புதுக்கவிதை என்றால் என்ன

கவிதை என்றால் என்ன

இந்த பதிவில் கவிதைகளில் ஒன்றான புதுக்கவிதை என்றால் என்ன என்பது பற்றி நோக்கலாம்.

கவிதை என்றால் என்ன

கவிதை எனப்படுவது சொற்களில் உணர்ச்சியும், கற்பனையும் கொண்டு இயற்றப்படும் விடயமாகும். கவிதையில் உணர்ச்சிகள் நயமாக காட்டப்படுகிறது. கவிதைகள் இரண்டு வகைப்படும்.

  1. மரபுக் கவிதை
  2. புதுக்கவிதை

புதுக்கவிதை என்றால் என்ன

புதுக்கவிதை என்பது “சொற்களம், பேச்சுப் பாங்கு, பேச்சமைதி, புதுமைப் படிமப் பயன்பாடு (பிரயோகம்), தற்காலச் சொல்லாட்சி, உணர்ச்சிப் பாங்கு, தத்துவ நோக்கு, ஒலிநய அழுத்தம், உடனிகழ்கால உணர்வு, இன்றைய இக்கட்டான நிலை, அவற்றை தன் உள்ளடக்கத்திற்கும் உருவத்திற்கும் பொருளாகவும், சாதனங்களாகவும்” கொண்டு புதுக்குரலில் ஒலிப்பது ஆகும்.

புதுக்கவிதை படிப்பதற்கு எளிமையாகவும், புதுமையுடனும் வாசிப்பவர்களுக்குப் புரிய வேண்டும் என்ற நோக்கிலும் எழுதப்பட்டிருக்கும்.

பெரும்பாலான மக்களுக்கு இவற்றை படிக்கும் போது அவை புரியும் வண்ணம், மக்கள் பேச்சு வழக்கை கொண்டிருப்பது மட்டுமன்றி சுருக்கமாகவும் அமைந்து காணப்படுகின்றது. இன்றைய இளம் தலைமுறையினரின் உணர்வு வெளிப்பாட்டு வடிவமாக அமைந்திருக்கிறது.

இக்கவிதை மேல்நாடுகளில் 1910 இல் தோற்றம் பெற்றது. இவற்றின் சிறந்த பிரதிநிதிகளாக வால்ட் விட்மன், எஸ்ரா பவுண்டு என்பவர்கள் காணப்படுகின்றனர். தமிழில் 1960 களில் தான் புதுக்கவிதை ஆரம்பமானது.

இது New Poetry, Modern Poetry என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. புதுக்கவிதையில் வேற்று மொழிச் சொல்லின் பயன்பாடு காணப்படுகிறது. புதுக்கவிதையை வடிக்கும் எழுத்தாளன் தான் நினைத்ததை எழுதும் சுதந்திரம் உள்ளது.

புதுக்கவிதை வேறு பெயர்கள்

  • கவிதையற்ற கவிதை
  • யாப்பில்லாக் கவிதை
  • வசனக் கவிதை
  • இலகுக் கவிதை
  • கட்டிலடங்கா கவிதை

புதுக்கவிதையின் தோற்றம்

புதுக்கவிதையின் தோற்றத்திற்கு உரைநடையில் செல்வாக்கு, மரபுக் கவிதைகளின் செறிவு குறைந்தமை, அச்சு இயந்திரங்கள் தோன்றியவை மக்களின் மொழிநடையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியன அடிப்படை காரணங்களாக காணப்படுகிறது.

19ம் நூற்றாண்டு வரை செய்யுள் வடிவிலேயே இலக்கியங்கள் காணப்பட்டன. இந்நூற்றாண்டில் மேலைநாட்டின் பழைய யாப்பு உருவிலிருந்து விலகி இயைபு, தொடை முதலியன இன்றி உரைநடை சாயலில் புதிய கவிஞர்கள் கதையை படைக்கத் தொடங்கினார்கள்.

இக்கவிதை “வசனக்கவிதை”, என்றும் பின்னர் “சுயேச்சா கவிதை”, “லகு கவிதை”, “விடுநிலைப்பா” என்றும் “கட்டிலடங்காக் கவிதை” என்றும் அழைக்கப்பட்டு இறுதியாக “புதுக்கவிதை” என தற்காலத்தில் அழைக்கப்படுகிறது.

புதுக்கவிதையின் வளர்ச்சி

வால்ட் விட்மனின் “புல்லின் இதழ்கள்” என்ற புதுக்கவிதையை படித்த பாரதி அக்கவிதை போல தமிழிலும் புதுமை படைக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் “காட்சிகள்” என்ற தலைப்பில் புதுக்கவிதை எழுதினார்.

இதற்கு அவர் இட்ட பெயர் “வசனக்கவிதை” என்பதாகும். இவரே தமிழில் புதுக்கவிதை வளர்ச்சிக்கு வித்திட்டவர் ஆவார்.

பாரதியை தொடர்ந்து ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராசகோபாலன், வல்லிக்கண்ணன், புதுமைப்பித்தன் போன்றோர் புதுக்கவிதைகளை படைத்து தமிழ்ப்புதுக்கவிதைகளை வளர்த்தனர். புதுக்கவிதைகள் மூன்று காலக்கட்டங்களாக தோன்றி வளர்ச்சி கண்டது.

1. மணிக்கொடிக் காலம்.

மணிக்கொடி காலத்தில் “மணிக்கொடி” என்ற இதழ் மட்டுமன்றி “சூறாவளி”, “காலமோகினி”, “கிராம ஊழியன்”, “சிவாஜி மலர்”, “நவசக்தி”, “ஜெயபாரதி” ஆகிய இதழ்கள் புதுக்கவிதைகளை வெளியிட்டன.

இவ்விதழ்களுள் மணிக்கொடி இதழ் முதலில் தோன்றியதால் இக்காலத்தை “மணிக்கொடி காலம்” என அழைத்தனர்.

இக்காலத்தில் புதுக்கவிதை முன்னோடிகளான ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராசகோபாலன், க.நாசுப்பிரமணியன், புதுமைப்பித்தன் போன்றோர் மணிக்கொடிக் காலத்து கதாநாயகர்களாக விளங்கினர்.

2. எழுத்துக் காலம்

“எழுத்து”, “சரஸ்வதி”, “இலக்கிய வட்டம்”, “நடை”, “தாமரை”, “கசடதபற” போன்ற இதழ்கள் இக்காலக்கட்டத்தில் புதுக்கவிதையை வளர்த்தன.

ந.பிச்சமூர்த்தி ஆரம்பித்து வைத்த புதுக்கவிதை இயக்கம், எழுத்து இதழில் தொடர்ந்தது. மயன், சிட்டி, வல்லிக்கண்ணன் ஆகியோர் ஒன்று சேர்ந்து சிசுசெல்லப்பா, க.நாசுப்பிரமணியன் போன்றோர் இக்காலத்துக்கு சிறப்பு சேர்த்தனர்.

3. வானம்பாடிக் காலம்

“வானம்பாடி”, “தீபம்”,”கணையாழி”,”சதங்கை” முதலிய இதழ்கள் இக்காலத்தில் புதுக்கவிதைக்கு முன்னுரிமை தந்து வெளியிட்டன. புவியரசு, ஞானி, முல்லை, ஆதவன், அக்னிப்புத்திரன், சிற்பி, சதங்கை, கொங்காண்டான், தமிழ்நாடன், சக்தி கானல், மு.மேத்தா, தமிழின்பன், ரவீந்திரன் முதலியோர் வானம்பாடி கவிஞர்களாவர்.

புதுக்கவிதை வடிவங்கள்

19ம் நூற்றாண்டுக்குப் பின் மொழியமைப்பிலும் வெளியிடும் பார்க்கிலும் மாறுதல்கள் ஏற்பட்டன. ஹைக்கூ (துளிப்பா), சென்ரியு(நகைத்துளிப்பா), லிமரைக்கூ(இயைபுத் துளிப்பா), ஹைபுன், குறட்கூ, சீர்க்கூ, கஸல் எனும் வகைகளும் புதுக்கவிதைகளின் சாரம்சமாய் நாளும் தழைத்து வருகின்றன.

புதுக்கவிதையின் இலக்கணம்

தொல்காப்பியர் புதிதாய் பிறக்கும் இலக்கியத்தை “விருந்து” எனப் பெயரிட்டு சிறப்பித்து வரவேற்றார்.

புதுக்கவிதைகள் மரபுக்கவிதை போலல்லாமல் மாறுபட்ட நிலையில் அதாவது இவை இலக்கணச் செங்கோல், யாப்பு சிம்மாசனம், எதுகைப் பல்லாக்கு, கனிமொழி சேனை, பண்டித பவனி இவை எதுவும் இல்லாது புதுக்கவிதைகள் தம்மைத்தாமே ஆளும் சிறப்பு பெற்ற கவிதைகளாகும்.

இக்கவிதைகளில் உவமையணியை விட உருவக அணியே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

புதுக்கவிதைகளின் சிறப்புகள்

புதுக்கவிதைகள் எளிய மொழிநடையிலுள்ளதால் அனைவராலும் விளங்கிக் கொள்ள கூடியதாக இருக்கும். நவீன தமிழிலக்கியத்தின் சிறப்புக்கும் சான்றாக புதுக்கவிதைகள் விளங்குகின்றன.

புதுக்கவிதை வழிப் பல கவிதை முன்னோடிகள் வளர்ச்சி அடைந்தனர். சுருக்கம் கொண்டதனால் எழுதுவது இலகுவானது ஆகும். பேச்சு வழக்கு சொற்கள், ஒலிநயம் காணப்படுவது மற்றமோரு சிறப்பம்சமாகும்.

வடமொழி, ஆங்கிலம், பேச்சு வழக்கு சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு கருப்பொருளை காட்சியாக கொண்டு நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தக் கூடியதாய் புதுக்கவிதைகள் சிறப்பு பெறுகின்றன.

You May Also Like:
ஊடகம் என்றால் என்ன
மனம் என்றால் என்ன