மனிதன் மனிதனாய் வாழ வழிகாட்டுவது கல்வியே. “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்று ஒளவையும் கல்வியின் சிறப்பை விளக்குகின்றார்.
எனவே எக்காலத்திலும் நாம் கல்வி பயில்வதை மறத்தலாகாது. கல்வியே ஒரு மனிதனின் வாழ்வை நல்வழிப்படுத்தும், மேன்மை பெறச் செய்யும்.
நாம் வாழும் வழியை தெளிவுபடுத்தும் கல்வியை ஏட்டுக்கல்வி என்றும், தொழிற்கல்வி என்றும் இரு வகைப்படுத்தலாம்.
ஏட்டுக்கல்வி என்பது எழுதி வைக்கப்பட்டதைக் கற்பதாகும். ஒரு குறிப்பிட்ட வயது வரை தானாகச் சிந்தித்து அறிய ஏட்டுக்கல்வி தேவையே! ஏனெனில் அது நமக்கு முன்னால் வாழ்ந்த பலரின் வாழ்க்கையின் அனுபவ அறிவாகும். அதுவே நாம் ஏடுகளில் படிக்கின்றோம். படித்து அறிந்தும் கொள்கின்றோம்.
இதனால் நம் அறிவும் வளர்கின்றது. ஆனால் அதுமட்டும் அறிவல்ல. அறிவின் ஒரே வழியுமல்ல. ஏட்டுக் கல்வி அனுபவக் கல்வியாக மாற வேண்டும். அனுபவக் கல்வி நம்மையும் இவ் உலகையும் அடையாளம் காட்டும்.
Table of Contents
ஏட்டுக்கல்வி என்றால் என்ன
பாடப் புத்தகங்களிலும், நூல்களிலும் கற்கும் கல்வி எட்டு கல்வி எனப்படும். அதாவது செய்முறைப் பயிற்சி ஏதுமின்றி நூல்களின் வழியாகப் பெறும் அறிவினை ஏட்டுக்கல்வி என்று கூறலாம்.
சுருக்கமாக கூறின் ஏட்டுக்கல்வி என்பது எழுதி வைக்கப்பட்டதைக் கற்பதாகும்.
தொழிற்கல்வி
சுவாமி விவேகானந்தர் கல்வி குறித்து “எத்தகைய பயிற்சியின் மூலம் மனவுறுதியின் வேகமும் அதன் வெளிப்பாடும் தன்மையும் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு பயன்தரும் வகையில் அமைகின்றதோ அந்தப் பயிற்சித் தான் கல்வி” என்று கூறுகின்றார்.
நூல்களில் கற்றுக்கொள்ளும் கற்றல் அறிவானது சமுதாயத்தில் நமது வேலைகளுக்கு பெரிதும் உதவுவதில்லை. ஏட்டுக்கல்வி ஒரு திறவுகோலாக மட்டுமே உள்ளது.
சமூகத்திற்கு வந்த பின்பு, நிறைய மனிதர்களை நாம் பார்க்க வேண்டிய உள்ளது, பலதரப்பட்ட உறவுகளைச் சந்திக்க வேண்டியுள்ளது, உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு நாம் கற்றுக் கொள்கின்ற பாடமும், அனுபவமும், பட்டறிவும் மட்டுமே சமுதாயத்தில் நம்முடைய வாழ்க்கையை நிலை நிறுத்திக் கொள்ள பெரிதும் உதவுகின்றது.
ஏட்டு அறிவானது வாழ்நாளில் அடுத்து வரும் சூழ்நிலையை மட்டுமே முன்னிறுத்துகின்றது. அதனை மட்டுமே சுட்டிக் காட்டுகின்றதே தவிர அச்சூழ்நிலையை எவ்வாறு கையாள போகின்றோம்? அதனை எவ்வாறு சமாளிக்க போகின்றோம்? அதனை எவ்வாறு கடந்து விடப் போகின்றோம்? என்பதனைக் கற்றுத் தருவதில்லை. இதனை அனுபவங்களே கற்றுக் கொடுக்கின்றன.
வேலை வாய்ப்பைத் தேடுபவனும், வேலையில்லாத் திண்டாட்டத்தை நீக்க எண்ணுபவனும் வெறும் ஏட்டுப்படிப்பை மட்டும் பயிலக் கூடாது.
ஏனெனில், “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது” என்பதை உணர்ந்து வெறுங்கல்வியை விட வாழ்க்கைக் கல்வி அதாவது வாழ்க்கைக்குத் தேவையான தொழிற்கல்வியைப் பயிலுதல் வேண்டும். படிப்புடன் தேவைப்படுவது வாழ்க்கைக்குத் தேவையான அனுபவக்கல்வியே ஆகும்.
வளமுடன் வாழ, மகிழ்வுடன் வாழ கல்வியுடன் அனுபவக்கல்வியையும் கற்றுக்கொள்வோம்.
வாழ்க்கை எல்லா நாளும் தெளிந்த நீரோடை போல செல்வது இல்லை. தடைகளும், பிரச்சினைகளும் திடீரென நமது பாதையில் குறுக்கிடும். அவற்றை சாமர்த்தியமாகவும், நிதானமாகவும் எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கு கல்வி அறிவும், அனுபவ அறிவும் அவசியமானது.
இன்று ஏட்டு கல்வி முறையே வழக்கத்தில் உள்ளது. கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தக்கூடிய கல்வி முறை வந்தால் மட்டுமே, ஒரு நாடு அறிவியல் நாடாகத் திகழ முடியும். இதனை உணர்ந்து நமது கல்வி முறையில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.
Read more: கல்வியின் பயன்கள்