நம்பிக்கை தரும் தன்னம்பிக்கை கட்டுரை

Thannambikkai Katturai In Tamil

இந்த பதிவில் “நம்பிக்கை தரும் தன்னம்பிக்கை கட்டுரை” பதிவை காணலாம்.

தோல்விகள் துன்பங்கள் என்பது அனைவர் வாழ்விலும் பொதுவானது தன்னம்பிக்கை எனும் ஆயுதம் நம்மிடம் இருந்தால் அனைத்தையும் வென்று விடலாம்.

நம்பிக்கை தரும் தன்னம்பிக்கை கட்டுரை

குறிப்புச் சட்டகம்

  1. முன்னுரை
  2. தன்னம்பிக்கையின் அவசியம்
  3. நம்பிக்கை தரும் தன்னம்பிக்கையின் நன்மைகள்
  4. தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகள்
  5. தன்னம்பிக்கைப் பொன்மொழிகள்
  6. முடிவுரை

முன்னுரை

எந்த சூழ்நிலையிலும் தளராத உள்ளம் கொண்டவனுக்கு இந்த உலகில் முடியாதது என்று எதுவுமில்லை. பிறர் மீது நாம் வைக்கும் பற்று நம்பிக்கை ஆகும். நம்மீது நாமே வைக்கும் நம்பிக்கையே தன்னம்பிக்கையாகும்.

இது நம்முள் தோன்றும் ஒருவித மனப்பாங்கு. தன்னம்பிக்கையானது வாழ்வில் துவண்டு போய் சோர்ந்த ஒருவனைக் கூட வெறிகொண்டெழவைக்கும்.

ஒருவன் தன் மீது முழுமையான நம்பிக்கை கொண்டிருப்பின் எந்தத் தடைகளும் அவனுக்குத் தெரியாது. இத்தகைய நம்பிக்கை தரும் தன்னம்பிக்கை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

தன்னம்பிக்கையின் அவசியம்

வாழ்வில் ஜெயிக்க வேண்டுமெனில் தன்னம்பிக்கை அவசியம். மனித வாழ்வானது இன்பம்⸴ துன்பம் இரண்டும் இரண்டறக் கலந்தது.

தோல்விகள் பல அடையக்கூடும்⸴ அவமானங்களைச் சந்திக்க நேரிடலாம்⸴ கஷ்ட துன்பங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரலாம்⸴ இவற்றையெல்லாம் எதிர்நீச்சல் போட்டு வெற்றி கொள்ள தன்னம்பிக்கை அவசியமாகும்.

வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டுமெனில் தன்னம்பிக்கை முக்கியமாகும். தன்னம்பிக்கையின்றிச் சாதனைகள் செய்திட முடியாது.

நம்பிக்கை தரும் தன்னம்பிக்கையின் நன்மைகள்

நாம் நம்பிக்கையோடும் தன்னம்பிக்கை கொண்டும் ஒரு செயலைச் செய்கின்ற போது வெற்றியை நமதாக்கிக் கொள்ள முடியும். தன்னம்பிக்கை நமக்கு இருக்கும்போது மற்றவர்களின் தயவின்றி வாழ்வில் முன்னுக்கு வரமுடியும்.

வாழ்வின் தடைகளைத் தகர்த்தெறிய முடியும். பிரச்சினைகளை எதிர்கொண்டு அதனை தீர்த்துக்கொள்ள தன்னம்பிக்கை உதவுகின்றது. நம்பிக்கை தரும் தன்னம்பிக்கையால் எமக்குள் ஒளிந்திருக்கும் பலத்தை வெளிக்கொண்டுவர முடியும்.

தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகள்

நம்மீது நாமே நம்பிக்கை கொள்ள வேண்டும். நம்பிக்கையை எப்போதும் கைவிடக்கூடாது. என்னால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். சோர்ந்து போகும் நேரங்களில் கடந்தகால வெற்றிகளை நினைவிற் கொள்ள வேண்டும்.

தாழ்வு மனப்பான்மையை எப்போதும் மனதில் எழவிடாமல் நேர் நிலைகருத்துக்களை மனதிற் கொள்ள வேண்டும். விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளப் பழக வேண்டும்.

பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க முன்வர வேண்டும். அப்போதுதான் நாளடைவில் அதை எதிர்கொள்ள முடியும். மன்னிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

தன்னம்பிக்கைப் பொன்மொழிகள்

  • வெற்றி எனும் உயரத்தை அடைய ஏணியாக இருக்கும் ஆயுதம் தான் தன்னம்பிக்கை அதை எப்போதும் வளர்த்துக் கொள்
  • கஷ்டங்கள் மட்டும் இல்லையெனில் போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்
  • தடம் பார்த்து நடப்பவன் மனிதன் தடம் பதித்து நடப்பவன் தான் மாமனிதன்
  • வாழ்க்கையில் முன்னேற குன்றாத உழைப்பு⸴ குறையாத முயற்சி⸴ வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இம்மூன்றும் இருந்தால் போதும்.
  • நல்லதே நடக்கும் என்று நம்புங்கள் அது உங்களை மட்டுமல்ல உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாய் வைத்திருக்கும்.

முடிவுரை

வாழ்வில் முன்னேற தன்னம்பிக்கை அவசியம். அத்தகைய தன்னம்பிக்கையைத் தருவது நம்பிக்கையாகும். உலகின் சாதனையாளர்கள் தன்னம்பிக்கையைக் கைவிடாமல் தான் வாழ்வில் முன்னேறியுள்ளனர்.

தோல்விகளைக் கண்டு சோர்வடையாத தன்னம்பிக்கை கொண்டு மீண்டெழுந்தவர் தான் டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்கள். எனவே தன்னம்பிக்கையின் சின்னமாகத் தனியொருவனாக உழைத்து வாழ்வில் முன்னேறுவோம்.

You May Also Like :

உழவுத் தொழிலின் பெருமை கட்டுரை

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு கட்டுரை