குற்ற வழக்குகளில் குற்றத்தை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க முக்கிய காரணியாக விளங்குவது சாற்றியங்கள் ஆகும்.
திறமையான அரசு வழக்கறிஞர்களின் வாதத்தால் பெரும்பாலான வழக்குகளில் குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு, தண்டனை பெற்றுக் கொடுக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணியாக விளங்குபவர்கள் சாட்சிகளே ஆகும்.
குற்றவியல் வழக்குகளில் குற்றவாளிகள் எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.
ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பது ஒரு சட்டவியல் கோட்பாடு ஆகும். அதனால்தான் குற்றம்புரியாத ஒரு நிரபராதி தண்டனைக்கு ஆளாகக்கூடாது என்பதில் நீதிமன்றங்கள் கவனமாக இருக்கின்றன.
நிரபராதி தண்டனைக்கு உட்படக் கூடாது என்பதால்தான் வழக்கில் நீதிமன்றத்திற்கு சந்தேகம் எழுந்தால், அந்தச் சந்தேகத்தின் பலனைக் குற்றவாளிகளுக்கு கொடுக்கிறது.
இதன் பொருட்டே சாட்சிகள் கூறும் வாக்கு மூலங்கள் ஆழ்ந்து, கவனத்துடன் பரிசீலிக்கப்படுகின்றன. அதனால்தான் குற்றவியல் வழக்குகளில் வழக்கை நியாயமான எல்லாச் சந்தேகங்களுக்கும் அப்பால் நிரூபிக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.
பிறழ் சாட்சி என்றால் என்ன
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 154 IEA பிறழ் சாட்சி (Hostile witness) என்பது பற்றி கூறுகின்றது.
புகாரின் அடிப்படையில் புலன் விசாரணையை மேற்கொள்ளும் காவல்துறை ஆய்வாளர் குற்றம் பற்றி அறிந்த சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்வார். சாட்சிகள் சொல்லும் வாக்குமூலத்தைப் பதிவு செய்துகொள்வார்.
இது குற்றவிசாரணை முறைச் சட்டம் பிரிவு 161ன் கீழ் பதிவு செய்யப்படும். இந்த வாக்கு மூலத்தில் சாட்சிகள் கையெழுத்திட வேண்டியதில்லை. இந்தச் சாட்சிகளின் வாக்குமூலங்களும், இதர ஆவணங்களும், குற்றவாளிகளுக்கு குற்றப்பத்திரிகை கொடுக்கப்படும் போது வழங்கப்படும்.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் போது ஏற்கனவே காவல்துறை ஆய்வாளரிடம் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சாட்சிகள் சாட்சியம் தர வேண்டும். அவர்கள் சாட்சியம் அப்படி அமையாவிட்டால் அவர்கள் எதிராகப் போய்விட்டார் என்பார்கள். இத்தகைய சாட்சிகளை “பிறழ் சாட்சி” என்பார்கள்.
சுருங்க கூறுவதாயின், எவர் ஒருவர் நீதிமன்றத்தில் நடைபெறுகின்ற ஓர் வழக்கில் தமது தரப்புச் சாட்சியாக அழைத்து வரக் கூடிய நபர் அவர் அதற்கு மாறாக சாட்சியம் அளிக்கின்ற போது அவர் பிறழ் சாட்சி என்று அழைக்கப்படுவர்.
சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டால் குற்றவாளிகளின் வழக்கறிஞருக்கு குறுக்கு விசாரணை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏன் என்றால் அச்சாட்சிதான் அரசு தரப்பை ஆதரிக்கவில்லையே. ஆனால் அப்படிப்பட்ட பிறழ் சாட்சியை, நீதிமன்றத்தின் அனுமதியோடு அரசு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்வார்.
குற்றவியல் வழக்குகளில் சாட்சிகள் தடம் மாறுவதும், புரள்வதும் புதிதல்ல. சில சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறிவிடுவதாலேயே குற்றவாளிகள் விடுதலை பெற்றுவிடுவார்கள் என்று நினைப்பதும் சரியானது எனவும் கூறிவிட முடியாது.
எனினும் பல பிறழ் சாட்சியங்களால் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளமை மறுப்பதற்கல்ல. மாறாத இதர சாட்சிகளின் வாக்குமூலங்கள், கோலையாகவும், முரண்பாடு இல்லாமலும், நம்பும்படியும் இருந்தால், அவைகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தண்டிக்க முடியும்.
ஒரு சாட்சியின் சாட்சியத்தை இன்னொரு சாட்சி ஒத்துழைத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட இதர ஆவணங்கள் முதலியவையும் ஒரு குற்றவாளியைத் தண்டிக்க உதவும். பல குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்படக் கூடாது.
Read more: மன அழுத்தத்தை குறைப்பது எப்படி