சிவனை வழிபட கூடியது சிவராத்திரி என்றும் அம்பாளை வழிபட கூடியது நவராத்திரி என்றும் இந்து மதத்தில் ஒரு விழாவாக கடைப்பிடித்து வருகின்றனர்.
சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் மிகவும் முக்கியமான விரதமாக நவராத்திரி விரதம் காணப்படுகின்றது.
நவராத்திரியானது 9 நாட்களும் முப்பெரும் தேவியரின் வழிபாடாக உள்ளது. முதல் மூன்று நாட்களும் துர்க்கையை வேண்டியும், இடை மூன்று நாட்கள் இலட்சுமி தேவியை வேண்டியும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை வேண்டியும் வழிபாடு நடத்தப்படுகின்றது.
முதல் மூன்று நாட்களில் துர்க்கையை மகேஸ்வரி, கோமாரி, வராகியாகவும் இடை மூன்று தினங்களில் இலட்சுமி தேவியை மகாலட்சுமி, வைஸ்ணவி, இந்திரானியாகவும் கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதிதேவியை சரஸ்வதி, நரசிம்கி, சாமுண்டியாகவும் வழிபாடு செய்கின்றனர்.
நவராத்திரியின் 9 நாட்களும் பராசக்தி ஒவ்வொரு தேவியின் வடிவில் ஒரு வயது முதல் 10 வயது வரை அவதாரம் செய்கின்றார்.
தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தரக்கூடிய விரதம் நவராத்திரி விரதம் ஆகும்.
நவராத்திரியில் அம்பாளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நெய்வேத்தியம், ஒவ்வொரு விதமான மலர், 9 வகையான வாத்தியங்கள், அம்பாளை பூஜிக்க ஒன்பது வகையான மந்திரங்கள் என்று ஏராளமாக இருக்கின்றன.
நவராத்திரியான 9 நாட்களில் அம்பாளை ஒவ்வொரு அவதாரங்களாக அலங்கரித்து கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருவது வழக்கமாகும்.
இந்த விழாவானது இந்துக்களால் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் தமிழகத்தில் தூத்துக்குடியில் அமைந்துள்ள குலசேகர பட்டியில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
நவராத்திரி மூலம் சொல்லப்படுவது யாதெனில், இதனது தாற்பரியத்தை தெரிந்து கொள்வதன் மூலம் வாழ்க்கையின் இன்னல்களை போக்குவதற்கு வழி கிடைக்கும் என்பதாகும்.
அதுமட்டுமல்லாது நம்மிடம் இருக்கும் நல்ல விடயங்களை ஒன்று சேர்த்து நம்மிடம் உள்ள தீய விடயங்களை அழித்து பக்குவப்படுத்த கூடிய தவக்காலமாக இக்காலம் காணப்படுகின்றது.
Table of Contents
நவராத்திரி என்றால் என்ன
நவம் என்றால் ஒன்பது என்று பொருள். ஒன்பது ராத்திரிகள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான விழா நவராத்திரி விழா ஆகும். அம்பாள் மகிஷாசுரனை வதம் செய்ய ஒன்பது நாட்கள் தவம் செய்த காலம் தான் இந்த நவராத்திரியாகும்.
முப்பெரும் தேவியர்களான மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகிய மூன்று தேவியரும் ஒரு ரூபமாக வந்து மகிஷாசூரனை வதம் செய்த நாளே நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படுகின்றது.
நவராத்திரி கொண்டாடும் முறை
நவராத்திரி விழாவினை கொலு வைத்துக் கொண்டாடுவர். அத்துடன் நவராத்திரி தினங்களில் விரதம் இருந்து அம்மனை வழிபடுவது வழக்கம்.
தினமும் ஒரு அம்பிகையின் அவதாரத்தை வழிபடுதல் வழக்கமாக உள்ளது. நவராத்திரி தினங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தானியங்களால் நெய்வேத்தியம் செய்து அதனை அம்பாளுக்கு படைத்து அதனை அருகில் இருப்பவர்களுக்கு கொடுத்து உண்டு மகிழ்வர்.
இக்காலத்தில் பிரசாதமாக வழங்கப்படும் கூடிய தானியங்கள் யாவும் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுத்து உடலை வலுப்படுத்தக் கூடியவை.
எனவே இந்த நவராத்திரியை வெறும் ஆன்மீகமாக மட்டும் பார்க்காமல், அறிவியல் ரீதியாகவும் பார்த்து, பாரம்பரியத்தை காத்து எதிர்காலத் தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பது நமது கடமையாகும்.
Read more: இறந்தவர்களை வழிபடும் முறை