பறவை இனங்கள் அதிக புத்திக்கூர்மையும் நுண்மதிக்கூர்மையும் உடைய இனமாக அறியப்படுகின்றன.
Table of Contents
பறவைகள் பாதுகாப்பு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- பறவைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம்
- பறவைகளுக்கான அச்சுறுத்தல்கள்
- பறவைகளை பாதுகாக்கும் வழிமுறைகள்
- முடிவுரை
முன்னுரை
இயற்கையின் படைப்பில் பறவைகள் தனித்துவமானவை. இந்த உலகில் பல பறவை இனங்கள் பலவகையான சிறப்புகளுடன் காணப்படுகின்றன. உலகின் நிலைத்தன்மையை பேணுவதில் பறவைகளுக்கும் தனியிடம் உண்டு.
குறிப்பாக காடுகளின் பரம்பல்களுக்கு பறவைகள் பெரிதும் உதவுகின்றன. இன்று பல பறவை இனங்கள் அழிவின் விளிம்பில் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.
பறவைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம்
இப்பிரபஞ்சம் ஆக்கம், அழிவு என இயங்கி வருகிறது. இந்த உயிர்த்தொழிற்பாட்டில் ஒவ்வொரு அங்கியும் தமது பங்களிப்பை வழங்குகின்றன. அந்தவகையில் பறவைகளின் பங்களிப்பும் இன்றியமையாததாகும்.
உண்ணும் பழங்களின் விதைகளை ஆங்காங்கே விதைத்து மரங்களும் காடுகளும் உருவாக உதவுகின்றது.
மேலும் பயிர்ச்செய்கையில் பயிர்களை நாசமாக்கும் பூச்சிகளை உணவாக கொள்வதுடன் மகரந்தச்சேர்க்கையிலும் தாவர இனத்தின் பரம்பலிலும் பெரும் பங்கு வகிக்கின்றன.
பறவைகள் ஒரு நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சியிக்கும் உதவுகிறது. பறவை இனங்கள் அதிக புத்திக்கூர்மையும் நுண்மதிக்கூர்மையும் உடைய இனமாக அறியப்படுகின்றன.
பறவைகளுக்கான அச்சுறுத்தல்கள்
இன்றைய காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றங்கள், சூழல் மாசடைதல், வளிமண்டல வெப்பநிலை அதிகரிப்பு என்பன உயிர்க்கோளத்தின் சீரான இயக்கத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. இவை பறவைகளின் நிலவுகையை பெரிதும் பாதிக்கின்றன.
பல மில்லியன் ஏக்கர் நிலப்பரப்பு காடுகள் அழிக்கப்பட்டதால் பறவைகள், விலங்கினங்களின் வாழிடங்கள் கேள்விக்குறியாக மாறுகின்றது.
அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக காடழிப்புகள் நிகழ்வது பறவையினங்களின் அழிவுக்கு பிரதான காரணமாக அமைகின்றது.
அதிகரிக்கும் மழைவீழ்ச்சி மற்றும் நெய்தல் நில வெப்பநிலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு அச்சூழலில் வாழும் பறவைகளின் நிலவுகைக்கு அச்சுறுத்தலாகியுள்ளது.
சூழலில் சேரும் நச்சு வாயுக்கள், பறவைகளின் உணவில் சேரும் பிளாஸ்டிக் போன்ற கழிவுகள் மென்மேலும் அவற்றின் அழிவுக்கு வழிகோலுகிறது எனலாம்.
பறவைகளை பாதுகாக்கும் வழிமுறைகள்
முதன்மையாக சுற்று சூழல் பாதுகாப்புக்கு அனைவரும் போராட வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக அகற்றும் வழிமுறைகளையும் மீள்சுழற்சிக்கு உட்படுத்தும் வழிமுறைகளையும் அறிய வேண்டும்.
மக்களுக்கு மர நடுகையை ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் பறவைகளுக்கான வாழிடங்கள், உணவுத்தேவைகள் என்பன அமைத்துக் கொடுக்கப்படுவது மட்டுமன்றி மரங்கள் வளிமண்டலத்தை தூய்மைப்படுத்துவதற்கும் உறுதுணையாகின்றன.
மேலும் சில நாடுகளில் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் பறவையினங்களை பாதுகாக்க சரணாலயங்கள் அமைப்பது போன்ற உடனடி நடவடிக்கைகளை அந்நாட்டு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
முடிவுரை
மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இப்போது அதிக தொலைபேசி கோபுரங்கள் அமைக்கப்படுவதால் சில ஆண்டுகளுக்கு முன் கீச்கீச் என்று எம் வீடுகளை சுற்றி வரும் சிட்டுக்குருவிகளை இப்போது காண்பது அரிதாகிவிட்டது.
பறவைகள் இன்று இணையத்தில் தேடி அறியும் இளம் தலைமுறையினர் அவர்களின் எதிர்கால சந்ததியினருக்காவது பறவைகளைக் காணும் வழிமுறைகளை அமைத்து தர போராட வேண்டும்.
You May Also Like: