தூய்மை இந்தியா மாணவர்களின் பங்கு கட்டுரை

thuimai india katturai in tamil

இந்த பதிவில் “தூய்மை இந்தியா மாணவர்களின் பங்கு கட்டுரை” பதிவை காணலாம்.

சுற்று சூழல் தூய்மையும் சிறந்த கல்வியும் ஊழலற்ற அரசியலும் பக்கசார்பற்ற சட்டமும் நீதியும் தான் ஒரு நாட்டை சிறந்த நாடாக மாற்றும்.

தூய்மை இந்தியா மாணவர்களின் பங்கு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. மாசடையும் சூழல்
  3. மாணவர்களும் எதிர்கால இந்தியாவும்
  4. இந்தியாவை மாற்றும் சக்தி
  5. கற்றுக்கொள்ள வேண்டியவை
  6. சமூகத்துக்கு முன்னுதாரணம்
  7. முடிவுரை

முன்னுரை

ஒரு நாடு எல்லா வளங்களையும் பெருமைகளையும் கொண்டிருப்பதனை விட அந்த நாடு தூய்மையாகவும் ஊழல் இல்லாமலும் இருப்பதில் தான் பெருமை இருக்கிறது.

சுற்று சூழல் மாசடைவில் இந்தியா இன்று மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இதற்கு இங்கே வாழும் ஒவ்வொரு பிரஜைகளும் தான் பொறுப்பாக இருக்க முடியும்.

எவ்வளவு அழகான இயற்கை அழகு நிறைந்தது இந்த நாடு இதனை மாசுபடுத்தியதால் இன்று அனைவரும் பாதிப்பை சந்திக்கின்றனர்.

இக்கட்டுரையில் இந்தியாவின் தூய்மையில் மாணவர்களின் பங்கு பற்றி நோக்கப்படுகிறது.

மாசடையும் சூழல்

இந்தியாவில் உள்ள நகரங்கள் அதிகம் மாசடைந்து காணப்படுகின்றன. தலைநகரான புதுடெல்லி காற்று மாசடைவு அதிகம் உள்ள நகரமாக பதிவாகியுள்ளது. புனித நதிகளான கங்கை, யமுனை போன்றன அதிகளவான மாசடைந்த நதிகளாக மாறியுள்ளன.

சனத்தொகை வளர்ச்சியும் நகராக்கமும் இந்தியாவை நாளுக்கு நாள் மேலும் மாசுபடுத்தி கொண்டே இருக்கின்றது. மக்களும் அவற்றை பற்றி சிந்திக்காது சூழலை மாசுபடுத்தி கொண்டிருக்கின்றனர்.

உலகளவில் வளிமண்டலத்தில் அதிகம் காபனீரொட்சைட் வெளியிடும் நாடுகளில் இந்தியா மூன்றாமிடத்தில் இருக்கிறது. இவ்வாறு இன்றைய சமூகம் பொறுப்பற்று செயற்படுகிறது.

மாணவர்களும் எதிர்கால இந்தியாவும்

“இனி வருங்காலம் இளைஞர்கள் காலம் ஏழ்கடல் மெல்லிசை பாடுதே” என்ற வரிகள் போல இன்றைய இந்தியாவை மாற்ற கூடியவர்கள் மாணவர்கள் தான் என்று டாக்டர் அப்துல்கலாம் எப்போதும் சொல்வார்.

விஞ்ஞானத்தாலும் கண்டுபிடிப்புகளாலும் இந்தியா வளர்ந்திருந்தாலும் தூய்மையான இந்தியா தான் மிகச்சிறந்த வல்லரசாக வலம் வர முடியும்.

ஆகவே அந்த மாற்றங்களை மாணவர்கள் தான் செய்ய வேண்டும். முன்னோர்கள் செய்த தவறை அவர்கள் தான் திருத்தி அமைக்க வேண்டும்.

இந்தியாவை மாற்றும் சக்தி

இந்தியாவை தூய்மையாக மாற்றக்கூடிய சக்தி இளைஞர்கள் கையிலேயே இருக்கிறது. இவர்களின் துடிப்பும் புதுமையான கல்வியும் தான் இந்த நிலையை மாற்ற கூடியது என்பதனால் தான் மாணவர்கள் தூய்மை இந்தியாவில் முக்கிய பங்காக பார்க்கப்படுகின்றனர்.

சுவாமி விவேகானந்தர் “நூறு இளைஞர்களை என்னிடம் தாருங்கள் இந்தியாவை மாற்றி காட்டுகிறேன் என்றார்” அது போல இளைஞர்கள் முன் வந்தால் தூய்மை இந்தியா சாத்தியமாகும்.

கற்றுக்கொள்ள வேண்டியவை

பாடசாலைகளிலே கற்கின்ற வயதில் தான் நல்ல பழக்க வழக்கங்களை கற்று கொள்ள முடியும்.

  • பாடசாலையை கூட்டி சிரமாதானம் செய்து துப்பரவாக வைத்திருத்தல்.
  • குப்பைகளை கண்ட இடங்களில் வீசாது குப்பை தொட்டிகளில் போடுதல்.
  • நெகிழி குப்பைகளை கவனமாக வெளியேற்றுதல்.
  • வாழுகின்ற சூழலை நேரம் ஒதுக்கி துப்பரவு செய்தல்.
  • பொது இடங்களில் குப்பை போடுவதை தவிர்த்தல்

போன்ற விடயங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இதனை கடைப்பிடிக்காதவர்களுக்கும் சொல்லி கொடுக்க வேண்டும்.

கல்வி என்பது எமக்கு மட்டும் பயன்பட கூடாது. அது நமது சமூகத்துக்கும் பயன்பட வேண்டும். அதுபோல நாம் மாற்றத்தை எமது சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும்.

சமூகத்துக்கு முன்னுதாரணம்

எமது சமூகத்தில் கிரிக்கட் வீரர்கள், திரைப்பட நடிகர்கள் போன்றவர்களை முன்னுதாரணமாக பார்க்கும் நமது சமூகம் சுற்றுசூழல் மற்றும் சமூக ஆர்வலர்களை கண்டுகொள்வதில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

இந்த நிலையினை மாற்ற மாணவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வந்து இந்தியாவை தூய்மை ஆக்கும் திட்டத்தில் மக்களுக்கு முன்னுதாரணமாக விளங்கவேண்டும்.

மாணவர்கள் சுற்றுசூழல் ஆர்வலர்களாக மாறவேண்டும். இது காலத்தின் முக்கியமான கட்டாயமாக உள்ளது.

முடிவுரை

“எமது பாரத தேசத்துக்கு சுதந்திரத்தை விட சுத்தம் தான் அவசியம்” என்கிறார் மகாத்மா காந்தி அவர்கள் அது போல சுற்று சூழல் தூய்மையும் சிறந்த கல்வியும் ஊழலற்ற அரசியலும் பக்கசார்பற்ற சட்டமும் நீதியும் தான் இந்தியாவை சிறந்த நாடாக மாற்றும்.

அதற்கு மாணவர்கள் தான் முக்கியமான பங்களிப்பினை வழங்க வேண்டும். சிறந்த கல்வி மூலமாக வரும்காலத்தில் சிறந்த தலைவர்களாக மாணவர்கள் வரவேண்டும்.

கடந்த காலங்கள் கடந்தவையாகவே இருக்கட்டும் “இனி ஒரு விதி செய்வோம்” பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கிய தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றி பெற செய்ய அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

You May Also Like :

சுத்தம் பேணி சுகமாய் வாழ்வோம் கட்டுரை

பிளாஸ்டிக் மறுசுழற்சி கட்டுரை