உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் கட்டுரை

ulluvathellam uyarvullal

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • எண்ணம் என்பது
  • ஊக்கம் உடைமை
  • நேர்மறை எண்ணங்கள்
  • முடிவுரை

முன்னுரை

இப்பூவுலகில் மிகவும் சிறந்த பொக்கிஷம் நம்மிடம் தோன்றும் எண்ணங்களே ஆகும். மனித மனங்களில் எப்போதும் ஏதோ ஒரு எண்ணம், ஆசை தோன்றிக்கொண்டே இருக்கின்றது.

இன்று பெரும்பாலும் சக மனிதர்களைக் கண்டு மகிழும் உள்ளமாகவோ, இன்ப, துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளவோ முடியாமல் தனி ஒரு உலகில் சிந்தனைகளோடு பயணிக்கும் உலகமாக மாறி வருகின்றது. இதற்கெல்லாம் காரணம் அவரவருக்கான தனிப்பட்ட எண்ணங்களே ஆகும்.

எப்போதும் எண்ண ஓட்டங்கள் தவறாக இருக்கும்போது அங்கு வாழ்வியல் நெறிகளில் மாற்றம் ஏற்பட்டு பாரிய விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது. வாழ்வை முடித்துக் கொள்ளக் கூட மனங்களை தூண்டுகின்றது என்றால் அது மறுப்பதற்கில்லை.

எனவே எப்போதும் நமது எண்ணங்கள் உயர்வானதாக இருக்க வேண்டும். ஏனெனில் மனிதன் நடத்தை மாறுபாடுகளை மாற்றி அமைக்கின்ற வல்லமை எண்ணங்களுக்கு உண்டு.

எண்ணம் என்பது

மனிதன் தன் ஐம்புலன்களால் உணர்ந்த ஒரு விடயத்தை தனது அறிவால் விளக்கிக் கொண்டு, அதனை மனப்பதிவுகள் ஆக்கிக் கொள்கின்றான்.

அவ்வாறு மனப்பதிவுகளில் இருந்தே நமது எண்ணங்கள் பிறக்கின்றன. இந்த எண்ணங்கள் பல அர்த்தப்படுகின்றன. யோசனை, கருத்து, நோக்கம், இலக்கு, பொருள், நம்பிக்கை என பல வார்த்தைகளாக அர்த்தப்படுகின்றன.

ஊக்கம் உடைமை

திருவள்ளுவர் இரண்டு அடிகளில் உலக மக்களுக்குத் தேவையான அனைத்து விடயங்களையும் திருக்குறள் மூலம் விளக்கியுள்ளார். அந்தவகையில் எண்ணம் பற்றித் திருவள்ளுவர் கூறியதாவது,

“உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து”

எண்ணுகின்ற எண்ணம் எல்லாம் உயர்வை பற்றிய எண்ணமாக வேண்டும். அவ்வுயர்வு கை கூடாவிடினும், அவ்வாறு எண்ணுவதை விடக் கூடாது. அந்த எண்ணம் அதை முயன்று பெற்றதோடு ஒத்த இயல்புடையது என வள்ளுவர் கூறுகின்றார்.

நேர்மறை எண்ணங்கள்

நாம் நமது உள்ளத்தை உயர்வாகவும், மகிழ்வாகவும் வைத்திருக்க உயர்ந்த எண்ணங்களை எண்ண வேண்டும். ஒவ்வொரு நாளும் வெற்றிக்கான நாளாகும் என்று நேர்மறை சிந்தனையை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

ஏனெனில் நம்மை ஊக்கப்படுத்தி முன்னேற்றுபவை நமது எண்ணங்களே ஆகும். எனவே எப்போதும் ஆக்கபூர்வமான எண்ணங்களை அதிகப்படுத்துவதன் மூலம் வெற்றி காணலாம்.

எதை நாம் எண்ணுகின்றோமோ அதையே செயல்களும் பிரதிபலிக்கின்றன. எப்போதும் நேர்மறை எண்ணத்துடன் இருக்க வேண்டும். நம் இலக்குகளைப் பற்றிய எண்ணங்களை எப்போதும் உயர்வாகவே எண்ண வேண்டும்.

நம் எண்ணங்களுக்கு ஆதரவாக பிறர் இருக்க வேண்டும் என எண்ணாமல், நம் ஆள் மனதின் ஆதரவுடன் சிந்திக்க வேண்டும். நேர்மறை சிந்தனையே எண்ணங்களை வலிமையாக்குகின்றன. எனவே நல்ல எண்ணங்களை எண்ணி வாழ்வை வசந்தமாக்குவோம்.

முடிவுரை

உலகின் மிகச் சிறந்த தத்துவ அறிஞரான சாக்ரடீஸ் “சிறந்த எண்ணம் கீழான எண்ணத்தை அடக்குகின்ற போது மனிதன் தனக்குத்தானே தலைவனாகின்றான்” என்கின்றார். எனவே நமது சிந்தனையிலிருந்து உயர்வான எண்ணம் பிறக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

எண்ணங்கள் உயர்வாக இருக்கும் போது அது நம்மிடமும், நம்மைச் சுற்றியுள்ளோரிடமும் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும். அதுவே நம் வெற்றிக்கு அடிக்கோளாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.

எனவே உயர்ந்த குறிக்கோளை வைத்துக் கொண்டு அயராது உழைத்தால் நாம் எண்ணியதெல்லாம் நடக்கும்.

Read More: அச்சம் தவிர் கட்டுரை

ஊழ்வினை வந்து உறுத்தும் கட்டுரை