இயற்கை வளங்கள் என்றால் என்ன

iyarkai valangal enral enna in tamil

அறிமுகம்

உயிர்கள் படைக்கப்பட்டபோதே, அவற்றின் வாழ்வுக்காக இயற்கை வளங்களும் சேர்த்தே படைக்கப்பட்டுள்ளன. இப்பூமியானது இயற்கையின் கொடைகளால் நிறைந்துள்ளது. ஆனால் அவை அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுவதில்லை.

இதன் காரணமாகவே வளம் செறிந்த பகுதி மனிதன் அதிகம் வாழும் பகுதியாகவும், மற்றைய பகுதி மனிதன் அதிகம் குடிபோகாத பகுதியாகவும் இருக்கின்றன. இந்த வேறுபாட்டை சமநிலைப்படுத்தும் ஏற்பாடுகளை மனிதன் செய்யத் தொடங்கியதே வியாபாரம் என்னும் மனித கலாச்சாரத்தின் வர்த்தக நடவடிக்கையின் ஆரம்பம் ஆகும்.

எரிவாயு மற்றும் எரிபொருள் உள்ள நாடுகள் மீது போர்செய்து தம்வசப்படுத்தும் நிகழ்வுகளும் நடந்தேறியுள்ளது.

இயற்கை வளங்கள் என்றால் என்ன

இயற்கை வளங்கள் என்றால் என்ன

இயற்கையிலிருந்து கிடைக்கப்பெறும் வளங்கள் இயற்கை வளங்களாகும். மேலும் இயற்கையில் காணப்படுவதும் மனித குலத்திற்குப் பயன்படுவதுமான கூறுகள் இயற்கை வளங்கள் எனலாம்.

இவை மனிதத் தலையீடுகளின்றித் தன் இயல்பு நிலையில் சூழல் தொகுதிகளில் காணப்படும் பொருட்கள் ஆகும்.

இயற்கை வளங்களுக்கு எடுத்துக்காட்டாக வனவியல் மற்றும் விவசாய காடுகள், நீர், கடல்கள், ஏரிகள் மற்றும் ஆறுகள், குளங்கள், மலைகள், பெட்ரோலியப் பொருட்கள், சூரிய ஒளி, கனிம வளங்கள் போன்றவற்றை கூறலாம்.

இயற்கை வளங்களின் பயன்கள்

காற்று, நீர், சூரிய ஒளி, மரம், கரி, மணல் என மக்களுக்கு பயன்படும் இயற்கை வளத்தின் பயன்கள் எண்ணிலடங்காதவை. இயற்கை வளங்கள் மனிதகுலத்தின் இருப்பை பராமரிப்பது மட்டுமல்லாமல், வாழ்க்கைத் தரத்தில் படிப்படியான முன்னேற்றத்தையும் உறுதி செய்கின்றன. இயற்கை வளங்கள் வாழ்க்கைக்கு அடிப்படையான ஒன்று ஆகும்.

இயற்கை வளங்கள் மிகவும் பயனுள்ள வளங்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டியது அவசியம். மனிதன் உயிர்வாழ்வதற்கு மட்டுமன்றி உறைவிடம், உணவு போன்ற அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும் இயற்கையே மனிதனுக்கு உதவுகின்றது.

இயற்கை வளங்களின் சீரழிவு

சமீப காலங்களாக இயற்கை வளங்களுக்குப் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. நிலம், நீர் ஆகிய இரண்டுமே அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன.

மனித தேவைகளுக்காகவும், மனிதனின் பேராசைக்கும் இயற்கையை சுரண்டும் போக்கு அதிகமாக தொடர்ந்து இடம்பெற்ற வண்ணமே உள்ளன.

இயற்கைக்கு மாறாக இடம்பெற்றுவரும் நகரமயமாதல், மக்கள் தொகை பெருக்கம், தொழில்மயமாக்கல் போன்ற காரணங்களால் மாசுபட்ட நீர் நிலைகள் வறண்டு அசுத்தமான காற்று, தண்ணீர்ப் பெருக்க அழிவு என இயற்கை வளங்கள் அழிவடைந்தும், பாதிப்புக்குள்ளாகியும் வருகின்றன.

நாம் சுவாசிக்கும் காற்றும் மாசு பட்டிருப்பது அபாயகரமானது. தொழிற்சாலைகளில் இருந்து கரியமில வாயுக்கள் வெளிப்பட்டு வான் மண்டலத்தையும் பாதித்து ஓசோன் படலத்தை ஓட்டையாக்குகிறது.

இயற்கை வளங்களின் பாதுகாப்பு

இயற்கை வளங்களை பாதுகாப்பது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரின் கடமையாகும். இயற்கை வளங்களை பாதுகாத்தல், இயற்கை வளங்களின் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, ஆண்டுதோறும் ஜூலை 28-ந் தேதி “உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம்” கடைப்பிடிக்கப்படுகிறது.

இயற்கை இன்றி மனிதனால் வாழ இயலாது. மனிதகுல வாழ்வே இயற்கையை நம்பித்தான் இருக்கின்றது என்பதே நிதர்சன உண்மையாகும்.

இத்தகைய இயற்கையை பாதுகாத்து பேணினால் மனித தேவையும் பூர்த்தியாகும் என்பதனை உணர்ந்து இயற்கை வளத்தை பாதுகாப்போம்.

You May Also Like :
இயற்கை வளம் காப்போம் கட்டுரை
மரம் இயற்கையின் வரம் கட்டுரை