இந்த பதிவில் “நீர் மேலாண்மை கட்டுரை” பதிவை காணலாம்.
எதிர்கால தலைமுறையினருக்கு புதிய சுத்தமான நீர் கிடைப்பதை உறுதி செய்ய நீர் பாதுகாப்பு முக்கியம்.
Table of Contents
நீர் மேலாண்மை கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- நீர் மேலாண்மையின் முக்கியத்துவம்
- நீரின் அவசியம்
- தமிழ் இலக்கியங்கள் சுட்டும் நீர் மேலாண்மைச் செய்திகள்
- நீர்ப் பாதுகாப்பு
- முடிவுரை
முன்னுரை
உலகம் செழிக்க அடிப்படையாய் விளங்குவது நீராகும். நீரானது புதுப்பிக்கத்தக்க ஆனால் வரையறுக்கப்பட்ட இயற்கை வளமாகும். இயற்கை நமக்கு அளித்துள்ள அற்புதங்களில் நீர் முதன்மை பெறுகின்றது.
மனிதர்கள் மட்டுமின்றி தாவரங்களும் பிற உயிர்களும் உயிர் வாழ அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான நீர் மிகவும் அவசியமாகும். இக்கட்டுரையில் நீர் மேலாண்மை பற்றி நோக்கலாம்.
நீர் மேலாண்மையின் முக்கியத்துவம்
நீர் மேலாண்மை பொருளாதார வளர்ச்சிக்கும், வறுமை ஒழிப்பிற்கும் மிகவும் அவசியமானது ஆகும். நீரை தேக்கி வைக்கும் நீர் மூலாதாரங்கள் பாதுகாக்கபட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
மழை பெய்யாத காலங்களில் வறட்சியை தடுத்து பயிர்ச்செய்கை, குடிநீர் போன்றவற்றை பெற்றுகொள்ள நீர் மேலாண்மை முக்கியத்துவம் பெறுகின்றது.
தரைக்கீழ் நீரைப் பாதுகாத்துக் கொள்ளவும் நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து கொள்ளவும் நீர்மேலாண்மை இன்றியமையாததாகும்.
நீர் மேலாண்மையின் முக்கியத்துவம் பற்றி அறிந்த நம் முன்னோர்கள் குளங்கள், ஆறுகள், ஏரிகள், அணைக்கட்டுகள் முதலானவற்றை புனரமைப்புச் செய்தது மட்டுமன்றிப் புதிதாக உருவாக்கியும் கொண்டார்கள்.
நீரின் அவசியம்
உலகம் உய்யவும், உயிர்கள் வாழவும் மிகமிக அவசியம்.
“விசும்பின் துளிவீழின் அல்லால் மற்று ஆங்கே
பசும்புல் தலை காண்ப அரிது”
என்கிறார் திருவள்ளுவர்.
அதாவது வான்பொழியும் நீரே உயிர்ப்பு என்பதற்கு அடிப்படையாய் அமைகின்றது. அனைத்து உயிர் இனங்களும், செடிகள் மற்றும் பிராணிகள் ஆகியவைகளும் உயிர்வாழ நீர் மிகவும் அவசியமாகும்.
மனித உடலில் நீரானது உடல் வெப்பநிலையை பேணவும், உடலில் உள்ள அனைத்து கலங்களுக்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டுபோய் சேர்க்கவும் பயன்படுகிறது.
தமிழ் இலக்கியங்கள் சுட்டும் நீர் மேலாண்மைச் செய்திகள்
இடியுடைப் பெருமழை எய்தா ஏகப் பிழையா விளையுள் பெருவளம் சுரப்ப மழைபிணித்(து) ஆண்ட மன்னவன்… என்று, மழை நீரினை ஏரிகள், குளங்களில் சேமித்து வைப்பது பற்றி இளங்கோவடிகள் தம் படைப்பான சிலப்பதிகாரத்தில் குறிப்பிடுகின்றார்.
ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையில் “பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி இரும்பெரு நீத்தம் புகுவது போல” எனக் குறிப்பிடுவதன் மூலமாக சுருங்கை என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய குழாய் அதாவது பெருங்குளங்களாகிய பேரேரிகளின் ஒருபுறம் உள்ள சிறிய சுருங்கை வழியாக அங்கு தேக்கப்பட்ட நீர் வெளியேறி மக்களுக்கு அளவிட இயலாத வகையில் பயன்தரும். எனும் செய்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
நீர்ப் பாதுகாப்பு
உலகில் மழையிலும், நிலத்தடி நீரிலும் பற்றாக்குறையாக இருக்கின்றன. எனவே நீர் பாதுகாப்பு என்பது அவசியமானதாகும். நீர் பாதுகாப்பானது தண்ணீரைச் சேமிப்பதையும், அதன் தேவையற்ற விரயத்தை குறைப்பதையும் குறிக்கிறது.
இயற்கை நீரைப் பாதுகாப்பதற்கும் நிலத்தடி நீர் மட்டத்தை நிரப்புவதற்கும் மிகவும் பயனுள்ள முறையாக மழைநீர் சேகரிப்பு காணப்படுகின்றது. எதிர்கால தலைமுறையினருக்கு புதிய சுத்தமான நீர் கிடைப்பதை உறுதி செய்ய நீர் பாதுகாப்பு முக்கியம்.
முடிவுரை
நம் முன்னோர்களால் மிகவும் போற்றிப் பாதுகாத்து பயன்படுத்தி வந்த நீரை நாம் மதிக்கத்தவறியதால் ஏற்பட்ட விளைவுதான் இன்றைய நீர் பற்றாக்குறை நிலை ஆகும். நீரை சேமித்து வைத்தால் தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும்.
போதுமான நீர் மேலாண்மையின் மூலம் பல மில்லியன் கணக்கான மக்களுக்கு பாதுகாப்பான நீரினை வழங்க முடியும். எனவே நீர் மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்படுவது அவசியமாகின்றது.
You May Also Like : |
---|
சேவை துறையின் வளர்ச்சி கட்டுரை |
நெகிழி இல்லா உலகம் கட்டுரை |