சூழல் என்றால் என்ன

sulal enral enna

அறிமுகம்

இறைவனால் படைக்கப்பட்ட அரிய நுட்பமான வியப்பூட்டும் வினைத்திறன்களில் சூழலும் ஒன்றாகும். மனிதன் வாழ்கின்ற வாழ்க்கை சூழலைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.

நல்ல சூழல் ஒரு மனிதனை சமூகத்தில் ஆரோக்கியமான மனிதனாகவும், தீய மாசடைந்த சூழல் மனிதனை நோயாளியாகவும், மன அழுத்தம் நிறைந்தவராகவும் மாற்றுகிறது.

மனிதன் தான் வாழும் சூழலை பாதுகாத்து வாழுகின்றபோது அந்த சூழலும் அழகாக மாறுவதுடன், அவர்களின் வாழ்க்கையும் அழகானதாகவும் ஆரோக்கியமானதாகவும் மாறுகிறது.

சூழல் என்றால் என்ன

மனிதனை சுற்றியுள்ள இயற்கையின் மொத்த அம்சங்கள் “சூழல்” எனப்படும். இச்சூழலானது காற்று, வெப்பம், நீர், ஆகாயம், நிலம் எனும் பஞ்சபூதங்களையும் உயிருள்ள உயிரற்ற பல நுண்ணங்கிகள், தாவரங்கள், விலங்குகள், பறவைகள் என பலவற்றை உள்ளடக்கியதாக காணப்படுகிறது.

அதாவது சூழல் என்பது தாவரங்கள், விலங்குகள் அடங்கிய அனைத்து உயிரினங்களுடன், அவற்றுடன் தொடர்பு கொண்டிருக்கும் அனைத்து இயற்பியல் கூறுகளையும் அடக்கியதாகும்.

சூழல் மாசடைதல் என்றால் என்ன

சூழலானது பயன்படுத்த தகாத நிலையிலும், விருப்பத்தகாத நிலையிலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மனிதச் செயற்பாடுகளின் மூலமாக அசுத்தமாக மாற்றமடைந்து நோய்க்கிருமிகளை பரப்பும் வகையில் அமைந்து காணப்படுவது சூழல் மாசடைதல் எனப்படும்.

அதாவது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும்.

நீரை மாசடைய செய்யும் செயற்பாடுகள்

  • தொழிற்சாலைக் கழிவுகள் நீருடன் கலத்தல்.
  • விவசாய இரசாயனப் பதார்த்தங்கள் நீர் நிலைகளுடன் கலத்தல்.
  • பொலித்தின் மற்றும் பிளாஸ்ரிக் போன்றவற்றை நீர் நிலைகளில் இடுதல்.
  • தொழிற்சாலைகளில் வெளியேறும் இரசாயனப்பதார்தங்கள் மற்றும் கழிவுநீர் என்பன நீர் நிலைகளில் விடுவிக்கப்படல்.
  • நகர்ப்புற குப்பை கூழங்கள் ,கழிவுநீர் என்பவற்றை ஆறுகள், கால்வாய்கள் என்பவற்றுள் விடுவித்தல்.
  • நீர் நிலைகளில் பல்வேறு பொருட்களை கழுவுதலும், குளித்தலும் கால்நடைகளை நீர் நிலைகளில் குளிப்பாட்டுதல்.
  • மலசலகூட கழிவுகள் நீருடன் கலத்தல்.

நிலம் மாசடைய செய்யும் செயற்பாடுகள்

  • பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளை நிலத்தில் புதைத்தல்.
  • காடழித்தல்.
  • உக்காத பொருட்களை நிலத்தினுள் புதைத்தல் (கண்ணாடி, இரும்பு, நெகிழி, பீங்கான் ஓடுகள்).
  • தொழிற்சாலை எண்ணெய்க் கழிவுகளை நிலத்தினுள் செலுத்துதல்.
  • அளவிற்கு அதிகமான செயற்கை இரசாயன உரங்களையும் கிருமிநாசினிகளையும் விவசாய நடவடிக்கைகளின் போது பயன்படுத்துதல்.
  • பல அடுக்கு மாடிக்கட்டடங்களை கட்டுதல்.
  • ஆற்றுக் கழிமுகங்களில் மண் அகழ்தல்.
  • அதிவேக நெடுஞ்சாலைகளை அமைத்தல்.

காற்றை மாசடைய செய்யும் செயற்பாடுகள்

  • தொழிற்சாலை புகைகள் வளியில் கலத்தல்.
  • நச்சுவாயுக்கள் வளியினுள் கலத்தல்.
  • கிருமிநாசினிகள் விசிறும் போது அவை வளியில் கலத்தல்.
  • வெடிபொருள்களின் நச்சுவாயுக்கள் வளியில் கலத்தல்.
  • பழைய வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை வளிமண்டலத்தில் கலத்தல்.
  • யுத்தங்கள் நடைபெறுகின்ற போது நவீன ஆயுதங்களின் பயன்பாட்டால் வெளிவரும் நச்சு வாயு.
  • நச்சுப்புகைகள் வளிமண்டலத்தில் கலத்தல்.
  • எரிமலை வெடிப்பினால் ஏற்படும் புகை, தூசு.

ஒலியை மாசடையச் செய்யும் செயற்பாடுகள்

  • பட்டாசு அல்லது வெடிபொருட்கள் எரியும் போது சத்தம் வெளிவிடப்படல்.
  • தொழிற்சாலை இயந்திரங்களால் ஏற்படும் பாரிய சத்தம்.
  • யுத்த நிலமைகளின் போது ஏற்படும் பாரிய சத்தம்.
  • பழைய வாகனங்களைச் செலுத்துவதால் ஏற்படும் அதிகளவான சத்தம்.
  • பாறைக்கல்லுடைக்கும் போது ஏற்படும் பாரியசத்தம்.
  • வானைக் கிளித்துச் செல்லும் போர் விமானங்களால் ஏற்படும் பாரியசத்தம்.

சூழல் மாசடைவதால் ஏற்படும் முக்கியமான பிரச்சினைகள்

  • பச்சை வீட்டு விளைவும், பூகோள வெப்பமாதலும்
  • ஓசோன் படைத் தேய்வு.
  • காடழிப்பும், உயிரினப் பல்வகைமைகளின் அழிவும்.
  • பாலைவனமாதல்
  • அமில மழை
  • சூழல் வெப்பநிலையில் வேறுபாடுகள் ஏற்படல்.
  • தொற்றுநோய்கள் பரவுதல்.

சூழல் மாசடைதலை தடுப்பதற்கான செயற்பாடுகள்

  • மரங்களை நாட்டுதல்.
  • விவசாய செயற்பாடுகளுக்கு இயற்கைப் பசளைகளை பயன்படுத்துதல்.
  • குப்பைகூழங்கள் எரிப்பதை தவிர்த்து மண்ணிணுள் புதைத்தல்.
  • உக்காத பொருட்களை பொருத்தமான முறையில் அகற்றுதல். (மீள் சுழற்சிக்கு உட்படுத்தல்)
  • பொலித்தீன் பயன்பாட்டினை தடை செய்தல்.
  • மக்கள் மத்தியில் சூழலின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தல்.
  • பாடசாலை, கல்லூரி போன்றவற்றில் பயிற்சி பட்டறைகள் நடாத்துதல்.
  • சூழல் பாதுகாப்பு அமைப்புகளை பாடசாலை, கிராமங்கள் தோறும் நிறுவுதல்.

சூழல் பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தங்கள்

  • கியோட்டோ நெறிமுறை.
  • ஓசோன் படலம் பாதுகாப்பிற்கான வியன்னா மாநாடு
  • ரியோ பிரகடனம்

இன்றைக்கு 400 மில்லியன் வருடங்களுக்கு முன் உருவாகியதாக சொல்லப்படுகின்ற இந்த பூமி மாத்திரமே உயிரினங்கள் வாழ்வதற்கு தகுந்த சூழலை கொண்டு காணப்படுகிறது. இதனை சரிவர உபயோகித்து பாதுகாத்து நாளைய சந்ததியினருக்கு ஒப்படைப்பது மனிதராக பிறந்த எம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.

You May Also Like :
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு
உலக சுற்றுச்சூழல் தினம் கட்டுரை