என் வாக்கு என் உரிமை கட்டுரை

En Vakku En Urimai Katturai

இந்த பதிவில் “என் வாக்கு என் உரிமை கட்டுரை” தொகுப்பை காணலாம்.

அதிகாரம் மிக வலிமையானது அதனை தீர்மானிக்கும் வாக்கினை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

வாக்கு உரிமை என்பது ஒவ்வொரு நாட்டு குடிமக்களுக்கும் அதிகாரத்தை தீர்மானிக்கும் வல்லமை கொண்டது.

என் வாக்கு என் உரிமை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. ஒரு வாக்கினுடைய பெறுமதி
  3. வாக்கு நாட்டினுடைய தலைவிதி
  4. வாக்குரிமை அடிப்படை உரிமை
  5. வாக்களிக்க தகுதியுடையோர்
  6. வாக்குரிமையும் ஜனநாயகமும்
  7. முடிவுரை

முன்னுரை

வாக்கு என்பது ஜனநாயக நாடுகளின் தலைவிதியை தீர்மானிக்கும் ஆகச்சிறந்த சக்தியாகும். நாட்டின் ஒவ்வொரு பிரஜைகளுக்கும் பல உரிமைகள் வரையறுக்கப்பட்ட போதிலும் வாக்குரிமை தனித்துவமானது.

நாட்டினை ஆளும் அதிகாரத்தை பொருத்தமானவர்களுக்கு வழங்க மக்களுக்கு கிடைக்கும் ஆகச்சிறந்த உரிமை இதுவாகும்.

இது யாருடைய அழுத்தங்களோ அதிகாரங்களோ அனைத்திற்கும் அப்பாற்பட்ட தனிமனித அதிகாரம் என்று கூறலாம்.

இக்கட்டுரையில் வாக்குரிமை அதனுடைய அவசியம் அதன் முக்கியத்துவம் ஆகிய விடயங்கள் நோக்கப்படுகின்றன.

ஒரு வாக்கினுடைய பெறுமதி

அரசாங்கம் என்பது மக்களின் பிரதிநிதிகள் குழுவாகும். மக்களுக்கு சேவையாற்றுவதே இவர்களது கடமையாகும் ஆனால் இங்கு நடப்பது என்ன? ஒவ்வொரு பிரஜைகளும் முறையற்ற ஆட்சியால் பாதிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றனர்.

இவர்களை இந்த உயர் பதவிகளுக்கு வாக்களித்து தெரிவு செய்தவர்களும் மக்கள் தான். என்பது கூடுதல் வேதனையாகும். இவற்றியை சரி செய்ய வேண்டுமானால் நாம் அளிக்கின்ற வாக்குகளை சரியான நபர்களுக்கு அளிக்க வேண்டும்.

மிகச்சிறந்த மக்கள் தமக்கு பொருத்தமான சிறந்த தலைவர்களை தெரிவு செய்வார்கள் ஆனால் தற்காலத்தில் காசுக்கும் சலுகைகளுக்கும் ஆசைப்பட்டு பெறுமதியான வாக்குகளை தகுதியற்றவர்களுக்கு அளிக்கின்ற நிலமை காணப்படுகின்றது.

ஓர் நாட்டினுடைய தலை விதி

நல்லாட்சி நிலவுகின்ற நாட்டில் யாவும் நல்லதாயே அமையும். உலகத்தையே ஆட்சி செய்த பிரித்தானியா இதற்கு மேல் வளர்ச்சியே தேவை இல்லை எனும் அளவிற்கு வளர்ந்து விட்டது.

ஆனால் எம்முடைய நாடுகளோ பின்தங்கி இருக்கின்றன. சிறந்த தலைவர்கள் மக்களுக்கு சிறந்த ஆட்சியை வழங்குவார்கள் அந்த நாடுகளின் வருங்காலம் சிறப்பாகவிருக்கும்.

ஆட்சி செய்பவர்கள் குடிமக்களது நிலையை புரிந்து கொண்டு ஆட்சி செய்ய வேண்டும் அப்போது தான் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியும்.

இதனை திருவள்ளுவர் கூறுகையில் “குடிதழீஇ கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு” என்கின்றார்.

மக்கள் தமது நாட்டிற்கும் தமக்கும் நன்மை பயக்க கூடிய ஆட்சியாளர்களை தெரிவு செய்ய தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தவறான ஆட்சியாளர்களிடம் நாடு சென்றால் நாடே சுடுகாடாக மாறிவிடும் இது பல நாடுகளிலும் உணரப்பட்ட நிலை தான்.

வாக்குரிமை அடிப்படை உரிமை

முன்னொரு காலத்தில் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் வரி செலுத்துபவர்களுக்கும் வசதி படைத்தவர்களுக்கும் ஆண்களுக்கும் மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கத்தை உடைத்து வயதுக்கு வந்த அனைவருக்குமே வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்ற புதிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தை டாக்டர் அம்பேத்கர் கடுமையாக போராடி நடைமுறைபடுத்தினார்.

இதன்படி ஒவ்வொரு இந்தியர்களுக்கும் வாக்குரிமை அடிப்படை உரிமையாக வழங்கப்பட்டுள்ளது. ஆதலால் தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா காணப்படுகிறது.

மக்கள் கைகளில் உள்ள ஆட்சியை தீர்மானிக்கும் வாக்கு எனும் அதிகாரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். அதனை தவறாக பயன்படுத்துதல் தேசத்துக்கு செய்யும் துரோகமாகும்.

வாக்களிக்க தகுதி உடையோர்

வாக்களிக்க தகுதி உடையவர்களாக 18 வயதுக்கு மேலான ஆண் பெண் இருபாலரும் கருதப்படுவர். வாக்களித்தல் ஒவ்வொரு பிரஜைகளினுடைய மிகமுக்கியமான ஜனநாயக கடமையாகும்.

ஒரு வாக்கு கூட வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் ஆகையால் அனைவரும் வாக்குரிமையை பயன்படுத்தி நாட்டுக்கு தமது கடமையை செய்ய வேண்டும்.

மற்றும் இலாபங்களை கருதாது சுயசிந்தனையோடு சரியானவர்களுக்கு வாக்களித்தல் மிக மிக அவசியமானதாகும். தவறானவர்களுக்கு வாக்களித்துவிட்டு பின் வருந்துவதில் எந்த பயனுமில்லை.

வாக்குரிமையும் ஜனநாயகமும்

மக்களால் மக்களுக்கான ஆட்சியே ஜனநாயம் எனப்படுகிறது. வாக்குரிமை வாயிலாகவே மக்கள் தமக்கான தலைவர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.

அதன் பின்பு அவர்கள் நீதி வேண்டியும் உரிமை வேண்டியும் சோற்றுக்காகவும் நீருக்காகவும் வீதியில் இறங்கி போராட வேண்டி இருக்கிறது. இது எத்தனை அநீதியான செயல் இந்த நிலையே எமது நாட்டின் நிலையாக உள்ளது.

சரியான தலைவர்களை தேர்வு செய்வதன் மூலம் லஞ்சம், ஊழல் போன்றன குறையும். நாடும் வளர்ச்சி அடையும். ஆகச்சிறந்த ஜனநாயகம் மலரும் இதுவே ஒவ்வொரு இந்தியர்களதும் கனவாகவும் இருக்கும்.

முடிவுரை

எண்ணம் போல் வாழ்க்கை என்று கூறுவார்கள். அது போல ஒவ்வொரு பிரஜைகளும் என்ன எண்ணம் உடையவர்களோ அது போலவே தேசமும் காணப்படும்.

1.366 பில்லியன் இந்தியர்கள் சேர்ந்தே இந்த தேசத்தை கட்டமைக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒருமித்து ஆளுமை மிக்க தலைவர்களை தெரிவு செய்தால் உலக அரங்கில் இந்தியா வெற்றிகரமான நாடாக இருக்கும் என்பதில் ஜயமில்லை.

You May Also Like :

விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை

சமூக வலைத்தளங்கள் பற்றிய கட்டுரை