சமூக நல்லிணக்கம் என்றால் என்ன

samuga nallinakkam enral enna in tamil

சமூக நல்லிணக்கம் என்றால் என்ன

சமூகத்தில் மனிதன் என்பவன் தனித்து வாழவே முடியாது. அவன் சமூகத்துடன் இணைந்துதான் வாழ வேண்டி இருக்கிறது. இணைந்து வாழும்பொழுது அங்கு சமூகம் என்பது உருவாகிறது.

அந்தச் சமூகம் என்பது உலகளாவும் பொழுது உலக சமூகமாக விரிவடைகிறது. இந்த சமூகங்கள் விரிசல் இன்றிய ஒற்றுமையாக வாழ்வதற்கு சமூக நல்லிணக்கம் என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

இன்றைய காலப்பகுதியில் சமூக நல்லிணக்கத்துக்காக பல அமைப்புகள் உருவான பொழுதிலும் அவற்றுக்கிடையே கூட நல்லிணக்கத்தை எட்டிவிட முடியாத ஒரு பரிதாப நிலையினையே பார்க்க முடிகிறது.

இவ்வேளையில் “சமூக நல்லிணக்கம்” பற்றி சிந்திப்பதும், அதற்காக இயன்றளவில் முயற்சிகள் எடுப்பதும் அனைவரதும் மிகவும் முக்கியமான தார்மீகக் கடமையே ஆகும்.

சமூக நல்லிணக்கம் என்பதை நாம் தேடி ஓட வேண்டியதில்லை. அதனை யாருமே கொண்டுவந்து தரப்போவதும் இல்லை. மனிதனால் உருவாக்கப்பட்ட சமூகத்தில் மனிதனாலேயே நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

சமூக நல்லிணக்கம் என்றால் என்ன

சமூக நல்லிணக்கம் என்பது ஒரு நாட்டுக்குள் வாழும் பல பண்பாட்டுச் சமூகங்களிடையே ஒற்றுமை, புரிந்துணர்வு, சகவாழ்வு ஆகியவற்றை நிலைநிறுத்தவதற்காகப் பேசப்பட்டு வரும் எண்ணக்கரு சார்ந்த ஒரு விடயமாகும்.

திருக்குறள் கூறும் சமூக நல்லிணக்கம்

தமிழிலே தோன்றிய பல நூல்கள் சமூக நல்லிணக்கத்தைப் பற்றிய கருத்துக்களைப் பலவாறு எடுத்துக்காட்டி இருக்கின்றன.

சமூக நல்லிணக்கம் சம்பந்தமான கருத்துக்களை கூறுகின்ற நூல்களில் திருக்குறள் முக்கியத்துவம் மிக்கது. திருக்குறளானது தான் தோன்றிய காலம் முதல் இன்றளவும் தனித்துவம் மிக்கதாகவே விளங்குகிறது.

அன்புடமை, இனியவை கூறல், நடுவு நிலைமை, அடக்கமுடைமை, பொறையுடமை, அழுக்காறாமை, வெஃகாமை, வெகுளாமை, வாய்மை, அறிவுடமை, கூடாவொழுக்கம், பண்புடமை, சான்றாண்மை என்றெல்லாம் வள்ளுவம் வகுத்து அதன் வழி நடந்தால் சமூகத்தில் நல்லிணக்கம் பிறக்கும் என்று சொல்லி நிற்கிறது.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனும் குறல் சமூக நல்லிணக்கத்தை தனிமனிதனிடமிருந்தே ஆரம்பிக்கிறது எனலாம்.

பிறப்பில் உயர்வு, தாழ்வு இல்லை என்னும் எண்ணம் தனிமனிதனிடம் வேரூன்றி விடுமானால் அந்த எண்ணம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்று வள்ளுவம் நம்பியது.

இந்த எண்ணம் சமூகத்தில் நிலைபெற்று விடுமானால் இன்று உலகில் இனம் பற்றி எண்ணி மோதுகின்ற நிலை அற்று நல்லதோர் சமூக நல்லிணக்கம் பிறக்கும்.

சமூக நல்லிணக்கத்தின் முக்கியத்துவம்

சமூக நல்லிணக்கமானது அண்மைக் காலமாக உலக நாடுகளிடையே வாழும் பல்லின சமூகப் பண்பாட்டு மக்களின் ஒற்றுமைக்கு அவசியமான ஒன்றாக உள்ளது.

நாட்டு மக்கள் இன, மொழி, மத, சாதி வேறுபாடு இன்றி ஒரு நாட்டு மக்களாகவும், ஒன்றுபட்ட சமூகமாகவும் வாழ சமூக நல்லிணக்கமானது மிகவும் அவசியமானதாகும்.

பல்லின மக்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் அடிப்படை உரிமை, அபிவிருத்தி உரிமை, ஆட்சி உரிமை, அரசியல் உரிமை போன்ற நான்கு தூண்களையும் கட்டியெழுப்புவதற்கு சமூக நல்லிணக்கம் இன்றியமையாததாக உள்ளது.

சகவாழ்வு வாழ்வதற்கும், நீடித்த சமாதானத்துக்கும் சமூக நல்லிணக்கம் அத்தியாவசியமாகும்.

ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தேசிய உணர்வோடு அனைவரும் ஒன்றிணைந்து வாழ முடியும் என்ற சிந்தனைக்கு இடமளிக்க சமூக நல்லிணக்கம் முக்கிமான ஒன்றாக விளங்குகின்றது.

Read more: சமூக நல்லிணக்கம் கட்டுரை

சமய நல்லிணக்கம் கட்டுரை