Table of Contents
அறிமுகம்
மக்கள் தொடக்கக் காலத்தில் வாயில் வந்தபடி இசைத்துப் பாடினார்கள். நாளடைவில் வாழ்க்கை முறைகளையும், பல அறிவுரைகளையும் அமைத்துப் பாட்டு எழுதலாயினர். இலக்கியம் எனப்படும் இதுதான் இயல் ஆகும்.
பின்னர், இயல் தமிழை எவ்வாறு எழுதல் வேண்டும் என இலக்கணம் வகுத்தனர். இலக்கணமும் இயல் தமிழைச் சேர்ந்ததுதான். இந்த இயல் தமிழை மூன்றாவதாகக் கொள்ளலாம்.
இயல் என்றால் என்ன
முத்தமிழிலே இயல் எனப்படுவது யாது என நோக்குமிடத்து செய்யுள் உள்ளிட்ட எழுத்து வடிவங்கள் எல்லாம் ஆகும். இவை அறிவிற்கு விருந்தாக அமையக்கூடியது.
இயல் என்னும் தமிழ், இயல்பாகப் பேசப்படுவதும் எழுதப்படுவதுமாகிய தமிழை இயல் என்கிறோம்.
இயற்றமிழ் என்றால் என்ன
இயற்றமிழ் (இயல் தமிழ்) இயல்பாகப் பேசும் தமிழ் எனவும், இசைத்தமிழ் என்பது பண்ணிசைத்துப் பாடும் தமிழ் எனவும், கூத்து ஆடிப் பாடும் தமிழ் எனவும் அழைக்கப்படுகிறது. சொல்லக்கருதிய கருத்துக்களைக் கேட்போர், விரும்பியேற்றுக் கொள்ளும் படி, இனிய ஓசையோடு கூடிய சொற்களாற் புலப்படுத்துவது இசைத்தமிழ் ஆகும்.
முத்தமிழ் என மூன்று பகுதிகள் உடையதாகச் சொல்லப்படும் பரந்த, விரிந்த பெருமை தமிழ் மொழிக்கு உண்டு. அந்த வகையில் முத்தமிழ் என்ற கோட்பாட்டின் உள்ளடக்கமே இயல், இசை, நாடகம் எனும் மூன்றாகும்.
“இயற்றமிழ் என்பது தமிழர் யாவர் மாட்டும் பொதுவாகச் செய்யுள் வழக்கு உலக வழக்கு என்கிற இருவகை வழக்கிலும் இயங்குகின்ற வசனமும் செய்யுளுமாகும் நூற்களின் தொகுதியாகும்” என்பது பரிதிமாற் கலைஞரின் இயற்றமிழ் பற்றிய விளக்கமாகும்.
இயற்றமிழ் மூலம் மக்கள் அறிந்து கொண்ட ஒழுகலாறுகளை அனுபவங்களை உயிராய் நின்று இசையைச் செய்வது இசைத் தமிழ் என்பர்.
சங்க இலக்கியங்கள்
சங்க இலக்கியங்களை அகம், புறம் என்று இரண்டாகப் பிரிப்பர். காதலைப் பற்றிப் பாடும் பாடல்களை அகம் என்றும், காதல் தவிர, பிற செய்திகளைப் பாடும் பாடல்களைப் புறம் என்றும் கூறுவர்.
எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் கொண்ட சங்க இலக்கியம் நமக்குக் கிடைத்த மூத்த இலக்கியம். சங்கமருவிய காலத்தில் எழுதப்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் சங்ககால இலக்கியங்கள் எனக் கருதப்படுவது உண்டு. பண்டைய அறிஞர்கள் இதைச் ‘சான்றோர் செய்யுள்’ என்றனர்.
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநாநூறு, புறநாநூறு ஆகியவை யாவும் எட்டுத்தொகையின் கீழ் வரும் நூல்கள் ஆகும்.
திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகிய நூல்கள் பத்துப்பாட்டு எனக் குறிப்பிடப்படுகின்றது.
சங்க இலக்கியங்களில் சொல்லாத கருத்துக்களே இல்லை எனலாம். அறம், அன்பு, வீரம், கொடை, வாழ்வியல் விழுமியங்கள், கல்வி, சான்றோர்கள் பற்றிய சிந்தனை என அனைத்தையும் உள்ளடக்கிய சங்க இலக்கியங்கள் காலத்தைப் பிரதிபலிப்பனவாக மக்களின் பண்பாட்டை வெளிப்படுத்தக் கூடியனவாகத் திகழ்கின்றன.
சங்க இலக்கியங்களில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2361 பாடல்களைக் கொண்டுள்ளது. தமிழ் மொழிக்கு செம்மொழி எனும் பெருமையைத் தேடித் தந்தவை சங்க இலக்கியங்களே ஆகும்.
சங்க இலக்கியப் பாடல்களில் இயற்கை வர்ணனைகள் மற்றும் பறவைகள், விலங்குகள், செடிகள், கொடிகள், ஆறுகள், மலைகள் போன்றவைகள் பாடல்களில் இடம்பெறுவதனைக் காணலாம்.
தமிழர்களுக்கென வரலாறு, இலக்கியம், பெருமை உண்டு என உலக அரங்கில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டதற்கு ஆதாரமாய் சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன என்றால் அதுமிகையல்ல.
You May Also Like : |
---|
இலக்கியம் என்றால் என்ன |
சங்க இலக்கியத்தின் சிறப்புகள் |