தமிழின் முதல் கள ஆய்வு நூல் எது? | பெரியபுராணம் |
கல் தோன்றி மண் தோன்றும் முன்னே தோன்றிய பெருமைக்குரிய மொழி நம் தாய்மொழியான தமிழ்மொழி ஆகும். அத்தகைய தமிழ்மொழியில் பல்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்களால் பல்வேறு நூல்களை எழுதப்பட்டுள்ளன.
அந்த வகையில் தமிழ் மொழியின் முதல் கள ஆய்வு நூல் என சிறப்பிக்கப்படும் பெரியபுராணம் பற்றி பார்ப்போம்.
Table of Contents
பெரியபுராணத்தை இயற்றியவர்
பெரியபுராணத்தை இயற்றியவர் சேக்கிழார் ஆவார். இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குன்றத்தூர் எனும் ஊரில் பிறந்தவர். சேக்கிழார் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று தகவல்களில் இருந்து அறியப்படுகின்றது.
சேக்கிழாரின் இயற்பெயர் அருண்மொழித்தேவர். இவர் அநபாய சோழ மன்னன் என அழைக்கப்படும் 2ஆம் குலோத்துங்க சோழ மன்னனின் அவைக்களத்தில் முதலமைச்சராகப் பணி புரிந்தார்.
சைவசமயத்தின் 63 நாயன்மார்களினதும் வரலாற்றை ஒரே நூலில் பெரியபுராணம் என தொகுத்து எழுதியுள்ளார்.
சேக்கிழார் எழுதும் போது இந்த நூலுக்கு “திருத்தொண்டர் புராணம்” என்றே பெயர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.
சேக்கிழாரின் வேறு பெயர்கள்
- அருண்மொழித்தேவர்
- மாதேவடிகள்
- உத்தம சோழபல்லவன்
- தெய்வ சேக்கிழார்
- தொண்டர் சீர் பரவுவார்
பெரியபுராண நூல் விபரம்
சைவ சமயத்தில் உள்ள 63 நாயன்மார்களினதும் 9 தொகை அடியார்களினதுமாக மொத்தமாக 72 சிவனடியார்களது வரலாற்றை விளக்கி நிற்பது பெரிய புராணம் ஆகும்.
பெரிய புராணம் 2 காண்டங்களையும் 13 சருக்கங்களையும் உள்ளடக்கி உள்ளது. இங்கு முதல் காண்டத்தில் 5 சருக்கங்களும், இரண்டாவது காண்டத்தில் 8 சருக்கங்களும் காணப்படுகின்றன.
முதல் சருக்கத்தில் திருமலைச் சருக்கமாகவும் கடைசி சருக்கம் வெள்ளை யானைச் சருக்கமாகவும் காணப்படுகின்றது.
பெரியபுராணத்தின் சிறப்புகள்
திருமுறைகளின் தொகுப்பில் பன்னிரண்டாவது திருமுறை பெரியபுராணம் ஆகும்.
தில்லையில் இருக்கும் இறைவனான நடராஜன் “உலகெல்லாம்” என்று அடியெடுத்து கொடுக்க சேக்கிழார் “உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்” எனப் பெரியபுராணத்தை தொடங்கினார். நூலின் முதல், இடை, கடை என்ற மூவிடத்திலும் உலகெல்லாம் என்ற சொல் வரும்.
தமிழ் மொழியின் முதல் கள ஆய்வு நூல் பெரியபுராணம் ஆகும். அதுமட்டுமல்லாமல் தமிழின் இரண்டாவது தேசிய காப்பியம் என்றும் அழைக்கப்படுகின்றது.
சுந்தரமூர்த்தி நாயனார் அறுபது சிவனடியார்கள் பற்றி எழுதிய திருத்தொண்டர் தொகை என்ற நூலை முதல் நூலாகவும் நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி என்ற நூலினை வழி நூலாகவும் கொண்டு சேக்கிழார் பெரிய புராணத்தை ஒரு சார்பு நூலாக எழுதினார்.
அடியவர்களைப் பன்மையில் கூறிய முதல் நூல் இதுவே ஆகும். அதுமட்டுமல்லாமல் இந்த நூலில் மூன்று பெண் அடியவர்களது வரலாறும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பெரிய புராணத்தின் காப்பியத் தலைவன் சுந்தரர் ஆவார்.
வடமொழியில் சிவபக்த விலாசம், உபமன்யு விலாசம் என்ற பெயர்களில் பெரியபுராணம் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் காப்பியமா? காவியமா? என்ற வாதத்திற்கும் உள்ளாகிய நூல் இதுவாகும்.
சேக்கிழாருக்குப் புராணம் பாடியவர் உமாபதி சிவாச்சாரியார் ஆவார். அத்தோடு குலோத்துங்க சோழனை சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாற்றிய நூல் பெரிய புராணம் ஆகும்.
Read more: பூனைக்காலி விதை பொடி பயன்கள்