உலக நாடுகள் எதிர்கொள்ளும் மிகப்பெரும் சவால்களில் ஒன்றாக வேலையின்மை காணப்படுகின்றது. எனினும் இது நாட்டிற்கு நாடு வேறுபடுகின்றது.
பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய காரணியாக இருப்பதனால் வேலையின்மை என்பது உலக நாடுகள் எதிர்கொள்ளும் பொதுப் பிரச்சனையாகின்றது.
வேலையின்மை ஒரு நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக நோக்கங்களை அடைவதற்குத் தடையாக உள்ளது. அதுவே உற்பத்தி சக்தியின் அர்த்தமற்ற வீரியத்தைப் பிரதிபலிக்கின்றது.
இன்றைய நவீன காலத்தில் கல்வித்துறையின் பன்மடங்கு வளர்ச்சியினால் அனைவருக்கும் எளிதான அடிப்படைக் கல்வியானது கிடைத்து விடுகின்றது. ஆனால் நன்கு படித்து திறமையை வளர்த்துக் கொண்ட பலருக்கும் வேலை கிடைக்காத சூழ்நிலையே நிலவுகின்றது.
வேலையில்லாப் பிரச்சனையைக் கவனத்திற் கொண்டு தீர்வு காண வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் வேலையின்மைப் பிரச்சனை எந்தளவிற்கு குறைகின்றதோ அதற்கேற்ப பொருளாதார நிலை உயரும்.
Table of Contents
வேலையின்மை என்றால் என்ன
வேலையின்மை என்ற கருத்தானது பணி செய்ய உகந்த வயதுடையவர்களுடன் தொடர்புடையதாகும். அதாவது பொதுவாக 18 முதல் 65 வயதுவரையுள்ளவர்கள் தான் பணிசெய்ய உகந்த வயதுடையவர்களாகக் கருதப்படுகின்றனர்.
இந்த வயதுப் பிரிவில் நல்ல உடல் திறனுடன் வேலை செய்யத் தகுதியும், விருப்பமும் இருந்து தற்போது நடைமுறையில் உள்ள ஊதிய விகிதத்தில் வேலை கிடைக்காமல் இருந்தால் அதுவே வேலையின்மை எனப்படும்.
“மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் உழைக்கத் தயாராக இருக்கும் அனைத்து உடல் வலிமை உடைய நபர்களுக்கு எந்தவொரு வேலையும் கிடைக்கவில்லையெனில் அது வேலையின்மை எனப்படும்” என திட்டக்குழு (Planning Commission) வேலையின்மைக்கு வரையறை கூறுகின்றது. *
வேலையின்மைக்கான காரணங்கள்
மக்கள் தொகை அதிகிரிப்பு அல்லது வளர்ச்சி வேலையின்மைப் பிரச்சினையை ஏற்படுத்துவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது.
அதாவது, ஒரு பொருளாதாரத்தில் தொழிலாளர் சந்தை தேவைகளை விட அதிகமான தொழிலாளர்கள் இருக்கும்போது வேலையின்மை அளவு அதிகமாக இருக்கும். அதுமட்டுமன்றி
- குறைந்த கல்வியறிவு நிறுவனங்கள்
- சட்டச் சிக்கல்கள்
- உற்பத்தித் துறையில் குறைந்த முதலீடுகள்
- பொருளாதார வீழ்ச்சி
- குறு வணிகங்களுக்கான குறைந்த உட்கட்டமைப்பு வசதி
- இயந்திரங்களின் பெருக்கம்
- செயற்கை நுண்ணறிவு தொழிநுட்ப வளர்ச்சியினால் பணியாளர்களின் தேவை ஏற்படாமை
- திறமையான மற்றும் தொழில்நுட்ப பயிற்சி இல்லாமை
- குறைவான ஊதியம்
போன்ற காரணங்களும் வேலையின்மைக்கு செல்வாக்குச் செலுத்துபவையாக உள்ளன.
வேலையின்மையால் ஏற்படும் விளைவுகள்
வேலையின்மையானது ஒரு நாட்டில் பல சமூகப் பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு பொருளாதார வளர்ச்சியையும் தடுக்கின்றது.
குறைந்த ஊதியத்தில் வேலைக்கு அமர்த்துதல் உண்டாகும் இதனால் மக்கள் வறுமைக்கு தள்ளப்படுவார்கள்.
மன அழுத்தம் ஏற்படும் அதாவது வேலையின்மை பிரச்சனையினால் உணவு, உடை போன்ற பலவற்றையும் பெற முடியாத நிலை ஏற்படும்.
அதுமட்டுமன்றி ஒருவரின் சுயமரியாதையும் பாதிப்படையும். இதனால் மனச்சோர்வு அல்லது மன உளைச்சல் ஏற்படும்.
தீர்வுகள்
வேலையின்மைப் பிரச்சனையினைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளாகப் பலவற்றை பரிந்துரை செய்ய முடியும்.
கல்வி அறிவினை ஏற்படுத்துதல். கல்வியானது ஒருவருக்கு வாழ்க்கை மற்றும் வேலைத்திறன் இரண்டையும் வளர்க்க உதவுகின்றது.
வறுமை காரணமாக கல்வியை இடைநிறுத்தும் பல மாணவர்கள் உள்ளனர். இதனைக் கவனத்திற் கொண்டு கல்விச் செலவுக்கான கடனைப் பெறுவதனை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.
திறன் அடிப்படையிலான பயிற்சி மற்றும் தொழிநுட்பப் பயிற்சிகளை வழங்க வேண்டும்.
பல்வகைப்பட்ட வேலைவாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். சிறந்த பொருளாதாரக் கொள்கையினை அரசு உருவாக்கிச் செயற்படுத்தல் வேண்டும். இவற்றின் மூலம் வேலையின்மைப் பிரச்சனையினை நிவர்த்தி செய்ய முடியும்.
Read more: வறுமை என்றால் என்ன