இந்து மதத்தின் முதல் வணங்கப்படும் கடவுளாக விநாயகப் பெருமான் காணப்படுகிறார். விக்னங்களுக்கு அதிபதியாக காணப்படும் இவரை நாம் எந்த சுபகாரியங்களை தொடங்கும் முன்பு வழிபட்டு விட்டு தொடங்கினால் எந்த இடையூறும் ஏற்படாமல் காரியசித்தி ஏற்படும்.
Table of Contents
சதுர்த்தி என்றால் என்ன
சதுர்த்தி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக்காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறைகள் வரும் ஒரு நாளை குறிக்கும்.
இந்த நாட்கள் பொதுவாக “திதி” எனும் பெயரால் அழைக்கப்படுகின்றன. அம்மாவாசை நாளையும், பூரண நாளையும் அடுத்து வரும் நான்காவது திதி சதுர்த்தியாகும்.
சங்கடஹர சதுர்த்தி
“சங்கம்” என்றால் சேருதல் என்று பொருள்படும். கஷ்டம் மனிதனின் வாழ்வில் சேர்வதே சங்கஷ்டம் (சங்+கஷ்டம்) என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இச்சொல்லே மருவி “சங்கட” ஆக உருமாற்றம் பெற்று விட்டது.
சங்கடத்தை நீக்குவது சங்கடஹர சதுர்த்தி ஆகும். இது ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. இது இருள் சூழும் மாலை நேரத்தில் வரும்.
நமக்கு வருகின்ற துன்பங்கள், கஷ்டங்கள், தடைகள் என்பவற்றை தேய்த்து அழிவடைய செய்யும் சிறப்பு மிக்க விரதமாகும்.
மனிதர்கள் மட்டுமல்ல, தேவர்களும் தங்களுக்கு கஷ்டங்கள் வருகின்ற போது, அவர்கள் விநாயகரை குறிப்பிட்ட இந்நாளிலே வணங்கி நலம் பெற்றுள்ளனர்.
சதுர்த்தி புராணக்கதை
முன்பு ஒரு காலத்தில் பிரம்மதேவன், சிவபெருமானை தரிசிக்க திருக்கைலாயத்திற்கு சென்றார். அப்போது நாரதர் அங்கே ஒரு கனியுடன் வந்திருந்தார். அந்தக் கனியை யாருக்கு கொடுப்பது என்ற வாதம் அங்கே இடம்பெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது, அந்த தெய்வீக கனியை முருகனுக்கு கொடுக்கும் படி பிரம்மதேவன் சிவபெருமானிடம் கூறினார்.
சிவபெருமானும் அந்த பழத்தை முருகனிடம் கொடுத்தார். இதனைக் கண்ட மூத்தப்பிள்ளையான விநாயகருக்கு கோபம் வந்தது. அவர் பிரம்மதேவனை கோபத்துடன் பார்த்தார்.
விநாயகரின் அந்தக் கோபப்பார்வை பிரம்மதேவனை அஞ்சி நடுங்க செய்தது. தன் தவறை உணர்ந்த பிரம்மதேவன் விநாயகரை நோக்கி, “முழுமுதற் பெருமானே, என் தவறை பொறுத்தருள வேண்டும்.” என்று சொல்லி, இருகரம் குவித்து தலையை தாழ்த்தி உடம்பை குறுக்கிக் கொண்டு பணிந்து நின்றார்.
இக்காட்சியை அங்கு இருந்த சந்திரன் பார்த்தான். அத்துடன் முனிவர்கள், ரிஷிகள், பெரியோர்கள் கூடியுள்ள இடத்தில் பிரம்மதேவனை பார்த்து இகழ்ச்சியுடன் சிரித்தார் சந்திரபகவான். விநாயகரின் கோபப்பார்வை சந்திரனின் பக்கம் திரும்பியது.
அவர் சந்திரபகவானை பார்த்து “பெரியோர்கள் கூடியுள்ள இச்சபையில் அடக்கமின்றி சிரித்த சந்திரனே உன் பிரகாசம் உலகில் எங்கும் இல்லாமல் போகட்டும். உன் பிரகாசம் யார் கண்களுக்கும் புலப்படாமல் மறைந்தே போகட்டும்” என்று சபித்தார்.
அப்போது வானத்தில் சந்திரன் இல்லாமல் போனது. பௌர்ணமி பூஜைகள் அமாவாசை திதி எதுவுமே நடைபெறவில்லை.
நிலைமையின் விபரீதத்தை அறிந்த இந்திரனும், தேவர்களும் சந்திரனுக்கு சாபவிமோசனம் அளிக்குமாறு விநாயகரை வேண்டினர்.
கருணை கடலான விநாயகப்பெருமான் மனம் மகிழ்ந்து “வருடத்தில் ஆவணி மாத சதுர்த்தியன்று சந்திரனை பார்ப்பவர்கள் துன்பப்படுவார்கள்” என்று கூறி, சந்திரனுக்கு கொடுக்கப்பட்ட சாபத்தை குறைத்துவிட்டார்.
மேலும், “ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்த வரும் சதுர்த்தி அன்று விரதம் இருந்து தம்மை வழிபடுபவர்களின் சங்கடத்தை எல்லாம் தான் நிவர்த்தி செய்வேன். அவர்கள் புண்ணிய பேறுகளை அடைவார்கள்.” என்று திருவருள் புரிந்தார்.
இதைக் கேட்ட சந்திரபகவான் தன் தவறை உணர்ந்து விநாயகரை நோக்கி கடும் தவம் இருந்தார். அவருடைய தவத்திற்கு மனமகிழ்ந்த விநாயகர், அவருக்கு அருள் புரிந்து வளரும் வரத்தை கொடுத்தார்.
அவ்வாறு சந்திரன் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தி தினமாகும். ஆகவே சதுர்த்தி திதி விநாயகருக்கு உகந்தது. வளர்பிறை சதுர்த்தி திதியை பார்த்தால் தீமை விளையும்.
பகவான் கிருஷ்ணர், செவ்வாய், புருகண்டி முனிவர் ஆகியோர் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து விநாயகரின் அருளை பெற்றனர்.
முற்பிறவிகள் நாம் செய்த வினையின் பயனால் நமக்கு இப்பிறவிகள் சங்கடங்கள் வருகின்றன.
சங்கடஹரசதுர்த்தி அன்று விநாயகரை வழிபட்டால், அவர் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி அளவில்லாத நன்மைகளையும் தருவார்.
மகா சங்கடஹர சதுர்த்தி
ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி வருகின்றது. இவ்வாறு விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாக வரும் சதுர்த்தி “மகா சங்கடஹர சதுர்த்தி” எனப்படும். அன்று வழிபாடு செய்தால் வருடம் முழுவதும் சதுர்த்தி விரதம் இருந்ததற்கான பலன் கிடைக்கும்.
விரதம் இருக்கும் முறை
அதிகாலையிலே எழுந்து, குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலை தோரணம் கட்டவேண்டும். பின்னர் பூஜை அறையை சுத்தம் செய்து ஒரு மணையை அமைத்து அதன்மேல் கோலம் போட்டு, ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும்.
இலையின் நுனி வடக்கு பார்த்தது போல இருத்தல் வேண்டும். இந்த இலையின் மேல் பச்சரிசியை பரப்பி வைத்து நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.
பத்ர புஷ்பம் எனப்படுகின்ற பலவகை பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என 21 வகையான பூக்களையும், 21 வகையான பழங்களையும் அத்துடன் விநாயகருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டையும் அன்றைய தினம் படைத்தல் வேண்டும்.
விநாயகரை பூக்களால் அலங்காரம் செய்து, பிறகு விநாயகர் பாடல்கள் பாடலாம். விநாயகருக்கு கொழுக்கட்டை மட்டுமல்லாமல் எள்ளுருண்டை, பாயாசம், வடை என்றும் நைவேத்தியங்கள் படைக்கலாம்.
அத்துடன் பால், தேன், வெல்லம், முந்தரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாக கலந்து அதையும் நைவேத்தியமாக வைக்கலாம்.
விநாயகர் சதுர்த்தி அன்று மேற்கொள்ளும் விரதம், காலையில் இருந்து உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். விரதத்திற்கு பிறகு விநாயகரை கிணற்றில் அல்லது ஏதாவது ஏரியில் கரைப்பது வழக்கம்.
Read more: பிரதோஷம் என்றால் என்ன