவர்கள் வந்துவிட்டார்கள் சுவடியைக் கொடுங்கள்” என்று கேட்டுப் பெற்றுக்கொண்டார். அதனால் தான் நமக்கு கிடைத்தது அமிர்திலும் இனிய ஆன்மீகப் பனுவலான தேவாரம்.

Read more: வேதங்கள் எத்தனை அவை யாவை

புராணங்கள் என்றால் என்ன