இன்று சமத்துவம் என்பது உலக அமைதியில் பெரும் பங்கு வகிக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். சமத்துவம் காக்கப்படும் போதே அனைவரும் மகத்துவமாக வாழ முடியும்.
Table of Contents
சமத்துவமே மகத்துவம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- சமத்துவம் – பொருள் விளக்கம்
- சமத்துவத்தின் முக்கியத்துவம்
- திருக்குறள் கண்ட சமத்துவம்
- சமத்துவத்திற்கான சவால்கள்
- முடிவுரை
முன்னுரை
சமத்துவமானது தற்போது உலகெங்கிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பெரும் லட்சியவாதமாக உலக அளவில் சட்டங்களிலும், அரசியல் அமைப்புகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
எனினும் சமத்துவமின்மை என்பது உலக சமுதாயத்தில் தற்போதும் உள்ளது என்பதை வெளிப்படையான உண்மையாகும்.
இயற்கை அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பாற்பட்டு சமூக ரீதியான பிறப்பு, செல்வ வளம் அறிவு, மதம் போன்றவைகளில் சமத்துவமின்மை உள்ளது.
சமத்துவம் – பொருள் விளக்கம்
“இக்குவாலிஸ்” (Aequalis) என்ற வார்த்தையில் இருந்து சமத்துவம் என்ற சொல் உருவானது. இதன் பொருள் “நியாயமான” என்பதாகும்.
ஒரே மாதிரியான உரிமைகள், சலுகைகள் நிலைகள், வாய்ப்புகள் மற்றும், நடத்தப்படும் முறைகள் போன்றவை சமூகத்தில் அனைத்து மக்களுக்கும் சமமான உரிமையுடன் கிடைத்தல் ஆகியவையே சமத்துவமாகும்.
பேராசிரியர் லஸ்கியின் கூற்றுப்படி சமத்துவம் என்பது “சமமாக நடத்துவது மட்டுமல்ல வெகுமதி அளிப்பதிலும் சமத்துவம் இருப்பதாகும். முதலாவதாக சமூக சிறப்புரிமை இல்லாததும், இரண்டாவதாக போதுமான வாய்ப்புகள் அனைவருக்கும் வழங்கப்படுவதும் ஆகும்” என்கின்றார்.
சமத்துவத்தின் முக்கியத்துவம்
மனிதர்களை நிறம், பாலினம், இனம், மொழி, மதம், தேசம் போன்றவைகளில் பாகுபாடு காட்டாமல் சமமான மதிப்புடன் நடத்துவதற்கு சமத்துவம் முக்கியமானதாகும்.
சமூக அமைப்புகளையும், அரசுகளையும் எதிர்த்து போராட சமத்துவ முழக்கம் மிகவும் உதவிகரமாக இருக்கும். காரணம் நவீன உலகில் பணி, செல்வ வளம் நிலை மற்றும், சலுகை அடிப்படையில் பிரிவினைகள் உள்ளன. சமத்துவம் இல்லாமல் சுதந்திரத்திற்கு எந்த ஒரு விழுமியமும் கிடையாது.
திருக்குறள் கண்ட சமத்துவம்
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் சமத்துவம் பற்றி திருக்குறள் மூலம் சமுதாயத்திற்கு வெளிப்படுத்தியுள்ளார். அன்றே சமத்துவமே மகத்துவம் என்பதனை அறிந்ததினால் தான் திருவள்ளுவர் சமத்துவம் பற்றி உலகிற்கு உரைத்துள்ளார்.
“பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்
உருவு கண்டு எள்ளாமை வேண்டும்”
அதாவது எல்லா உயிர்களுக்கும் பிறப்பு ஒன்றுதான் இதில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று இல்லை என்கின்றார் வள்ளுவர்.
சமத்துவத்திற்கான சவால்கள்
சமத்துவம் ஒரு அடிப்படை உரிமையாக இருக்கின்ற போதிலும் அதை அடைவது ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக உள்ளது. அமைப்பு ரீதியாக சார்புகள் ஆழமாக வேரூன்றிய எண்ணங்கள் மற்றும், சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் சமத்துவமின்மையை நிலைநிறுத்துகின்றன.
கல்வி மற்றும் சமத்துவம் குறித்து விழிப்புணர்வு இல்லாததால் இந்தத் தடைகள் மேலும் அதிகரிக்கின்றன.
முடிவுரை
அரசியல், சமூகம், பொருளாதாரம் என அனைத்திலும் சமத்துவம் பேணப்படும் போதுதான் இனமொழி ரீதியான வேறுபாடுகள் களையப்பட்டு சண்டைகள், சமூகப் புறள்வுகள், மோதல்கள், வன்முறைகள் என சமுதாயத்தை பாதிப்படையச் செய்யும் அனைத்தும் ஒழிக்கப்படும்.
சுதந்திரமானதும், சகோதரத்துவமும் நிறைந்த சமுதாயத்தையும், நாட்டையும் கட்டியெழுப்ப சமத்துவத்தாலேயே முடியும். மேலும், சமத்துவம் என்பது இன்றியமையாதது மட்டுமல்ல, ஒரு இணக்கமான சமூகத்திற்கு ஒரு முன்நிபந்தனையாகும்.
“சமத்துவமே மகத்துவம்” என்ற உயர்ந்த தத்துவத்தை மனிதர்கள் கடைப்பிடித்து வாழ வேண்டும். அவ்வாறு கடைப்பிடித்து வாழும் போது சமுதாயம் முன்னேறும், வேற்றுமை மறையும். மக்களிடையே ஒற்றுமை உயரும். இவை வீட்டையும், நாட்டையும் உயர்த்தும்.
Read More: எட்டுத்தொகை நூல்கள் கட்டுரை