திறனாய்வு இலக்கியங்கள் புதிய பாதைகளில் பயணிக்க வழி மறுக்காது புதிய வழிகளை வகுத்து கொடுக்கின்றவை ஆகும்.
இது இலக்கிய மதிப்பீடு செய்வதுடன் குறிப்பிட்ட இலக்கியத்தின் தரம், தகுதி, சிறப்பு, சீர்மை என்பவற்றைப் பேசுவதோடு, அவற்றின் கூறுகளும், பண்புகளும் இலக்கிய மதிப்பு உடையவனவா என்பதையும் திறனாய்வுகள் பேசுகிறது.
Table of Contents
திறனாய்வு என்றால் என்ன
திறனாய்வு என்பது ஒரு உயிர் உள்ள உயிரற்ற பொருளின் பண்புகளை பற்றி ஆராய்ந்து உண்மை தன்மையையும் அதில் கூறப்பட்ட நேர் எதிர் கருத்துக்களையும் எடுத்துரைப்பது ஆகும்.
மேலும், திறனாய்வு என்பது குறிப்பிட்ட இலக்கியத்தின் விளக்கங்களையும், தனித்தன்மைகளையும் வாசகர் மனதில் பதியும்படி கொண்டு செல்ல வேண்டும்.
இவற்றைத் தவிரக் குறை அல்லது நிறை என்ற ஒன்றனையே கண்டு அதனையே விதந்து உரைப்பதை நோக்கமாகக கொள்ளக்கூடாது. அது அவ்விலக்கியத்தின் பலவிதமான அல்லது வேறுபட்ட பண்புகளை ஒதுக்கி விடுவது ஆகும்.
திறனாய்வின் நோக்கம்
திறனாய்வு வினாக்களை எழுப்பி, விடை தந்து, வினாக்களையும் எதிர் கொள்கிறது. இலக்கியம் ஒரு கலையாக, ஒரு சாதனமாக ஒரு சக்தியாக வருணிக்கப்படுகிறபோது, அதனுடைய சாத்தியங்களையும், வழிகளையும் திறனாய்வு ஆராய்கிறது.
இலக்கியம் ஒரு புதிராக வருணிக்கப்படுமானால் அந்தப் புதிரைத் திறனாய்வு விடுவிக்க முயல்கிறது.
திறனாய்வின் வகைகள்
திறனாய்வின் வகைகள் பல காணப்படுகின்றன. அவற்றுள் மிக அடிப்படையானவை அல்லது முக்கியமானவை பின்வருமாறு,
பாராட்டுமுறைத் திறனாய்வு
பாராட்டுதல் என்பது பேசப்படும் பொருளைப் போற்றியுரைப்பது என்பது சொல்லுகின்ற வழிமுறையின் ஒரு பண்பு ஆகும்.
எடுத்துக் கொண்ட பொருளையும், இலக்கியத்தையும் குறை காணாமல், அந்தக் குறைகளைக் கண்டாலும் அவற்றைப் பற்றி அதிகம் பேசாமல் நிறைகளை மட்டுமே விதந்து பேசுவது பாராட்டுமுறைத் திறனாய்வு ஆகும்.
இது அளவோடு சொல்லப்பட வேண்டும். திறனாய்வில் வெற்று உரைகள் முக்கியமல்ல என்பதை அறிய வேண்டும்.
முடிபுமுறைத் திறனாய்வு
முடிபுமுறைத் திறனாய்வு என்பது அடிப்படையான சில வரையறைகளையும் விதிகளையும் அளவுகோலாகக் கொண்டு குறிப்பிட்ட இலக்கியம் பற்றிய முடிவுகளை அல்லது தீர்வுகளைச் சொல்லுவது ஆகும்.
விதிமுறைத் திறனாய்வு
விதிமுறைத் திறனாய்வு என்பது, விதிகளையும் அளவுகோல்களையும் அப்படியே ஓர் இலக்கியத்தில் பொருத்திக் காண முற்படுவது. ஆனால் இதன் மூலம் முடிவுகளையோ தீர்வுகளையோ சொல்லுவதற்கு முற்படுவதில்லை.
மாறாகக் குறிப்பிட்ட ஓர் இலக்கியத்தைச் சில வரையறைகளைக் கொண்டு விளக்குவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது.
செலுத்துநிலை அல்லது படைப்புவழித் திறனாய்வு
பொது விதிகளையோ வரையறைகளையோ வைத்துக் கொண்டு, அவற்றின் வழியாக இலக்கியத்தைப் பார்ப்பதிலுள்ள குறைபாடுகளை மனதிற் கொண்டு அவற்றைத் தவிர்க்கும் நோக்கில் அந்த அந்தப் படைப்பின் வழியாகவே அவற்றிற்குரிய விதிகளை வடித்தெடுக்க வேண்டும் என்று சொல்வது, செலுத்துநிலை அல்லது படைப்புவழித் திறனாய்வு ஆகும்.
விளக்கமுறைத் திறனாய்வு
“ஒரு பொருள் அல்லது ஓர் அனுபவம், குறிப்பிட்ட ஒரு முறையில் அல்லது மொழியமைப்பில் அமைந்திருக்குமானால், அதன்மீது ஒளி பாய்ச்சி, அதன் உண்மையையும் பல்வேறு பண்புகளையும் வேறு சொல் வடிவங்களில் அல்லது மொழியமைப்பில் வெளிப்படுத்துவதே விளக்கமுறைத் திறனாய்வு எனப்படுகிறது” என அறிஞர் லியோன் லெவி கூறுகிறார்.
அதாவது, இதைத் தெளிவுபடுத்த வேண்டுமானால் ஒரு பனுவலுக்கு (Text) விளக்கமாகவோ அல்லது அதற்கு மாற்றாகவோ சார்ந்ததாகிய இன்னொரு பனுவலை (Alternative text) தருவது விளக்கமுறைத் திறனாய்வு எனப்படுகிறது.
மதிப்பீட்டு முறைத் திறனாய்வு
மதிப்பீட்டு முறைத் திறனாய்வின் பணி, இலக்கியத்தை மதிப்பீடு செய்கிற பண்பினை அடியொற்றியது ஆகும்.
இலக்கியத்தைப் பகுத்தாய்வதும் விளக்கியுரைப்பதும் அதனுடைய சமுதாய நிலைகளையோ, உளவியல் பண்புகளையோ அளவிட்டுரைப்பது மட்டுமல்ல, அதே தளங்களிலிருந்து அவ்விலக்கியத்தை மதிப்பிட்டுரைப்பதும் ஆகும். இது மதிப்பிட்டுரைப்பதுதான் மதிப்பீட்டு முறைத் திறனாய்வின் அடிப்படைக் கருதுகோள் ஆகும்.
ஒப்பீட்டுத் திறனாய்வு
இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பொருள்களை ஒரு சேர வைத்து, அவற்றிற்கிடையேயுள்ள ஒப்புமையையும், வேற்றுமையையும் பார்ப்பது மனித இயல்பு. அதுபோலவே, கலை இலக்கியங்களுக்கிடையே ஒன்றுபட்ட பண்புகளைப் பார்ப்பது என்பது படிப்பவரின் மன இயல்பு.
ஒப்பிடுவது என்பது சில கூறுகளில் வேறுபட்டும் சிலவற்றில் ஒன்றுபட்டும் இருக்கின்ற இரண்டு பொருட்களின் மேல் நிகழ்த்துகின்ற ஒரு செயல் ஒப்பிட்டு இலக்கியமாகும்.
பகுப்புமுறைத் திறனாய்வு
பகுப்புமுறைத் திறனாய்வு என்பது குறிப்பிட்ட இலக்கியத்தின் பண்புகள் அல்லது கூறுகளை யாதாயினும் ஓர் அளவுகோல் அல்லது நோக்கம் கொண்டு பகுத்துக் காண்பது ஆகும்.
Read more: இதிகாசம் என்றால் என்ன