சைவம் என்றால் என்ன

saivam endral enna

சைவம் என்றால் என்ன

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோற்றம் பெற்ற இந்து மதமானது எப்போது, யாரால், எங்கு தோற்றுவிக்கப்பட்டது என்பதை யாரும் அறிந்திராத மிகவும் தொன்மையான மதமாக காணப்படுகிறது.

உலகில் காணப்படும் மிகவும் தொன்மையான மதமாகவும் இந்து மதம் காணப்படுகிறது.

இந்து மதமானது தன்னுள் சைவம், வைணவம், கௌமாரம், காணாபத்யம், சௌரவம், சாக்தம் எனும் ஆறு பிரிவுகளை உள்ளடக்கி உள்ளது.

சைவம் என்றால் என்ன

சைவ சமயம் – சிவசமயம், சிவநெறி என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. சிவம் என்ற சொல் பல நூற்றாண்டு திரிபு சொல்லாக மாறி சைவம் என்று மாறியதாகக் கூறப்படுகிறது.

ஆறுவகை சமயங்களில் ஒன்றான சைவம் என்பது சிவபெருமானை முழுமுதற் கடவுளாக கொண்ட சமயமாகும். அதாவது சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் சமயம் சைவ சமயம் ஆகும்.

சைவ சமயத்தின் பிரிவுகள்

  • வீரசைவம்
  • காஷ்மீர் சமயம்
  • தென்னாட்டு சைவம்

சைவம் தோற்றமும் வளர்ச்சியும்

தென்னகத்தின் மலைத்தெய்வ வழிபாடே சிவவழிபாடாக வளர்ந்து மக்கள் குடிப்பெயர்ச்சியால் இமயம் வரை நகர்ந்திருக்கின்றது என்று சொல்லப்படுகின்றது.

சிவனை உருவகிப்பதில் சாம்பல் பூசுதல், புலித்தோலாடை தரித்தல், மானையும் மழுவையும் கையில் வைத்திருத்தல், பன்றிக்கொம்பு, எலும்புகளை அணிதல் போன்ற பழங்குடி அம்சங்கள் முக்கிய பங்கு வகிப்பதால் பல இனக்குழுக்களின் கலப்பின் விளைவாகப் பிறந்த பெருந்தெய்வமே சிவன் எனலாம்.

நாகர்கள் பழைமை வாய்ந்த தனி இனம் என்று வாதிடுவோர் சிவனின் ஆபரணங்களாக நாகங்கள் காணப்படுவதைக் கொண்டு சிவன் நாகரின் தெய்வம் என்பர்.

சிவலிங்க வழிபாட்டுக்கு அடிப்படையாக நடுகல் வழிபாடே அமைந்திருக்கலாம் என்ற கருதுகோளும் உண்டு.

இத்தகைய சான்றாவணங்களால் சிவ வழிபாடு மிகத்தொன்மையானது என்றும் மானுடர்களின் மிகப்பழைய தெய்வங்களில் ஒருவன் ஈசன் என்றும் அறிய முடிகின்றது.

சிந்து வெளியில் சைவம்

5000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் இந்து மதமானது சிறப்பு பெற்று விளங்கியது என்பதற்கு சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்களில் இருந்து அறிய முடிகிறது. குறிப்பாக சிவன், சக்தி, லிங்க உருவங்கள் வழிபாட்டு தெய்வங்களாக காணப்படுகிறது.

ஹரப்பாவில் மட்டும் 200க்கும் அதிகமான சிவலிங்கங்கள் காணப்படுகிறது. பெரிய சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

சிறிய லிங்கக்கற்கள் துளைகளிடப்பட்டு தாயத்துக்களாக அணியப்பட்டது. இதனை வீரசைவர்களே அணிந்தனர். அதனாலேயே இவர்களை லிங்காயுதர் என அழைத்தனர்.

அத்துடன் இடது காலை தூக்கி நடனமாடும் நடராஜர் உருவமும் காணப்படுகிறது. ஒரு உருவை சூழ எருது, புலி, காண்டாமிருகம், யானை உருவமும் காணப்பட்டன. இதனை பசுபதி வழிபாடு எனவும் அழைப்பர். இன்று ஆன்மாக்களின் தலைவன் என்பதை குறிக்கின்றது.

வேதகால சைவம்

இருக்கு வேதத்தில் உருத்திரன் மூன்று பாடல்களால் பாடப்படுகின்றான். இவனது உதடுகள் அழகானவை, தலைமுடியை சடமுடியாக கட்டியுள்ளான், சூரியனுக்கு நிகராக ஒளி வீசியவன், இவன் அணியும் ஆபரணம் பொன்னாளானவை, இவனது ஆயுதம் இடி ஆகும்.

இவன் மின்னலை அம்பாக எய்துவான். இவன் வைத்தியர்களுள் தலைசிறந்த வைத்தியனாக கூறப்படுகின்றான். இவனது தொழிலாக அழித்தல் தொழிலை செய்கின்றான்.

யசூர் வேதத்தில் பல நாமம் கூறும் வழிபாடு காணப்பட்டது. அதாவது 100 நாமம் பற்றிய கருத்து சதருத்திரியம் என நூலில் காணப்படுகிறது.

சாமவேதத்தில், இறைவன் இசையில் சிறந்தவன் என்பதால் “சாமகான பிரியன்” என அழைக்கப்பட்டார்.

உபநிடதங்கள் சிவ வழிபாடு

சுவேதாஸ்வர உபநிடதம் சிவனை முழுமுதற் கடவுளாக கூறுகின்றது. சுவேதாஸ்வர உபநிடதத்தில் சிவனுக்கு நிகராக ஒரு தெய்வமும் இல்லை.

சிவனே உலகின் முதற்கண் எனவும், அவரே உலகின் எல்லாப் பொருட்களையும் படைக்கின்றார் மற்றும் காக்கின்றார் எனவும், உலகத்தின் முடிவில் ஒருத்துகின்றான் எனவும் கூறப்படுகிறது.

இவனே மிக உயர்ந்த கடவுள் இதனால் பரமேஸ்வரன் என உபநிடதங்களிலே அழைக்கப்படுகின்றான்.

இதிகாச புராணங்களில் சிவ வழிபாடு

குப்தர் காலத்தின் பிற்பகுதிகள் தொடங்கிய புராணமரபு பல்கிப் பெருகி வடநாட்டு பக்தி இயக்கத்திற்கு வழி வகுத்த ஒன்றாகும். சைவம், வைணவம் என்பன பெரும் மதங்களாக வளர்ச்சி அடைந்தது இக்காலகட்டம் தான்.

இந்து மரபில் மகா புராணங்கள் என புகழ் பெற்ற பதினெட்டிலும், பத்து புராணங்கள் சிவ புராணங்கள் ஆகும்.

ஏழாம் நூற்றாண்டு அளவில் வாரணாசி, காந்தாரம், கராச்சி முதலான இருபது இடங்களில் தான் கண்ட மிகப்பெரிய சிவாலயங்கள் பற்றி சீன பயணியான யுவான் ஷாங் கூறியுள்ளார்.

இதை அண்மித்த காலப்பகுதியில் தான் சைவத்தின் சிறப்பு நூல்களான சிவாகமங்கள் எழுந்தன.

தென்னகப்பக்தி இயக்கம்

சமணமும் பௌத்தமும் செழித்திருந்த தமிழகத்தில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் முதலானோர் தலைமையில் ஏழாம் நூற்றாண்டில் ஆரம்பித்த பக்தி இயக்கம் சோழப்பேரரசு காலம் வரை நின்று நீடித்து தென்னகத்தில் சைவ எழுச்சிக்கு பெரும் உதவி புரிந்தது.

அதேவேளை, 12ஆம் நூற்றாண்டில் பசவண்ணர் தலைமையில் கன்னடத்தில் எழுந்த வீரசைவ இலிங்காயதப் பிரிவு இன்னொரு முக்கியமான சைவ எழுச்சி இயக்கமாகும்.

தமிழ் சைவ எழுச்சி, 14ஆம் நூற்றாண்டில் சைவ சித்தாந்தம் எனும் தத்துவப் பிரிவு தோன்ற வழிவகுத்ததுடன், ஐரோப்பியர் காலத்தில் தென்னகத்தில் தோன்றிய தனித்தமிழ் இயக்கம் வரை தமிழ் இலக்கிய மற்றும் சமய இலக்கியங்களில் பெரும்பங்காற்றிய ஒன்றாகும்.

Read more: புராணங்கள் என்றால் என்ன

இதிகாசம் என்றால் என்ன