துரித உணவு தீமைகள்

thuritha unavu theemaigal

முன்பொரு காலத்திற்கு குழந்தைகள் பள்ளி செல்லும் போது பள்ளியின் இடைவேளை நேரத்தில் சாப்பிடத் தயார் செய்யும் உணவுகளாக பெரும்பாலும் இட்லி, தோசை, சாதம், ரொட்டி, சப்பாத்தி என இருக்கும்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் தாய் அல்லது, தந்தை காலையில் வேலைக்குச் செல்பவர்களாகவே அதிகம் உள்ளனர். கூட்டுக் குடும்ப வாழ்க்கையும் அரிதாகி விட்டதால் அவசர அவசரமாக ஏதோ ஒரு துரித உணவை சமைத்து அனுப்பி வைக்கின்றார்கள்.

வீட்டை விட்டு வெளியே செல்லும் இடங்களிலும், பள்ளியில் மதிய உணவுகள் நேரங்களிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் துரித உணவுகள் வசப்படுத்தி வருகின்றன என்று கூறவேண்டும்.

இந்த துரித உணவுகளை எடுத்துக் கொள்வதினால் உடலில் அதிகம் பாதிப்பை ஏற்படுகின்றது. இந்த துரித உணவுகள் நாக்கில் உள்ள சுவை நரம்புகளுக்கு திருப்தியை தருவதுடன், இதனுள் அடங்கியுள்ள அதிக கொழுப்புகள் மனதை ஒரு மயக்கத்தில் வைத்திருக்கின்றது.

ஆனால் தொடர்ந்து நீண்ட நாட்கள் துரித உணவுகளை சாப்பிட்டு வந்தால் பலவித தீமைகளையும், நோய்களையும் எதிர்கொள்ள வேண்டி வரலாம். இதனை இன்றைய குழந்தைகளும், பெற்றோர்களும் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள்.

துரித உணவுகள் என்றால் என்ன

உடனடியாக தயாரிக்க கூடிய அல்லது, சாப்பிடக்கூடிய உணவுகளைத் துரித உணவுகள் என்கின்றோம். குளிர்பானங்கள், நூடுல்ஸ் வகைகள், சிப்ஸ் வகைகள் போன்றவை துரித உணவுகளுக்கு சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.

துரித உணவுகள் ஏற்படுத்தும் பாதிப்புக்கள்

பீட்சா, பர்கர், ப்ரைட் ரைஸ் போன்ற துரித உணவுகளில் அதிகம் கலோரிகள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும், ஊட்டச்சத்து உள்ளடக்கம் குறைவாக இருப்பதினால் அவை உடல் ஆரோக்கியத்தை சேதப்படுத்துவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் பலவீனப்படுத்தும்.

துரித உணவுகளை அதிகம் உண்பதால் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதில் அலட்சியம் காட்டினாலோ, உரிய சிகிர்ச்சை எடுக்கா விட்டாலோ உடலின் ஏனைய உறுப்புகளுக்கும் பாதிப்பு அதிகம் ஏற்படும்.

துரித உணவுகளில் சேர்க்கப்படும் சாயம், அஜினமோட்டோ போன்றவை நமது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

இந்த உணவுகளில் உப்பு, கொழுப்பு, கலோரி அதிகமாக இருப்பதால் ரத்த அழுத்தம் ஏற்படுகின்றது. மேலும் மனசோர்வு தலைவலி, உடல் சோர்வு உடல் எடை அதிகரிப்பு போன்ற வியாதிகள் ஏற்படும்.

வயிற்று வலி, மூட்டு வலி, நாக்கு வீங்குதல் போன்றவை ஏற்படுவதுடன் நரம்பு செல்களும் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகின்றன. ஞாபக சக்தி குறைவு, கவன குறைவு என பல பிரச்சினைகள் ஏற்படும்.

பக்கெட் உணவுகள் எல்லாம் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்கும், அதனுடைய நிறம் சுவை மனம் எல்லாம் மாறாமல் இருப்பதற்கும் பலவகையான செயற்கை உப்புக்கள் மற்றும், உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

இந்தப் பொருட்களினால் எளிதில் ஜீரணிக்க இயலாது. தினசரி இந்த பாக்கெட் உணவுகளை அதிகம் உண்ணும் போது உடலில் நச்சுக்கள் என சொல்லப்படும் Toxins அதிகமாகி அஜீரணக் கோளாறு, புற்றுநோய், தோல் வியாதி போன்ற நோய்கள் ஏற்படலாம். எனவே,

“மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு”

என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க அதாவது, உடலுக்கு மாறுபாடு செய்யாத உணவினையும், நோயினை தராத உணவினையும் உண்பவனுக்கு நோய்களின் துன்பம் வருவதில்லை என்று வள்ளுவர் கூறும் உண்மையை பின்பற்றி வாழ்ந்தால் நோயின்றி மகிழ்வாக வாழலாம்.

Read More: துரித உணவு துரித முடிவு கட்டுரை

போசணை என்றால் என்ன