படபடப்பு குறைய வழிகள்

pathatam kuraiya

இன்றைய காலச் சூழலில் வயது வேறுபாடின்றி அனைவரும் காலை எழுவது முதல் இரவு உறங்கச் செல்லும் வரையில் பதற்றத்துக்கு உள்ளாகின்றனர்.

ஒரு சிலருக்கு எதிர்பாராத வகையில் பயமளிக்கும் சூழ்நிலைகள் அல்லது சம்பவங்கள் ஏற்படும் போது பதட்டம் உருவாகும். இது இயல்பான ஒன்றாகும்.

ஆனால் ஒரு சிலருக்கு பதட்டமான சூழ்நிலைகளிலிருந்து, விடுபட்ட பின்பும் காரணமில்லாமல் பதட்டப்படுவார்கள்.

எனவே இதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் பற்றி அறிந்து கொள்வது முக்கியமானதாகும். படபடப்பை குறைப்பதற்கான வழிமுறைகள் பற்றி இப்பதிவில் காண்போம்.

படபடப்பு குறைய வழிகள்

#1. தியானப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தியானம் மனதை ஒருநிலைப்படுத்த உதவும். எனவே தியானப் பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ளும் போது படபடப்பு குறையும்.

#2. மூச்சு பயிற்சியை செய்ய வேண்டும்.

ஆழ்ந்த மூச்சு உடலை இளைப்பாறச் செய்து பதற்றத்தைக் குறைக்கின்றன. மூச்சை உள்ளிழுத்து பின் மெதுவாக மூச்சை வெளிவிடவும். இந்தப் பயிற்சியை 5-ல் இருந்து 10 நிமிடங்களுக்குச் செய்யலாம். ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு அதிலேயே மனதைக் குவிப்பதன் மூலமாகவும் மனப் பதற்றத்தைக் குறைக்க முடியும்.

#3. புரிந்து கொள்ளுதல்.

உடலளவிலும், மனதளவிலும் ஏற்படும் பதற்றத்தின் அறிகுறிகள், எந்த சூழ்நிலையில் ஏற்படுகிறது, எவ்வளவு நேரம் நீடிக்கிறது, எப்படிச் சரியாகிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இதை தினமும் கவனிப்பதன் மூலம் பதற்றத்தைப் பற்றிய புரிதல் அதிகமாகும். அதை எப்படிச் சரிசெய்வது என்றும் பார்க்க முடியும்.

#4. படபடப்பை குறைக்கும் சீமைச்சாமந்தி டீ

சீமைச்சாமந்தியில் எபிஜெனின், லயொடோலின் மற்றும் பைசொபொலல் ஆகிய பொருட்கள் உள்ளன. இது உடலுக்கு ஓய்வு அளிக்கும். தினமும் சீமைச்சாமந்தி டீ அருந்துபவர்களுக்கு குறிப்பிட்ட அளவு மன அழுத்தம் மற்றும் பதற்றம் குறைந்துள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன.

#5. லாவெண்டர் மணத்தை உள்ளிழுக்கவும்.

லாவெண்டர் மணம் மனத்திற்கு இனிமை அளிக்கிறது. இது மனத்தை அமைதிப்படுத்துகிறது. எனவே தினமும் தூங்கச் செல்லும் முன் லாவண்டர் எண்ணெயை தலையணையில் சிறிது பூசிவிட்டு தூங்கலாம். அல்லது குளிக்கும் போது, சிறிதளவு லாவெண்டர் எண்ணெயை சேர்த்துக் குளிக்கலாம்.

#6. இசை

இசையால் வசமாகா இதயம் இல்லை. மனதை அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. இசை மனதுக்கு உதவக்கூடிய மருத்துவமாகும். ரசித்துக் கேட்கும் மெல்லிய இசை, ரத்த அழுத்தத்தைக் குறைக்கும், இதயத் துடிப்பைச் சீராக்கும், பதற்றம், கவலைகளைக் குறைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.

#7. மதுக்குடிப்பது, சிகரெட் புகைப்பது போன்றவற்றைத் தவிர்த்தல்.

மது மற்றும் சிகரெட் பழக்கம் வழக்கமானது உடலிலும்இ மனதிலும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை. எனவே இவற்றைத் தவிர்த்தல் மூலம் படபடப்பை குறைக்கலாம்.

#8. உணவு முறை

ஆரோக்கியமான உணவு முறையே உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது. அதிகமாக காபி பருகுவது பதற்றத்தை அதிகரிக்கும். எனவே அதிகமாக காபி பருகுவதை தவிர்க்க வேண்டும்.

#9. நேர்மறையான எண்ணங்கள்

எதிர்மறையான எண்ணங்கள் மனதில் எழும் போது, இக்கட்டான சூழ்நிலைகளை சமாளிக்க முடியாமல் போய்விடும். எனவே எண்ணங்களை நேர்மறையானதாக வைத்திருக்க வேண்டும். எண்ணங்கள் சீராக இருக்கும் போது மனதில் பதட்டம், பயம் போன்றவற்றைச் சிறப்பான முறையில் கையாண்டு அதில் இருந்து வெளிவர முடியும்.

#10. மருத்துவரை அணுக வேண்டும்.

ஓரளவு வரை, மன அழுத்தம் அல்லது படபடப்பு இருப்பது சீரான வளர்ச்சிக்கு தேவைப்படவும் கூடும். எனினும், அழுத்தம் அதிகமானால் மனநோயைத் தூண்டி மன உளைச்சலை அதிகரிக்கும். பதற்றத்தின் அளவு கடுமையானதாக இருந்தால், ஒரு மனநல ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

You May Also Like :
நோய் வரக் காரணங்கள்
உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்