தமிழ் நாட்டிற்காக உயிர் கொடுத்த தியாகிகள்

தேசத் தலைவர்கள் பல இன்னல்களைத் தாங்கிக் கொண்டு தமது உயிரைத் துச்சமாக எண்ணி சுதந்திரத்திற்காகப் போராடியமையால் இன்றைய தமிழக மக்கள் இவ்வளவு சுதந்திரமாக வாழ்கிறார்கள்.

சத்தியாக்கிரகம், ஆர்ப்பாட்டங்கள், மாநாடுகள், கூட்டங்கள் என பல வழிகளில் ஆங்கிலேய அரசை எதிர்த்து போராடினர். சுதந்திரத்திற்காக அவர்கள் பட்ட துன்பங்களை வார்த்தைகளால் அளவிட முடியாது.

குடும்பத்தை மறந்து சந்தோஷங்களை மறந்து உயிரைத் துச்சமென எண்ணி சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த தியாகிகள் பற்றிய வாழ்க்கை வரலாறு பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

தமிழ் நாட்டிற்காக உயிர் கொடுத்த தியாகிகள்

வீரபாண்டிய கட்டபொம்மன்

வீரபாண்டிய கட்டபொம்மன் பாஞ்சாலிபுர தேசத்தின் சிற்றரசர் ஆவார். அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு ஆர்காடு நவாப் என்பவரின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது.

ஆங்கிலேயர்களிடத்தில் கடன் வாங்கி இருந்தார் நவாப் . எல்லா சிற்றரசர்களும் வரி செலுத்தினாலும் கட்டபொம்மன் மட்டும் வரி செலுத்தவில்லை. ஆங்கிலேயர்கள் பல வழிகளில் வரி வசூலிக்க முயற்சித்தும் அது முடியாமற் போனது.

இறுதியில் கட்டபொம்மனை கைது செய்த ஆங்கிலேய அரசு 1799 அக்டோபர் 16 கயத்தாறு என்ற இடத்தில் ஆங்கிலேயர்களால் கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்டார்.

வாஞ்சிநாதன்

இந்திய சுதந்திரம் கத்தியின்றி இரத்தமின்றி வாங்கப்பட்டது. அதற்கு ஆயுத வழியில் சிலரும் போராடினார்கள். அவர்களிலே வாஞ்சிநாதனும் ஒருவர். இவர் செங்கோட்டையில் பிறந்தார். நாட்டுப்பற்று மிக்க வாஞ்சிநாதன் ஆயுத போராட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தார்.

துரை என்பவரை சுட்டுக் கொன்று விட்டு தனது நண்பர்களைக் காப்பாற்றுவதற்காகத் தன்னைத் தானே சுட்டுக் கொன்றார். அப்பொழுது அவரது சட்டைப்பையில் கடிதம் ஒன்று இருந்தது.

அதில் இந்தியா சுய இராச்சியம் ஆக வேண்டும் என்றும் ஆங்கிலேயர்களைக் கடுமையான வார்த்தைகளால் திட்டி எழுதியிருந்தார். தனது உயிரை, உடலை, உணர்வுகளை அனைத்தையும் பாரதத்திற்காக விட்ட மாவீரன் வாஞ்சிநாதன் ஆவார்.

வ.வு. சிதம்பரனார்

1872 இல் திருநெல்வேலியில் ஓட்டப்பிடாரத்தில் பிறந்தார். குதிரை ஏற்றம், நீச்சல், சிலம்பம், கத்திச்சண்டை, குத்துச்சண்டை, வில், துப்பாக்கி சுடுதல், போன்ற எல்லாத் துறைகளிலும் ஆர்வமும் திறமையும் பெற்ற இளைஞர் ஆவார். கல்வியிற் சிறந்து விளங்கிய சிதம்பரம் மாபெரும் வழக்கறிஞர் ஆனார்.

முதன்முதலில் தமிழ் நாட்டிற்காக கப்பலை ஓட்டிய பெருமைக்கு உரியவர். கப்பல் நிறுவனத்தில் இருந்து விலக்குவதற்கு ஆங்கிலேயர்கள் பல திட்டங்கள் போட்டிருந்தாலும் அது எதுவும் பலனளிக்கவில்லை.

இறுதியில் சிதம்பரத்தை சிறையில் அடைத்து ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. சிறையில் செக்கு இழுக்க வைத்து சித்திரவதை செய்தனர். இவ்வாறு நாட்டிற்காக போராடிய இவர் 1936 நவம்பர் அமரர் ஆனார். இவர் செக்கிழுத்தசெம்மல் என்றும் அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுப்ரமணிய சிவா

1844ல் வத்தலகுண்டு எனும் இடத்தில் பிறந்தார். படிப்பு முடிந்த பிறகு குடும்ப சுமை காரணமாக சிவகாசியில் போலீஸ் இலாக்காவில் குமஸ்தா பிரிவில் சேர்ந்தார்.  சேர்ந்த மறுநாளில் வேலையை விட்டு நின்றார். இவர் பார்த்த முதலும் இறுதியுமான வேலை இதுவேயாகும்.

1906ல் சந்திரகாந்தா என்பவரின் சொற்பொழிவைக் கேட்ட இவரிடம் தேசபக்தி அனலாக கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. பின்னர் இவர் ஊர் ஊராகச் சென்று ஆங்கிலேயருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்.

சிவாவின் பேச்சைக் கேட்ட பல இளைஞர்கள் தேசத்திற்காக தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர். சிவா, வ.வு சிதம்பரனார் மற்றும் மகாகவி பாரதியார் ஆகியோரின் நண்பர் ஆவார். தமிழக போராட்ட வரலாற்றில் சிறப்பு வாய்ந்த இவர்கள் மூவரும் தமிழக தேசியத்தின் மும்மூர்த்திகள்  என்று அழைக்கப்படுகின்றனர்.

ஆறு வருடம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலையின் பின்னர் சென்னையில் பிரபஞ்ச மித்திரன், ஞானபானு, இந்திய தேசாந்திரி போன்ற பத்திரிகைகளைத் தொடங்கினார். அதுமட்டுமல்லாமல் ஊர் ஊராகச் சென்று மக்களுக்கு தேசபக்தியையும் ஊட்டினார்.

பாரத தேசத்தை கடவுளாக எண்ணிய சிவா பாரத மாதாவுக்கு கோயில் கட்ட எண்ணி அடிக்கல் நாட்டினார். ஆனால் தொழுநோய் காரணமாகவும் சிறையில் அனுபவித்த சித்திரவதைகள் காரணமாகவும் தனது 41வது வயதில் இறைபதம் அடைந்தார்.

Read more: கொடிகாத்த குமரன் பற்றிய கட்டுரை