இந்த பதிவில் “நான் ஒரு உண்டியல் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு (02) கட்டுரை பதிவுகளை காணலாம்.
சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உண்டியலாக நான் இருந்தால் என்ற கற்பனையில் இந்த கட்டுரைகள் தொடர்கின்றன.
Table of Contents
நான் ஒரு உண்டியல் கட்டுரை – 1
குழந்தைகளிற்கு சேமிப்புப் பழக்கத்தை கற்றுத்தந்து எளிதாக பணம் சேமிக்க உதவும் நான் ஒரு உண்டியல் ஆவேன். நான் எவ்வாறு மற்றவர்களின் மகிழ்ச்சியில் பங்களிப்புச் செய்தேன் என்பதைப் பற்றிய எனது வாழ்க்கை கதையைப் பற்றி உங்களுடன் பகிரப்போகின்றேன்.
நான் மட்பாண்டங்கள் செய்யும் தொழிற்சாலை ஒன்றில் உருவாக்கப்பட்டேன். மண்ணால் உருவாக்கப்பட்டிருந்த என்மேல் நீலவண்ணம் பூசப்பட்டிருந்தது. பார்ப்பதற்கு ஒரு அன்னப்பறவையின் அமைப்பில் செய்யப்பட்டிருந்தேன்.
ஊரிலுள்ள மிகப்பெரிய கடை ஒன்றினுள் பார்ப்பவர்கள் மனதை கவரும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தேன். ஒருநாள் ஒரு மனிதர் என்னை வாங்கி அவரது மகனின் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்கும் நோக்கில் அவனிற்கு அன்பளிப்பாக வழங்கினார்.
அச்சிறுவன் என்னுள் சேர்க்கும் பணத்தைக் கொண்டு அவனிற்கு துவிச்சக்கரவண்டி ஒன்று வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்தார். அதில் மகிழ்ந்த சிறுவன் என்னை பத்திரமாக பாதுகாக்க தொடங்கினான்.
தினமும் அவனது தந்தை தரும் பணத்தையும், வேறு வழி மூலமாக கிடைக்கும் பணத்தை எல்லாம் சேர்த்து சிறிது சிறிதாக என்னுள் சேமிக்கத் தொடங்கினான். ஒவ்வொரு நாளும் என்னுள் பணம் நிரம்பும் போதெல்லாம் மிகுந்த குதூகலமடைவான்.
நாட்கள் விரைவாக உருண்டோடின. சிறிது சிறிதாக சேமித்த பணம் ஒருநாள் என்னை முழுதாக நிரப்பியது. என் வாழ்க்கைக் காலம் முடிவடைந்து நான் உடைக்கப்பட போகின்றேன் என்பது எனக்கு மிகுந்த வலியைத் தந்தது.
ஆனாலும் மற்றவர்களிற்கு நன்மையளிக்கும் விடயத்திற்கு பயன்பட போகின்றேன் என்பதனை நினைத்து மனதை தேற்றிக் கொண்டேன்.
ஒருநாள் அவனது தந்தை என்னை சுட்டிக்காட்டி சேமிப்பின் அவசியத்தை பற்றி விளக்கினார். அன்றே நான் உடைக்கப்பட்டு என்னுள் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டார்கள். நான் இப்போது மண்ணோடு மண்ணாக ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.
நான் ஒரு உண்டியல் கட்டுரை – 2
மக்களிற்கு சேமிப்புப் பழக்கத்தை கற்றுத் தந்து அவர்களை செல்வந்தர்களாக மாற்றும் நான் ஒரு உண்டியல் ஆவேன். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர்களது சேமிப்பு மீதியினை என்னுள் இட்டுவைப்பர்.
சிறிதி சிறிதாக நிரம்பும் நான் அவர்களின் பெருந்தேவைகளை பூர்த்தி செய்ய உதவுவேன். தேவைகளை நோக்கமாக வைத்து என்னுள் பணம் சேமிப்போரும் உள்ளனர். வீடுகளில் சேமிப்பிற்கும், வீதிகளில் சமூக சேவைக்கு நிதி திரட்டவும், மதவழிபாட்டுத் தளங்களில் பக்கதர்கள் அவர்களின் காணிக்கையை செலுத்தவும் நான் உதவுவேன்.
பல வடிவங்களில் பல்வேறு வண்ணங்களில் சிறிய மற்றும் நடுத்தர அளவுகளில் காணப்படும் நான் சிறுவர்களை எளிதாகக் கவர்ந்து விடுவேன். மரவுண்டியல், இறப்பர் மற்றும் பிளாஸ்ரிக் உண்டியல், மற்றும் மட்பாண்ட உண்டியல் என பலவகைகளில் காணப்படுவேன்.
பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளிற்கு பிறந்தநாள் பரிசாகவோ அல்லது வெற்றியின் நினைவுச் சின்னமாகவோ என்னைப் பரிசளிப்பர். சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்ளும் போது, நானும் அவர்களின் மகிழ்ச்சியில் ஒரு அங்கமாய் இருப்பதனை நினைத்து அளவில்லா ஆனந்தமடைவேன்.
மனிதர்கள் கடைப்பிடிக்கும் நற்பழக்கங்களில் நானும் பங்களிப்பு செய்வதனை நினைத்து மிகுந்த பெருமிதம் கொள்வேன்.
தற்காலத்தில் இவ்வுலகில் சேமிப்பு என்பது அருகிவரும் ஒன்றாகவே காணப்படுகின்றது. அவ்வாறு சேமிப்பில் ஈடுபடுவோரும் வங்கிகளினூடாகவும், வேறு வழிகளிலும் சேமிப்பதே அதிகம்.
ஆனால் எத்தனை வழிகள் இருந்தாலும் சிறுவயது முதலே சேமிப்பை கற்றுத்தர நானே சிறந்தவன். சிறுவர்கள் தவிர வீட்டை நிர்வகிக்கும் பெண்களும், வயது முதிர்ந்த பெரியவர்களும் என்னைப் பயன்படுத்துவர்.
இவ்வாறு அனைவருக்கும் உதவிபுரிபவனாக இருப்பதில் மிகுந்த மனநிறைவும், மகிழ்ச்சியும் அடைவேன்.
You May Also Like :