மறுமலர்ச்சி என்றால் என்ன

marumalarchi endral enna

உலகில் முதன்முதலில் இத்தாலிலேயே மறுமலர்ச்சி அம்சங்கள் தோற்றம் பெற்றன. பின்னர் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் மறுமலர்ச்சியின் தாக்கம் இடம்பெற்றது.

15ம் மற்றும் 16ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட சகல மாற்றங்களிற்கும் மறுமலர்ச்சியே அடிப்படையாக அமைந்தது எனலாம்.

மறுமலர்ச்சி என்றால் என்ன

மறுமலர்ச்சி என்பது “புத்துயிர் பெறுதல்” அல்லது “மீண்டும் மலர்தல்” என்பதாகும்.

ஐரோப்பாவிலே 15ம் மற்றும் 16ம் நூற்றாண்டிலே பழைய கிரேக்க உரோம நாகரீக அம்சங்களான கலை, இலக்கிய, பண்பாடு போன்ற விடயங்கள் ஐரோப்பாவில் மீண்டும் உருவாகத் தொடங்கிய செயற்பாடு மறுமலர்ச்சி எனச் சிறப்பிக்கப்படுகின்றது.

கிரேக்க, உரோமப் பண்பாடுகள் மீளெழுச்சியோடு அனைத்துத் துறைகளிலும் மறுமலர்ச்சி எழுச்சியடைந்தன.

நவீன ஐரோப்பிய வரலாற்றின் தொடக்கத்தில் மறுமலர்ச்சி என்பது அறிவியற் புரட்சியையும், கலைசார் மாற்றங்களையும் கொண்டுவந்த ஒரு பெரும் பண்பாட்டு இயக்கமாகும்.

ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக்கான காரணங்கள்

ஐரோப்பாவில் மறுமலர்ச்சி ஏற்பட்டமைக்குப் பல்வேறு காரணங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன.

அந்தவகையில் முக்கிய காரணம் கொன்ஸ்சாந்திநோபில் துருக்கியர்வசம் சென்றமை ஆகும்.

இந்த கொன்ஸ்சாந்திநோபில் நகரிலே பழைய கிரேக்க நகர நூல்கள் வைக்கப்பட்டிருந்தன. இவ் அறிவியல் பொக்கிஷங்களுக்கு துருக்கியரால் ஆபத்து நேரலாம் என அஞ்சிய ஐரோப்பிய மக்கள் அப்பொக்கிஷங்களை மேற்கு ஐரோப்பாவிற்கு எடுத்துச் சென்றனர்.

குறிப்பாக அவர்கள் இத்தாலியை அடைந்ததும் அவ் அறிவியல் பொக்கிஷங்களை படிக்கத் தொடங்கினர். இதனால் கிரேக்க, உரோம நாகரீகங்களை போன்று ஐரோப்பாவையும் கட்டியெழுப்ப வேண்டும்மென முனைந்தனர்.

ஐரோப்பாவில் ஏற்பட்ட சிலுவைப் போரினால் 15 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் வர்த்தகம் வீழ்ச்சியடையத் தொடங்கியது. இதனால் வர்த்தகத்தை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சியுடன் அங்கு வசித்த மெடிசி அரச குடும்பத்தினர் மற்றும் ஏனைய செல்வந்தர்கள் கிரேக்க கலை, இலக்கிய வளர்ச்சிக்கும் ஆதரவு வழங்கினர். இதனால் வர்த்தகத் துறையிலும் மறுமலர்ச்சி ஏற்பட ஆரம்பித்தது.

பழைய கிரேக்க, உரோம நாகரீகங்கள் இத்தாலியில் பேணப்பட்டமையானது மறுமலர்ச்சி ஏற்பட மற்றுமொரு காரணமாக அமைந்தது. இத்தாலி பண்டைய உரோமானிய நாகரீகத்தின் பிறப்பிடமாக இருந்தது.

அறிவு, அரசியல், கலை, செழிப்பான வாழ்க்கை என இத்தாலிய மக்கள் வாழ்ந்து காட்டினர். அப்போது பண்டைய கிரேக்க உரோமானிய பாரம்பரியங்களுக்கு பெரிதும் மதிப்பினை அவர்கள் வழங்கினர். இந்நிலையே மறுமலர்ச்சி இத்தாலியில் ஏற்படக் காரணமாகியது.

மேலும் 15ஆம் மற்றும் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஐரோப்பிய மக்களிடம் லத்தீன் மொழியினைக் கற்கும் ஆர்வம் காணப்பட்டமையானது மறுமலர்ச்சி ஏற்பட மற்றுமொரு காரணமாக அமைந்தது எனலாம்.

கிரேக்க உரோம நூல்களை கற்றும் அவற்றை மொழிபெயர்ப்புச் செய்தும், அக்காலப்பகுதியில் வாழ்ந்த எழுத்தாளர்களால் மற்றும் அறிஞர்களால் நூலுருப்பெற்று வெளியிடப்பட்டது மறுமலர்ச்சிக்கான மற்றுமொரு காரணியாகும்.

மறுமலர்ச்சியினால் ஏற்பட்ட மாற்றங்கள்

மறுமலர்சியால் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. மத்திய கால ஐரோப்பாவில் திருச்சபையிடம் பாரியளவு அதிகாரம் காணப்பட்டது. இதனால் மனித வாழ்வின் பல துறைகளில் பாதிப்பு ஏற்பட்டது.

இக்கால அறிவு வளர்ச்சியானது திருச்சபையினைக் கடுமையாக விமர்சித்தது. இதனால் கத்தோலிக்க மதகுருமார்கள் திருச்சபையின் குறைபாடுகளை நீக்கிக் கொண்டனர். இதுவே சமய மறுமலர்ச்சி எனப்பட்டது.

மேலும் மறுமலர்ச்சியால் மனித மேன்மை எனும் கொள்கை ஏற்பட்டது. அதாவது மத்திய காலத்தில் அனைத்தும் சமயத்தினை மையமாகக் கொண்டே இருந்தனர். ஆனால் மறுமலர்ச்சியின் பின்னர் மனிதன் அனைத்தையும் தர்க்க அல்லது ஆய்வு ரீதியாகப் பார்க்கும் நிலையை அடைந்தனர். இதனால் இலக்கியம், கலை, வரலாறு, சட்டம், ஒழுக்கவியல் எனப் பலவற்றைக் கற்றுத் தெளிந்தான்.

Read more: வரலாறு என்றால் என்ன

வரலாற்றை கற்பதன் பயன்கள்